Mar 19, 2021 12:36 PM

’காதம்பரி’ விமர்சனம்

ab4ccd0dd9e26cf1b2abbcf95a3d278b.jpg

Casting : Arul,Kaashima Rafi, Akila narayanan, Sarjun, Ninmy, Poositha, Maharajan, Muruganandham

Directed By : Arul

Music By : Prithvi

Produced By : Aroma Studios - Arul

 

அறிமுக இயக்குநர் அருள் இயக்கி தயாரித்திருப்பதோடு ஹீரோவாகவும் நடித்திருக்கும் படம் ‘காதம்பரி’. வித்தியாசமான திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் காஷிமா ரஃபி, அகிலா நாராயணன்ன், சர்ஜுன், நின்மி, பூஷிதா, மகராஜன், முருகானந்தம் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

ஹீரோ அருள் மற்றும் அவரது நண்பர்கள் டாக்குமெண்டரி படப்பிடிப்புக்காக காட்டுப் பகுதிக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது, அவர்களுடைய கார் விபத்துக்குள்ளாகி விடுகிறது. சிறிய காயங்களுடன் நடுகாட்டில் சிக்கிக் கொள்ளும் நண்பர்கள், அந்த காட்டில் இருக்கும் வீடு ஒன்றுக்கு செல்லும் போது, அங்கு வாய் பேச முடியாத பெரியவர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் உதவி கேட்டு அந்த வீட்டில் தங்குகிறார்கள். வாய் பேச முடியாத பெரியவரின் செயல்கள் விசித்திரமாக இருப்பதோடு, அந்த வீட்டில் இருக்கும் சில பொருட்களும் விசித்திரமாக இருக்க, அது குறித்து நண்பர்கள் ஆராயும் போது, அறை ஒன்றில் இருக்கும் மரப்பெட்டியில் சிறுமி ஒருவர் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். அந்த சிறுமியை காப்பாற்றும் நண்பர்கள், அதன் மூலம் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்ள, அதில் இருந்து தப்பித்தார்களா?, அந்த சிறுமி யார்?, சிறுமியை பெரியவர் அடைத்து வைத்தது எதனால்? போன்ற கேள்விகளுக்கான விடை தான் படத்தின் கதை.

 

பேய் படங்கள் என்றாலே திகில் காட்சிகளை விட நகைச்சுவை காட்சிகள் அதிகமாக இருப்பது தான், தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்ட் என்றாலும், அதை முற்றிலும் தவிர்த்துவிட்டு, ரசிகர்களை பதற்றத்துடனும், பயத்துடனும் முழுப்படத்தையும் பார்க்க வைக்கும் அளவுக்கு முழுமையான திகில் படமாக உள்ளது.

 

ஹீரோவாக நடித்திருக்கும் அருள், அவரது காதலியாக நடித்திருக்கும் காஷிமா ரஃபி, தங்கையாக நடித்திருக்கும் அகிலா நாராயணன், அகிலாவின் காதலனாக நடித்திருக்கும் சர்ஜுன், மற்றொரு தோழியான நின்மி ஆகியோர் புதிய முகங்களாக இருந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

 

அனாமிகா வேடத்தில் நடித்திருக்கும் சிறுமி பூஷிதா, சிறு சிறு எக்ஸ்பிரஷன்கள் மூலமாகவே பயமுறுத்துகிறார். பேச முடியாத வயாதானவர் வேடத்தில் நடித்திருக்கும் மகாராஜனின் கதாப்பாத்திரமும், அவரது நடிப்பும் கவனிக்க வைக்கிறது. போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் முருகானந்தம் கிளைமாக்ஸில் படம் வேகமாக நகர உதவியிருக்கிறார்.

 

வி.டி.கே.உதயனின் கேமரா ஒரே வீட்டில் வலம் வந்தாலும், கோணங்களில் வித்தியாசத்தை காட்டியிருப்பதோடு, திகில் காட்சிகளை படபடப்போடு பார்க்க வைக்கிறது. 

 

படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் பின்னணி இசை மூலம் பலம் சேர்த்திருக்கும் இசையமைப்பாளர் பிரித்வி, பல இடங்களில் அடக்கி வாசித்தாலும், படம் பார்ப்பவர்களை அலறவிடுகிறார்.

 

படத்தை இயக்கி தயாரித்திருக்கும் அருள், தான் சொல்ல வந்ததை நேர்த்தியாக சொல்லியிருப்பதோடு, ரொம்ப சுறுக்கமாக சொல்லியிருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.

 

பேய் படங்கள் என்றாலே பிளாஷ்பேக் ஒன்று நிச்சயம் இருக்கும், என்ற வழக்கத்தை உடைத்து, திகில் நாவலை படிப்பது போன்ற அனுபவத்தை கொடுக்கும் விதமாக திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் அருள், தயாரிப்பாளராக பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு காட்சிகளை கையாண்டிருந்தாலும், பேயின் பின்னணி குறித்த ட்விஸ்ட்டை படம் முழுவதும் கொண்டு சென்று, படத்தை வேகமாக நகர்த்துகிறார்.

 

தொழில்நுட்ப ரீதியாக படத்தில் சிறு சிறு குறைகள் இருந்தாலும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் அருள் ‘காதம்பரி’ யை கையாண்ட விதம் கனகச்சிதமாக உள்ளது.

 

‘காதம்பரி’ பயம்

 

ரேட்டிங் 3/5