Nov 19, 2021 11:36 AM

’கடைசீல பிரியாணி’ விமர்சனம்

74c623c430474e1b6a83313bc69792f7.jpg

Casting : Vasanth Selvam, Vijay Ram, Dinesh Mani, Hakkim Shahjahan

Directed By : Nishanth Kalidindi

Music By : Judah Paul, Neil Sebastian and Vinoth Thanigasalam

Produced By : S.Sashikanth, Chakravarthy Ramachandra, Nishanth Kalidindi

 

கதை எப்படி இருந்தாலும், திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் ரசிக்கும்படி இருந்தால், அந்த படம் ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படமாகிறது. அந்த யுக்தியை சரியாக கையாண்ட இயக்குநர்கள் பலர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் இடம் பிடிப்பதற்காக ஒரு சாதாரண பழிவாங்கும் கதையை, வித்தியாசமான முறையில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் நிஷாந்த் களிதிண்டி.

 

தங்களது அப்பாவை கொலை செய்த ரப்பர் எஸ்டேட் அதிபரை கொலை செய்வதற்காக தமிழகத்தை சேர்ந்த மூன்று சகோதர்கள் கேரளாவுக்கு செல்கிறார்கள். கேரள ரப்பர் எஸ்டேட் ஒன்றில் இருக்கும் எஸ்டேட் அதிபரை கண்டுபிடித்து கொலை செய்துவிட்டு திரும்பும் மூன்று சகோதரர்களின் வாழ்வில் விதி விளையாடுகிறது. அதனை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் தான் ’கடைசீல பிரியாணி’.

 

மூன்று சகோதர்களில் மூத்தவர் வேடத்தில் நடித்திருக்கும் வசந்த் செல்வம், படத்தின் முதல் பாதி முழுவதும் தனதாக்கிக் கொள்கிறார். ரப்பர் எஸ்டேட் அதிபரை தேடுவது முதல், அவரை கொலை செய்யும் காட்சி அவரை, தனது பழிவாங்கும் உணர்ச்சியை பலவிதமாக வெளிப்படுத்தி நடிப்பில் அசத்துகிறார். 

 

இரண்டாவது சகோதரராக நடித்திருக்கும் தினேஷ் மணிக்கு வேலை குறைவு தான் என்றாலும், அதில் எந்த குறையும் வைக்காமல் நடித்திருக்கிறார்.

 

மூன்றாவது சகோதரரான விஜய் ராம், முதல் பாதியில் அண்ணன்களின் பேச்சை கேட்கும் சிறுவனாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் கதையின் நாயகனாக உருவெடுத்து அசத்துகிறார். ஒரு பக்கம் போலீஸ், மறுபக்கம் வில்லன் கோஷ்ட்டி என்று தப்பிப்பதற்காக ஓடிக்கொண்டிருப்பவர், வழியில் எலுமிச்சை சோடா குடிக்க முயற்சிக்கும் காட்சியில், தனது இயல்பான நடிப்பின் மூலம் ஒட்டு மொத்த திரையரங்கையே குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறார்.

 

ரப்பர் எஸ்டேட் அதிபரின் மகனாக நடித்திருக்கும் ஹக்கிம் ஷாஜாகான், பார்ப்பதற்கு மெடிக்கல் ரெப் போல இருந்தாலும், தனது கொடூரமான நடிப்பினால் பயமுறுத்துகிறார். அவருடைய தெனாவாட்டான பார்வையும், சைக்கோத்தனமான நடிப்பும் கவனிக்க வைக்கிறது.

 

ஹெஸ்டின் ஜோஸ் ஜோசப் மற்றும் அஷீம் மொஹமத் ஆகியோரின் ஒளிப்பதிவு கேரளாவின் அழகை பிரமாண்டமாக காட்டியுள்ளது. இரவு காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர்கள் சாதாரண காட்சிகளை கூட தங்களது கோணம் மூலம் கவனிக்க வைக்கிறார்கள்.

 

வினோத் தணிகாசலத்தின் பின்னணி இசை அளவு. பாடல்கள் மற்றும் கூடுதல் இசையமைத்துள்ள ஜுடா பவுல் மற்றும் நீல் செபஸ்டியன் ஆகியோரது பணி காட்சிகளுக்கு பலம் சேர்த்துள்ளது.

 

ஒரு குறிப்பிட்ட லொக்கேஷனில், சில குறிப்பிட்ட கதாப்பாத்திரங்களை வைத்துக்கொண்டு, பரபரப்பான காட்சிகளோடு, சாதாரண கதையை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் நிஷாந்த் களிதிண்டி, விதியின் விளையாட்டு மூலம் திரைக்கதையில் திடீர் திருப்புமுனையை ஏற்படுத்தி திரைப்படத்தை மட்டும் இன்றி, படம் பார்ப்பவர்களையும் திக்குமுக்காட வைத்துவிடுகிறார்.

 

படம் சீரியஸாக நகரும் போது, பிளாக் காமெடி என்ற பெயரில் காட்டப்படும் காட்சிகளும், வசனங்களும் அறுவறுப்பாக இருக்கிறது.

 

காட்சிகளை படமாக்கிய விதம், கதை நடக்கும் களம், நடிகர்களின் நடிப்பு ஆகியவை படத்தை ரசிக்க வைத்தாலும், முழு திரைப்படமாக பார்க்கும் போது ருசியில்லாத உணவாகவே இருக்கிறது இந்த ‘கடைசீல பிரியாணி’.

 

ரேட்டிங் 2.5/5