‘கடத்தல்’ திரைப்பட விமர்சனம்
Casting : MR Damodhar, Vithisha, Ria, Sudha, Nizhalgal Ravi, Singam Puli, Thamizhvanan, R.Jayachandran, Ravikanth, Aadhi Venkatachalam, Ka.Sabapathi, Santhosh, Mohan, Reddy, Master Dharun, Praveen
Directed By : Salangai Durai
Music By : M.Srikanth
Produced By : South Indian Productions - Sengodan Duraisamy
தென்காசியை சேர்ந்த பனைமர தொழிலாளியான நாயகன் எம்.ஆர்.தாமோதர் தனது நண்பரை சந்திப்பதற்காக ஓசுருக்கு வருகிறார். வந்த இடத்தில், பணத்திற்காக கடத்தப்பட்ட குழந்தையை கடத்தல்காரர்களிடம் இருந்து நாயகனும், அவரது நண்பரும் மீட்கிறார்கள். மீட்கப்பட்ட குழந்தையை பெற்றோரிடம் சேர்ப்பதற்கான முயறிசியில் இருவரும் ஈடுபடுகிறார்கள். இதற்கிடையே, மதுரையை சேர்ந்த மிகப்பெரிய ரவுடி தனது தம்பியின் கொலைக்கு பழி தீர்க்க நாயகனை துரத்துகிறார். உண்மையில் நாயகன் தாமோதர் யார்?, அவரை மதுரை ரவுடி துரத்துவது ஏன்?, கடத்தல்காரர்களிடம் இருந்து காப்பாற்றிய குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தாரா? இல்லையா? என்பது தான் ‘கடத்தல்’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் எம்.ஆர்.தாமோதர், ஆக்ஷன் கதைக்கான சரியான தேர்வாக இருப்பதோடு, முதல் படம் போல் அல்லாமல் ஆக்ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். அம்மா செண்டிமெண்ட் காட்சிகளில் அசத்தலாக நடித்திருப்பவர் காதல் காட்சிகளில் மட்டும் சற்று தடுமாறியிருக்கிறார்.
கதாநாயகிகளாக நடித்திருக்கும் விதிஷா,ரியா இருவருக்கும் வழக்கமான கதாநாயகி வேடம் தான் என்றாலும் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
சுதா, நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ் வாணன், ஆர்.ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாச்சலம், க.சபாபதி , சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ராஜ் செல்வாவின் ஒளிப்பதிவும், எம்.ஸ்ரீகாந்தின் இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
வழக்கமான கமர்ஷியல் ஆக்ஷன் மசாலா பாணி கதை தான் என்றாலும் அதை வேறு மாதிரியாக கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் சலங்கை துரை, இரண்டு வெவ்வேறு கதைகளை ஒரே நேர்கோட்டில் விறுவிறுப்பாக பயணிக்க வைத்திருக்கிறார்.
கடத்தல்காரர்களால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தை, நண்பர்களின் நம்பிக்கை துரோகத்தால் தாயை இழந்து தவிக்கும் நாயகன், இருவரின் பயணத்தை பரபரப்பான காட்சிகளோடும், அதிரடியான ஆக்ஷனோடும் சொல்லியிருக்கும் இயக்குநர் சலங்கை துரை, படத்தை கமர்ஷியலாக இயக்கினாலும் மனைமர தொழிலாளர்களின் வலிகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பதிவு செய்து கவனம் ஈர்க்கிறார்.
பொருளாதார ரீதியாக படத்தின் மேக்கிங்கில் சில குறைகள் இருந்தாலும், இரண்டு மணி நேரத்தை வேகமாக கடத்தும் வகையில் வேகமாக பயணிக்கும் இந்த ‘கடத்தல்’ மசாலா பட விரும்பிகளுக்கு ஏற்ற விருந்து.
ரேட்டிங் 2.5/5