‘காதலிக்க நேரமில்லை’ திரைப்பட விமர்சனம்
Casting : Nithya Menon, Ravi Mohan, TJ Banu, Vinay Roy, Yogi Babu, Lal, Singer Mano, Lakshmi Ramakrishnan, Vinothini
Directed By : Kiruthiga Udhayanithi
Music By : A R Rahman
Produced By : Red Giant Movies Pvt Ltd
குழந்தை வளர்ப்பு என்ற அர்ப்பணிப்பில் தன்னை இணைத்துக் கொள்ள விரும்பாத நாயகன் ரவி மோகன், திருமணம் செய்துக்கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். திருமணம் செய்துக் கொண்டு உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் நாயகி நித்யா மேனன், தன் காதலன் செய்த துரோகத்தால் திருமணத்தை நிறுத்தினாலும், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்.
குழந்தை பெற்றுக்கொள்ள கூடாது என்ற தனது முடிவால் காதலியை பிரிந்த ஜெயம் ரவியும், துரோகத்தால் ஆண்களை வெறுத்தாலும் குழந்தை முக்கியம் என்று நினைத்த நித்யா மேனனும், சந்தர்ப்ப சூழ்நிலையால் சந்திக்கிறார்கள். இவர்களது நட்பு, இவர்களின் மனநிலையை மாற்றுவதோடு, உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் அதற்கு திருமணம் என்ற சம்பிரதாயம் தேவையே இல்லை, என்பதை மக்களுக்கு புரிய வைப்பது தான் ‘காதலிக்க நேரமில்லை.
நாயகியாக நடித்திருக்கும் நித்யா மேனன், பலமான கதாபாத்திரத்தை மிக சாதாரணமாக கையாண்டிருக்கிறார். சிங்கிள் மதராக வரும் காட்சிகளில் எப்படிப்பட்ட காட்சிகளாக இருந்தாலும் அதை இயல்பாக கையாண்டு ரசிக்க வைத்துவிடுகிறார்.
காதலை வேறு ஒரு மொழியில் சொல்லக்கூடிய திரைக்கதைக்கு ரவி மோகனின் திரை இருப்பு கூடுதல் பலம் கொடுத்திருக்கிறது. எமோஷனலான காதல் காட்சிகள், சிறுவன் உடனான நட்புறவு ஆகியவற்றில் தனது நடிப்பு மூலம் ஸ்கோர் செய்திருக்கும் ரவி மோகன், பார்வையாளர்களை மயில் இறகால் வருடுவது போல் நடித்திருக்கிறார்.
யோகி பாபு வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் வினய் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். டிஜே பானு, லால், பாடகர் மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி என அனைவரும் அளவான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் பல்வேறு ரகங்களில் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. பின்னணி இசை கதைக்களத்திற்கு ஏற்ப மென்மையாக பயணிக்கிறது.
ஒளிப்பதிவாளர் கேவ்மிக் ஆரி, கலர்புல்லான விளம்பர படங்களை பார்ப்பது போல் அனைத்துக் காட்சிகளையும் பளிச்சென்று படமாக்கியிருக்கிறார். அவர் கேட்டதை விட கூடுதல் வசதிகளை தயாரிப்பாளர் செய்துக் கொடுத்திருப்பார் போலியிருக்கு, அந்த அளவுக்கு படத்தை பளபளப்பாக பட்டை தீட்டியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர் இயக்குநரின் எழுத்தையும், கருத்தையும் எந்தவித நெருடல் இல்லாமல் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ளும்படியும், புரியும்படியும் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் கிருத்திகா உதயநிதி, பெண்ணியம் பேசாத பெண்களுக்கான ஒரு படத்தை ஆண்களும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.
மக்கள் வாழ தகுதியில்லாத உலகத்தில், எதற்கு குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும்? என்ற நாயகனின் கேள்விக்கு, குழந்தை உடன் நட்பு பாராட்டும் காட்சிகளின் மூலம் பதிலளித்திருப்பவர், தைரியமான மனநிலை கொண்ட சிங்கிள் மதர்கள் புரிந்துக்கொள்ள வேண்டிய எதார்த்தமான வாழ்க்கையையும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ரவி மோகன் - நித்யா மேனன் இருவருக்குமான கெமிஸ்ட்ரி மற்றும் சிறுவன் உடனான ரவி மோகனின் நட்பு ஆகியவை திரைக்கதையை எந்தவித தொய்வின்றி நகர்த்திச் செல்வதோடு, வசனக் காட்சிகளையும் ரசிக்க வைத்துவிடுகிறது.
படத்தில் தன்பாலின உறவு பற்றி பேசுவதோடு, தன்பாலின திருமணத்தை காட்சிப்படுத்திய இயக்குநர் கிருத்திகா உதயநிதி, செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக்கொண்டாலும், அதற்கு காரணமானவர் ரவி மோகன் என்ற உண்மையை கதாபாத்திரங்கள் தெரிந்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருந்தும், அதை தவிர்த்துவிட்டு உறவுகளின் முக்கியத்துவத்தை அழுத்தமாக பதிவு செய்யும்படி படத்தை முடித்து பாராட்டு பெறுகிறார். இயக்குநர் கிருத்திக உதயநிதிக்கு சிறந்த இயக்குநருக்கான விருது உறுதி.
மொத்தத்தில், ’காதலிக்க நேரமில்லை’ மக்கள் மனதில் இடம் பிடிக்கும்.
ரேட்டிங் 3.8/5