’காடுவெட்டி’ திரைப்பட விமர்சனம்
Casting : RK Suresh, Sangeerthana Vipin, Jayam SK Gopi, Aadhira Pandilakshmi, Aadukalam Murugadoss, Vismaya Viswanth, Santhi Mani, Subramaniam Shiva, Akilan
Directed By : Solai Arumugam
Music By : Vanakkam Tamizha Sadikq
Produced By : Solai Arumugam, N. Subash Chandrabose, N. Mahendran
சாமிப்புள்ள என்ற பின்னணி கோஷத்தோடு வலம் வரும் நாயகன் ஆர்.கே.சுரேஷ், ”பெண்ணை தொட்டா வந்து நிற்பேண்டா...” என்று சொல்லிக்கொண்டு அடிதடியில் ஈடுபடுகிறார், ஊர் மக்களுக்கு உதவி செய்கிறார், காதல் தொல்லை கொடுக்கும் இளைஞர்களை வெட்டச் சொல்லி பெண்களிடம் அருவாள் கொடுக்கிறார், அரசியல் தலைவருடன் இணைந்து போராட்டம், ஆர்பாட்டத்தில் ஈடுபடுகிறார், அவ்வபோது சிறைக்கு செல்கிறார், திரும்பி வந்து கொலைகள் செய்துவிட்டு மீண்டும் சிறைக்கு செல்கிறார்.
இதற்கிடையே, தெருக்கூத்து கலைஞரான சுப்பிரமணிய சிவாவின் மகள் வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவரை காதலித்துவிட்டதால், அவரை ஊர் வழக்கப்படி கொலை செய்துவிடுமாறும், இல்லை என்றால் அவள் தனக்கு பிறக்கவில்லை என்று சொல்லுமாறும், பஞ்சாயத்து வற்புறுத்துகிறது. பஞ்சாயாத்துக்கு கட்டுப்பட்டு பெற்ற மகளை சுப்பிரமணிய சிவா கொலை செய்தாரா?, “பெண்ணை தொட்டா வருவேன்...” என்று சொல்லும் ஆர்.கே.சுரேஷ், இந்த பெண் விசயத்தில் என்ன செய்தார்? என்பது தான் ‘காடுவெட்டி’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடித்து தன்னை நல்ல நடிகராக அடையாளப்படுத்திக் கொண்டார். ஆனால், ஹீரோவாக நடிக்க தொடங்கியதில் இருந்து, கதை தேர்விலும், நடிப்பிலும் தடுமாறி வருகிறார். அந்த வகையில், இந்த படத்திலும் அதே தடுமாற்றத்துடன் தலைகாட்டுகிறார்.
தெருக்கூத்து கலைஞராக நடித்திருக்கும் சுப்பிரமணி சிவா, சாதி பெருமை பேசும் மக்களால், பெற்ற பிள்ளைகளை பறிகொடுக்கும் பெற்றோர்களை பிரதிபலிக்கும் வேடத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார்.
ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா பாண்டிலட்சுமி, விஷ்மயா விஷ்வாந்த், சாந்தி மாறன், சுப்பிரமணியம், அகிலன், சுபாஷ் சந்திரபோஸ், ஜெயம் எஸ்.கே,கோபி, சங்கீர்த்தனா விபின் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
வணக்கம் தமிழா சாதிக்கின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். எம்.புகழேந்தியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
நாடக காதலை மையக்கருவாக கொண்டு கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சோலை ஆறுமுகம், தமிழ்நாட்டில் நடந்த ஆணவக் கொலை சம்பவத்தை வேறுமாதிரியாக சித்தரித்து காட்சிப்படுத்திய விதம் அவரிடம் இருக்கும் வன்மத்தை வெளிக்காட்டியிருக்கிறது.
வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் காதலித்தால் அதை நாடக காதல் என்று சொல்பவர்கள், அதற்கான விளக்கத்தை விரிவாகவும், தெளிவாகவும் சொல்லியிருக்கலாம். ஆனால், அதைவிட்டுவிட்டு தட்பெருமை பேசிக்கொண்டு, மற்றவர்களை இழிவாக சித்தரித்து, தவறான கருத்துக்களையும், காட்சிகளையும் திணித்திருக்கிறார்கள்.
மொத்தத்தில், இந்த ‘காடுவெட்டி’ தன் சமூகத்தின் பெருமை பேசுகிறேன் என்ற பெயரில் அச்சமூக மக்களை சிறுமைப்படுத்தியிருக்கிறது.
ரேட்டிங் 2/5