‘களவு தொழிற்சலை’ விமர்சனம்
Casting : கதிர், வம்சி கிருஷ்ணா, குஷி, மு.களஞ்சியம், செந்தில்
Directed By : தி.கிருஷ்ணஷாமி
Music By : ஷாம் பெஞ்சமின்
Produced By : எம்.ஜி.கே மூவி மேக்கர்ஸ் எஸ்.ரவிசங்கர்
எம்.ஜி.கே மூவி மேக்கர்ஸ் சார்பில் எஸ்.ரவிசங்கர் தயாரித்துள்ள இந்த ‘களவு தொழிற்சாலை’ சிலை கடத்தல் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
சர்வதேச அளவில் பழங்காலத்து சிலைகளை கடத்தி விற்கும் வம்சிகிருஷ்ணா, தனி ஒரு நபராக எப்படிப்பட்ட சிலையையும் தனது திட்டத்தால் கடத்தும் திறன் படைத்தவர். தமிழகத்தில் உள்ள பல முக்கிய சிலைகள் கடத்தப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருக்கும் இவரது முகம் போலீசுக்கு தெரியவில்லை என்றாலும், இவரை கைது செய்ய போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, தஞ்சாவூரில் உள்ள பழமை வாய்ந்த கோவில் ஒன்றில் இருக்கும் மரகத லிங்கத்தை கடத்த திட்டம் போடும் வம்சி கிருஷ்ணா, டிவி நிருபராக அக்கோயிலுக்குள் நுழைந்து வேவு பார்க்கிறார். பாதுகாப்பு அதிகமுள்ள அந்த கோயிலில் இருக்கும் மரகத லிங்கத்தை, கடத்த அந்த கோயிலில் இருக்கும் பழங்காலத்து சுரங்கத்தை பயன்படுத்த முடிவு செய்யும் வம்சி கிருஷ்ணா, தனக்கு உதவியாக உள்ளூர்வாசி ஒருவரை சேர்த்துக்கொள்ள முடிவு செய்கிறார். அதன்படி, அந்த ஊரில் பூஜைக்காக விநாயகர் சிலைகளை திருடும் கதிர் பற்றி அறிந்துக்கொள்ளும் வம்சி, கதிரை தன்னுடன் கூட்டு சேர்த்துக்கொள்ள, இருவரும் சேர்ந்து கோயில் சுரங்கத்திற்குள் நுழைகிறார்கள்.
கதிர் சுரங்கத்தில் நுழைந்து கோயிலை நோக்கி நகர, வம்சி கிருஷ்ணா சுரங்கத்தின் வாயிலில் அமர்ந்துக்கொண்டு, ஜி.பி.ஆர்.எஸ் மூலம் கதிர் எப்படி செல்ல வேண்டும், சிலை எப்படி எடுக்க வேண்டும் போன்ற தகவல்களை வீடியோவை பார்த்துக் கொடுத்துக்கொண்டிருக்க, சுரங்கத்தை கடந்து கோயிலை அடையும் போது, ஜி.பி.ஆர்.எஸ் கனெக்ஷன் துண்டிக்கப்பட்டு விடுகிறது. இதனால் கதிருக்கு மேற்கொண்டு தகவல் கொடுக்க முடியாமல் வம்சி கிருஷ்ணா தினற, வம்சியின் தொடர்பு இல்லாமல் கதிர் குழம்பிப்போக, அந்த மரகத லிங்கத்தை இருவரும் எடுத்தார்களா இல்லையா, அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் ’களவு தொழிற்சாலை’ படத்தின் மீதிக்கதை.
சர்வதேச சிலை கடத்தலை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் முதல் தமிழ் படம் இது தான் என்றாலும், சிலை கடத்தல் நெட்வொர்க் பற்றி காட்சிகள் மூலம் விரிவாக சொல்லாமல், ரொம்ப சுறுக்கமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் தி.கிருஷ்ணஷாமி.
சிலை கடத்தல்காரராக நடித்துள்ள வம்சி கிருஷ்ணா. படத்தின் வில்லன் என்றாலும், அவரது வழக்கமான வில்லத்தனத்தை காட்டாமல் படத்தின் நாயகனாக வலம் வருகிறார். மற்றொரு நாயகனாக நடித்துள்ள கதிர், விநாயகர் சிலையை திருடுவதை, திருட்டு என்று சொல்லாமல், பூஜைக்காக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சிப்ட் பண்ட்றேன், என்று வெகுளித்தனமாக சொல்லும் இடத்திலும், சிலை திருட்டில் போலீசிடம் சிக்கிக்கொண்டு கெஞ்சும் காட்சிகளிலும், தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
சிலை கடத்தல் வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி அதிகாரியாக வரும் இயக்குநர் மு.களஞ்சியம், கெட்டப்பில் போலீஸ் அதிகாரியாக பக்காவாக பொருந்தினாலும், நடிப்பில் பொருந்தாமல் போகிறார். விசாரணையிலும் சரி, மற்றவர்களிடம் பேசும் போதும் சரி, ரொம்ப அஸ்கியாக அவர் வசனம் பேசுவது, அவரது கதாபாத்திரத்திற்கு பலவீனமாக அமைந்துவிடுகிறது.
கதிருக்கு ஜோடியாக நடித்திருக்கும் குஷி, மேக்கப் மட்டும் அல்ல ஹீரோயின் என்ற எந்த ஒரு அடையாளமும் இல்லாமல், நம்ம பக்கத்து வீட்டு பெண் போல இயல்பாக இருப்பவர், நடிப்பிலும் இயல்பை வாரி இறைத்திருக்கிறார்.
காமெடிக்கு என்று செந்திலை சில காட்சிகளில் பயன்படுத்தியிருக்கும் இயக்குநர், அந்த வாய்ப்பை புதுமுக நடிகர்கள் யாருக்காவது கொடுத்திருந்தால், அந்த சில காட்சிகள் தப்பித்திருக்கும். செந்திலோ காமெடி என்ற பெயரில் நம்மை கண் கலங்க வைத்துவிடுகிறார்.
சிலை கடத்தல் எப்படி நடக்கிறது, கடத்திய சிலைகள் எப்படி வெளிநாடுகளுக்கு கொண்டுச் செல்லப்படுகிறது என்று விரிவாக எதையும் இயக்குநர் சொல்லவில்லை என்றாலும், கடத்தப்படும் சிலைகளால் தமிழகத்திற்கு எந்தமாதிரியான பாதிப்பு ஏற்படுகிறது என்பதை மத வேறுபாடு இல்லாமல் சொல்லியிருப்பவர், மரகத லிங்கத்தை பற்றி சில நிமிடங்கள் சொன்னாலும், ரொம்ப தெளிவாக சொல்லியிருக்கிறார்.
வம்சி கிருஷ்ணாவும், கதிரும் மரகத லிங்கத்தை திருட சுரங்கத்திற்குள் செல்லும் காட்சியும், அந்த சுரங்கத்தின் வடிமைப்பும் படத்தின் ஹைலைட். உண்மையான சுரங்கமாக இருக்குமோ, என்று நினைக்கும் வகையில் கலை இயக்குநர் முரளிராமின் வேலை ரொம்ப சிறப்பாக இருந்ததோடு, அந்த எப்பிசோட்டே, என்ன் நடக்க போகிறது? என்ற ரீதியில் ரசிகர்களை சற்று படபடப்பாக்கியதோடு, படத்தையும் விறுவிறுப்பாக நகர்த்துகிறது.
சிலையை திருடுவதற்காக சுரங்கத்திற்குள் போகும் கதிரின் தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன், என்ன நடக்கும்? என்ற எதிர்ப்பார்ப்பால் திரைக்கதையில் இருக்கும் விறுவிறுப்பு, அதன் பிறகு சிலை கடத்தல் குறித்து விசாரணை நடத்தும் மு.களஞ்சியத்தின் எப்பிசோட்டில் இல்லாமல் போவது படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்துவிடுகிறது.
ஒளிப்பதிவாளர் வி.தியாகராஜன் தனது கேமரா மூலம் பழங்காலத்து கோயில்களின் பிரமமண்டத்தை அப்படியே கண் முன் நிறுத்துவதோடு, சிலை கடத்தல் காட்சியில் லைடிங்கில் மிரட்டவும் செய்திருக்கிறார். பாடல்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை என்ற கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு பின்னணி இசை மிகப்பெரிய பலமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அறிமுக இசையமைப்பாளர் ஷாம் பெஞ்சமின், 10 சதவீதம் கூட இப்படத்திற்கான பின்னணி இசையை கொடுக்கவில்லை.
மேடை கச்சேரிகளில் இசைக் குழுவை அறிமுகப்படுத்தும் போது வாசிக்கப்படும் இசையை படம் முழுவதுமே போட்டிருக்கும் ஷாம் பெஞ்சமின், பின்னணி இசையில் மிரட்டியிருக்க வேண்டிய அத்தனை இடங்களிலும் பெரிய அளவில் கோட்டைவிட்டிருக்கிறார்.
படத்தின் முதல் பாதியை சுவாரஸ்யமாக நகர்த்தும் இயக்குநர் தி.கிருஷ்ணஷாமி, இரண்டாம் பாதியில் எந்தவித திருப்புமுனையும் இல்லாமல் திரைக்கதையை சாதாரணமாக நகர்த்தியிருக்கிறார்.
கதைக்களம் புதிது தான் என்றாலும், அதை கையாண்ட விதத்தில் இயக்குநர் சற்று தடுமாறியிருக்கிறார். இருந்தாலும் தான் சொல்ல வந்ததை தன்னால் முடிந்தவரை நேர்த்தியாக இயக்குநர் கிருஷ்ணஷாமி சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில், இந்த களவு தொழிற்சாலை ஒரு முறை பார்க்கலாம், என்ற ரகத்தை சேர்ந்த படமாக உள்ளது.
ஜெ.சுகுமார்