Jun 27, 2024 07:59 PM

’கல்கி 2898 கி.பி’ திரைப்பட விமர்சனம்

c178a238ba0ceab1b41f419248578bd7.jpg

Casting : Prabhas, Kamal Hassan, Amitabh Bachan, Deepika Padukone, Disha Patani, Shobana, Pasupathy, Brammanandham

Directed By : Nag Ashwin

Music By : Santhosh Narayanan

Produced By : Vyjayanthi Films - C.Aswini Dut

 

தேசத்தில் உள்ள அத்தனை வளங்களையும் தன்வசப்படுத்திக் கொண்டு காம்ப்ளக்ஸ் என்ற புதிய உலகத்தை உருவாக்கி, பல சக்திகளோடு இறப்பின்றி 200 வருடங்களாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் சுப்ரீம் யாஷினிடம் இருந்து மக்களை விடுவித்து உலத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு போராட்டக்குழு முயற்சித்து வருகிறது. அதே சமயம், கடவுள் என்ற  வார்த்தையை அழித்த சுப்ரீம் யாஷினை அழிக்க தெய்வ குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில், போராட்டக்குழுவின் மூத்தவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு குழந்தை பிறந்ததா?, சுப்ரீம் யாஷின் யார்? நாயகன் பிரபாஸுக்கு படத்தில் என்ன வேலை? என்பதை அதிநவீன அறிவியல் உலகத்தோடு, ஆன்மீக சக்தியையும் சேர்த்து சொல்வது தான் ‘கல்கி 2898 கி.பி’.

 

மகாபாரதம் யுத்தத்தின் முடிவில் தொடங்கும் கதை, பல நூறு ஆண்டுகள் கடந்து நவீன உலகில் பல போர்களையும், அழிவுகளையும் தாண்டி கி.பி 2898 ஆம் ஆண்டு அதிநவீன காலக்கட்டத்தில் பயணிக்கிறது. மகாபாரதம் கதை தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த படத்தின் கதை ஓரளவு புரியும் என்பதால், மகாபாரதம் கதையை படித்துவிட்டு படம் பார்ப்பது நல்லது.

 

படத்தில் நாயகன் அந்தஸ்த்தில் பிரபாஸ் நடித்திருந்தாலும், அவர் ஒரு சாதாரண கதாபாத்திரமாகவே வலம் வருகிறார். அதிலும், அவரது அறிமுக காட்சியும், அதையொட்டி வரும் சண்டைக்காட்சியும் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது. ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு வெற்றி படம் அமையாதது, அவரது ரசிகர்களை கவலைக்கொள்ள செய்திருக்கும் நிலையில், இந்த படத்தில் அவருக்காக நல்ல காட்சி கூட அமையாதது பெரும் சோகம்.

 

சுப்ரீம் யாஷின் என்ற வில்லன் வேடத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கிறார். 200 ஆண்டுகளாக வாழும் அவரது கதாபாத்திர வடிவமைப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஆனால், அது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்பதால் கமல்ஹாசனை பார்க்க முடியவில்லை என்றாலும், இரண்டாம் பாதியில் அவரது ஆட்டம் அதிரடியாக இருக்கும் என்பதை கிளைமாக்ஸ் காட்சி உணர்த்துகிறது.

 

தெய்வ குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்ணாக நடித்திருக்கும் தீபிகா படுகோனே, அஸ்வத்தாமாவாக நடித்திருக்கும் அமிதாப் பச்சன், பசுபதி ஆகியோருடன் இயக்குநர்கள் ராம்கோபால் வர்மா, எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகர்கள் விஜய் தேவரகொண்டா,  துல்கர் சல்மான் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் DJORDJE STOJILJKOVIC பணியை விட விஷுவல் எபெக்ட்ஸ் பணிகள் தான் படத்திற்கு பக்கபலமாக பயணித்திருக்கிறது என்றாலும், ஒளிப்பதிவாளரின் பணியும் பாராட்டும்படி இருக்கிறது.

 

சந்தோஷ் நாராயணின் இசை படத்தின் பிரமாண்டத்திற்கு ஈடுகொடுத்து பயணித்திருக்கிறது. 

 

படத்தொகுப்பாளர் கோட்டகிரி வெங்கடேஷ்வர ராவ் முதல் பாதியில் சற்று தடுமாறியிருந்தாலும், இரண்டாம் பாதியில் வேகமாகவும், நேர்த்தியாகவும் காட்சிகளை தொகுத்து படத்திற்கு சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கிறார்.

 

ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக மிகப்பெரிய அறிவியல் கற்பனை கதையை உருவாக்கி, அதை இந்திய புராணக்கதையோடு சேர்த்து சொல்லியிருக்கும் இயக்குநர் நாக் அஸ்வின், அறிவியல் அம்சங்களை கையாண்ட விதம் ரசிக்கும்படி இருந்தாலும், இந்துத்துவா கொள்கையை தூக்கிப்பிடித்திருப்பது படத்தை பலவீனப்படுத்தி விடுகிறது.

 

படத்தில் இடம்பெறும் விஷுவல் எபெக்ட்ஸ் காட்சிகள் அனைத்தும் தரமாகவும், சிறப்பாகவும் வந்திருக்கிறது. இவற்றுக்காக நிச்சயம் படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்றாலும், பிரபாஸ் என்ற நாயகனை எப்படி காண்பிப்பது என்று தெரியாமல், அவரது கதாபாத்திரத்தை டம்மியாக்கியிருக்கும் இயக்குநர் அவர் வரும் காட்சிகளில் ரசிகர்களை தூங்க வைத்துவிடுகிறார்.

 

அறிவியல் அதிசயங்களோடு தொடங்கும் முதல் பாதி படம் சற்று தடுமாற்றத்துடன் நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகள் படத்தை ரசிக்க வைக்கிறது. அதே சமயம், படத்தின் பல காட்சிகள் இது அறிவியல் படம் அல்ல ஆன்மீக படம் என்பதை நிரூபித்திருப்பதோடு, அறிவியலுக்கும், ஆன்மீகத்திற்கும் இரண்டாம் பாகத்தில் கடுமையான யுத்தம் நடக்கப் போகிறது, என்பதையும் விளக்கியிருக்கிறது.

 

மொத்தத்தில், இந்த ‘கல்கி 2898 கி.பி’ அறிவியல் பெயரில் ஆன்மீக பிரச்சாரம் செய்கிறது.

 

ரேட்டிங் 3/5