’கங்குவா’ திரைப்பட விமர்சனம்
Casting : Suriya, Bobby Deol, Disha Patani, Yogi Babu, Redin Kingsley, Natty Nataraj, Kovai Sarala, K.S. Ravikumar, Bose Venkat, Karunas, Prem Kumar
Directed By : Siva
Music By : Devi Sri Prasad
Produced By : Studio Green and UV Creations - K.E. Gnanavelraja | Vamsi-Pramod
நிகழ்காலத்தில் கோவாவில் வாழும் சூர்யாவை தேடி சிறுவன் ஒருவன் வருகிறான். அவன் மூலம் சூர்யாவின் முன் ஜென்மம் நினைவுக்கு வர, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் நடந்த கங்குவா கதை தொடங்குகிறது.
ஐந்து தீவுகளில் இயற்கை வளம் அதிகம் உள்ள பெருமாச்சி தீவை கைப்பற்ற முயற்சிக்கும் ரோமானியப் படை, போர் புரிவதையே தொழிலாக கொண்ட பெருமாச்சி வீரர்களை எளிதில் வென்றிட முடியாது என்பதால், சதியின் மூலம் அவர்களை வீழ்த்த முடிவு செய்கிறது. அதன்படி, மற்றொரு தீவைச் சேர்ந்த நட்டி நட்ராஜுக்கு பணத்தாசைக் காட்டுகிறது. அவரும் பணத்திற்கு ஆசைப்பட்டு ரோமானியப் படைகளுடன் இணைந்து, தனது சதி திட்டத்தால் பெருமாச்சி வீரர்களை கொன்று குவிக்கிறார். இதைக்கண்டு பொங்கும் பெருமாச்சி தலைவரின் மகன் சூர்யா, தனது மக்களை கொன்றவர்களை பழிதீர்ப்பதோடு, எதிரிகளை வேறோடு சாய்க்க நினைக்கிறார்.
சூர்யா தலைமையிலான பெருமாச்சியை வீழ்த்துவதற்காக உதிராவின் உதவியை ரோமானியப் படை நாடுகிறது. இரத்தத்தை கடவுளாக வணங்கும் இரக்கம் அற்ற இனமான உதிராவின் தலைவர் பாபி தியோல், பெருமாச்சியின் மீதான தனது பகையை தீர்த்துக்கொள்ள, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்கிறார். அதன்படி, மேலும் சில தீவுகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு பெருமாச்சி மீது போர் தொடுக்க, அவர்களிடம் இருந்து சூர்யா தன் மக்களை காப்பாற்றினாரா?, நிகழ்கால சூர்யாவுக்கு முன் ஜென்மத்தை நினைவுப்படுத்திய சிறுவன் யார்? போன்ற கேள்விகளுக்கான விடையை ஃபேண்டஸி மற்றும் ஆக்ஷனோடு சொல்வது தான் ‘கங்குவா’.
தோற்றம், பார்வை, உடல்மொழி, வசன உச்சரிப்பு என அனைத்தையும் மிக நேர்த்தியாக கையாண்டிருக்கும் சூர்யா கங்குவா என்ற கதாபாத்திரத்தை மக்களிடம் கடத்துவதற்கு கடினமாக உழைத்திருக்கிறார். சூர்யாவின் ஒவ்வொரு அசைவுகளும் கங்குவா உலகத்தை உண்மைக்கு நெருக்கமாக்கியிருப்பதோடு, கதாபாத்திரத்திற்கான அவரது அளப்பரிய அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டுகிறது. நிகழ்கால சூர்யாவின் தோற்றமும், இளமையும் ரசிக்கும்படி இருந்தாலும் நடிப்பும் அவரது செயல்களும் வழக்கமானதாகவே இருக்கிறது.
உதிரா இனத்தின் தலைவராக நடித்திருக்கும் பாபி தியோலின் தோற்றமே மிரட்டலாக இருக்க, அவரது கோபமும், பார்வையும் திரையில் அனல் வீசுகிறது.
ஒரு பாடலில் கவர்ச்சியாக தோன்றுவதோடு தனது பணியை முடித்துக் கொள்கிறார் நாயகி திஷா பதானி. வழக்கமான காமெடி என்றாலும் அதை எடுபடாதவாறு செய்திருக்கிறார் யோகி பாபு. ரெடின் கிங்ஸ்லி தேவையில்லாத பொருளாக வலம் வருகிறார்.
நட்டி நட்ராஜ், போஸ் வெங்கட், கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், பிரேம் குமார் என தெரிந்த முகங்கள் பலர் இருந்தாலும், கதாபாத்திரங்களாக அவர்களின் முகம் மக்கள் மனதில் பதியவில்லை.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை படத்தின் பிரமாண்டத்திற்கே பிரமாண்டம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. “நெருப்பு..”, ”தலைவா...” என பாடல்களிலும் கங்குவாவின் உலகத்தை பிரமிக்க வைத்திருக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தனது பீஜியம்கள் மூலம் காட்சிகளுக்கு உயிரோட்டம் அளித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் வெற்றி ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை வியக்க வைத்திருக்கிறார். நிகழ்கால கோவா காட்சிகள் மற்றும் கங்குவா உலகம் என இரண்டையும் வெற்றியின் கேமரா மிக பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஹாலிவுட் படங்களை பார்த்த அனுபவத்தைக் கொடுக்கிறது.
மறைந்த படத்தொகுப்பாளர் நிஷாத் யூசுப், கங்குவா உலகின் பிரமாண்டத்தை மக்களிடம் நேர்த்தியாக கடத்தியது போல், அந்த கதையையும் சற்று நிதானமான உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கலாம்.
ஐந்து தீவுகள், அதன் மக்கள், அவர்களின் தோற்றம், உடை, இருப்பிடம், உணவு என கங்குவா என்ற ஒரு உலகத்தையே உருவாக்கியிருக்கும் கலை இயக்குநர் மிலனின் பணி பிரமிக்க வைக்கிறது.
சண்டைப்பயிற்சி இயக்குநர் சுப்ரீம் சுந்தர் மற்றும் அவரது குழுவினர் மிக கடுமையாக உழைத்திருப்பது அனைத்து சண்டைக்காட்சிகளிலும் தெரிகிறது.
தொழில்நுட்ப கலைஞர்களுடன் கைகோர்த்து கங்குவா உலகத்தில் படம் பார்ப்பவர்களையும் பயணிக்க வைத்திருக்கிறது கிராபிக்ஸ். படம் முழுவதிலும் கிராபிக்ஸ் இருந்தாலும், எது கிராபிக்ஸ், எது உண்மை என்று கண்டுபிடிக்க முடியாத வகையில் மிக நேர்த்தியாக கிராபிக்ஸ் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை, கதைக்களம் என்று அனைத்தையுமே நம்புப்படியாக வடிவமைத்ததோடு, அதன் முக்கிய கதாபாத்திரமான கங்குவாவை வடிவமைத்த விதம் ஆகியவற்றின் மூலம் நம் கவனத்தை தன்வசப்படுத்தும் இயக்குநர் சிவா, கங்குவா என்ற தனது கற்பனை உலகத்தின் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த உயரத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
நிகழ்கால கதை அழுத்தம் இல்லாமலும், அதில் வரும் சிறுவன் மற்றும் அவனை சிறை பிடித்து வைத்திருப்பவர்கள் யார்? என்று சொல்லாதது உள்ளிட்டவையால் அது படத்திற்கே தேவையில்லாத ஒன்றாக இருந்தாலும், கங்குவாவின் உலகம் மற்றும் அங்கு நடக்கும் சாகசங்கள் நிறைந்த சண்டைக்காட்சிகளால் நிகழ்காலத்தை மறந்து மக்கள் அனைவரும் கங்குவாவின் உலகத்தில் பயணப்பட தொடங்கி விடுகிறார்கள்.
விறுவிறுப்பு மற்றும் திருப்பங்கள் நிறைந்த காட்சிகளோடு திரைக்கதை வேகமாக பயணிப்பது பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்தாலும், கங்குவாவை தவிர மற்ற கதாபாத்திரங்களையும், அவர்களின் கதைகளையும் நிதானமாக சொல்லி, அவற்றுடன் பார்வையாளர்களை ஒன்றிவிடச் செய்யாமல் படுவேகமாக பயணிக்கும் கதை எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது சிறு குறையாக இருந்தாலும், கதையை தாண்டிய திரைக்கதை மற்றும் அதை விவரிக்கும் பிரமாண்ட காட்சிகள் அந்த குறையை மறக்கடிக்கச் செய்து விடுகிறது.
இயக்குநர் சிவா தனது கற்பனை மூலம் உருவாக்கிய உலகத்தை தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சூர்யா என்ற அசுரத்தனமான நடிகர் மூலம் காட்சி மொழியின் வாயிலாக திரையில் நிகழ்த்தியிருக்கும் இந்த கங்குவா மேஜிக்கை பிரமாண்டமாக மட்டும் இன்றி பார்ப்பவர்கள் பிரமித்துப் போகும் வகையில் சொல்லியிருப்பது தமிழ் ரசிகர்களையும் கடந்து உலக சினிமா ரசிகர்களையும் நிச்சயம் கொண்டாட வைக்கும்.
மொத்தத்தில், ‘கங்குவா’ தமிழ் சினிமாவின் பிரமாண்ட உலக சினிமா.
ரேட்டிங் 4/5