’கண்ணகி’ திரைப்பட விமர்சனம்
Casting : Keerthi Pandiyan, Ammu Abirami, Vidya Pradeep, Shalini Zoya, Yashwanth Kishore, Vetri, Mayilsamy, Adhesh Sudhakar, Mounica
Directed By : Yashwanth Kishore
Music By : Shaan Rahman
Produced By : J. Danush, M. Ganesh
திருமணத்திற்காக காத்திருக்கும் அம்மு அபிராமிக்கு சில காரணங்களால் திருமணம் தடைப்பட்டு வருகிறது. திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாத ஷாலின் சோயா, லிவிங் டூ கெதர் முறையில் ஓரு ஆணுடன் வாழ்ந்து வருகிறார். காதலனால் கர்ப்பமடைந்த கீர்த்தி பாண்டியன், கருவை கலைக்க முடியாமல் கஷ்ட்டப்பட்டு வருகிறார். கணவருடைய கட்டாயத்தால் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு வரும் வித்யா பிரதீப் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறார். இப்படி நான்கு பெண்களும் ஒவ்வொரு பிரச்சனையோடு வாழ்ந்து வரும் நிலையில், இவர்கள் பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்கள், இவர்களுடைய இந்த வாழ்க்கை பயணம் எப்படி செல்கிறது, எதில் போய் முடிகிறது, என்பதே படத்தின் மீதிக்கதை.
அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஷாலின் சோயா ஆகிய நான்கு பேரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு பிரச்சனை என்ற ரீதியில் கதை நகர்ந்தாலும், அப்பெண்களின் பிரச்சனைகளை ரசிகர்களிடம் மிக நேர்த்தியாக கடத்தும் வகையில் நான்கு நடிகைகளும் நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
யஷ்வந்த் கிஷோர், வெற்றி, மயில்சாமி, ஆதேஷ் சுதாகர், மெளனிகா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்து படத்திற்கு பக்கபலமாக பயணித்திருக்கிறார்கள்.
சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மையப்படுத்தி பல படங்கள் வெளியாகியிருந்தாலும், பெண்கள் வெளிக்காட்டிக்கொள்ளாமல் பல சமூகம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்கள் என்ற ஒரு கோணத்தில் இப்படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் யஷ்வந்த் கிஷோர், திரக்கதை மற்றும் காட்சிகளை மிக இயல்பாக வடிவமைத்து ரசிக்க வைத்திருப்பதோடு, வசனங்கள் மூலமாகவும் கைதட்டல் பெறுகிறார்.
ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருப்பதோடு, கண்களுக்கு விருந்து படைக்கும் விதத்தில் காட்சிகளை படமாக்கியிருக்கிறது.
ஷான் ரகுமானின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், பின்னணி இசை கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.
முதல் பாதியில் நான்கு பெண்களின் வாழ்க்கையை விவரிக்கும் இயக்குநர் இரண்டாம் பாதியில் அவர்களுடைய பிரச்சனைகள் மற்றும் வலிகளை கொண்டு திரைக்கதையை நகர்த்தும் போது திரைக்கதையில் ஏற்படும் தொய்வு படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. இருந்தாலும், படத்தின் க்ளைமாக்ஸில் வரும் திருப்புமுனை எதிர்பார்க்காத ஒன்றாக இருப்பதோடு, ரசிகர்கள் பாராட்டி கைதட்டும் விதத்தில் அமைந்திருக்கிறது.
மொத்தத்தில், பெண்களின் வலிகளை சொல்லும் இந்த ‘கண்ணகி’ பாராட்டு மழையில் நனைவது உறுதி.
ரேட்டிங் 3/5