Mar 17, 2023 07:27 PM

‘கண்ணை நம்பாதே’ திரைப்பட விமர்சனம்

f149e7f0672a1d5b1f0ec36f6078b2c9.jpg

Casting : Udhanidhi, Athmika, Prasanna, Srikanth, Bhumika, Subiksha, Pazha.Karuppaiah, Sedrayan

Directed By : Mu.Maran

Music By : Siddhu Kumar

Produced By : LIPI Cine Crafts - VN Ranjithkumar

 

யார் என்றே தெரியாத ஒரு பெண்ணுக்கு உதவி செய்யும் உதயநிதி, அதன் மூலம் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார். அந்த பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான முயற்சியில் ஈடுபடும் போது, மேலும் பல பிரச்சனைகள் அவரை துரத்த, அதில் இருந்து எப்படி தப்பித்தார்? அதன் பின்னணி என்ன? என்பதை பரபரப்பாக சொல்வதே ‘கண்ணே நம்பாதே’ படத்தின் கதை.

 

பக்கத்து வீட்டு பையன் என்று சொல்லும் அளவுக்கு இயல்பான வேடங்களில் மிக இயல்பாக நடித்து கவனம் ஈர்க்கும் உதயநிதி, இந்த படத்திலும் அவ்வாரே நடித்து அசத்துகிறார். தன்னை சுற்றி என்ன நடக்கிறது? என்று தெரியாமல் குழம்பும் காட்சிகளிலும், பிரச்சனையில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் காட்சிகளிலும் தனது இயல்பான நடிப்பு மூலம் கதைக்கு பலம் சேர்க்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் ஆத்மிகா, உதயநிதியுடன் சில காதல் காட்சிகள், ஒரு பாடல் என்று அளவாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

 

உதயநிதியுடன் பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரசன்னாவின் வேடமும், அதில் அவர் நடித்த விதமும் திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்த உதவியிருக்கிறது.

 

’ரோஜா கூட்டம்’ படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்திருக்கும் பூமிகா மற்றும் ஸ்ரீகாந்த் எதிர்பார்க்காத வேடத்தில் ஏமாற்றம் அளிக்காமல் நடித்திருக்கிறார்கள்.

 

வசுந்தரா காஷ்யப், சதிஷ், மாரிமுத்து, சுபிக்‌ஷா, செண்ட்ராயன், கு.ஞானசம்பந்தம், பழ.கருப்பையா என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும், அனைவரையும் அளவாக பயன்படுத்தி கவனிக்க வைத்திருக்கிறார்கள்.

 

படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவில் நடந்தாலும், அதை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜலந்தேர் வாசன். 

 

காட்சிகளில் இருக்கும் விறுவிறுப்புக்கு ஏற்றவாறு இசையமைத்திருக்கும் சித்து குமாரின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

 

திரைக்கதையில் இருக்கும் குழப்பங்களையும், சில குளறுபடிகளையும் தனது பணி மூலம் சரிசெய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், 

 

எழுதி இயக்கியிருக்கும் மு.மாறன், சிறிய சம்பவத்தை வைத்துக்கொண்டு சுமார் இரண்டு மணி நேரம் யூகிக்க முடியாத க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைக்கதையை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்த்தி செல்கிறார்.

 

பூமிகா கதாபாத்திரத்தின் மூலம் இயக்குநர் வைத்த ட்விஸ்ட், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் பின்னணியில் சொல்லப்பட்ட காரணம் பல படங்களில் பார்த்திருப்பதால் ஏமாற்றம் அளிக்கிறது. 

 

சிறிய வேடமாக இருந்தாலும் கதையில் முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரங்களை கையாண்ட விதமும், காட்சிகளை வடிவமைத்த விதமும் ரசிக்க வைக்கிறது.

 

மொத்தத்தில், ‘கண்ணை நம்பாதே’ ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்.

 

ரேட்டிங் 3.5/5