Apr 09, 2021 12:24 PM

’கர்ணன்’ விமர்சனம்

9cbe98b1bfa9efe6e34d04222f469c79.jpg

Casting : Dhanush, RajishaVijayan, LalPaul, Natarajan Subramaniam, Yogi Babu, Gouri G. Kishan, Lakshmi Priyaa Chandramouli

Directed By : Mari Selvaraj

Music By : Santhosh Narayanan

Produced By : Kalaipuli S.Thanu

 

தேவைகளுக்காக போராடும் மக்களை அடக்கி ஆள வேண்டும், என்று நினைக்கும் அதிகார வர்க்கத்துக்கு எதிராக வெகுண்டெழும் மக்களின் கோபமும், அதன் விளைவுகளும் தான் ‘கர்ணன்’ படத்தின் கதை.

 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறு கிராமத்தில் அப்பா, அம்மா மற்றும் சகோதரியுடன் வாழ்ந்து வரும் தனுஷ், அரசு பணிக்காக முயற்சித்து வருகிறார். அந்த கிராமத்தை கடந்து சென்றாலும் அந்த ஊரில் பேருந்து நிற்காமல் செல்வதால், கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். தங்களது கிராமத்திலும் பேருந்து நிலையம் வேண்டும், அங்கும் பேருந்து நிற்க வேண்டும், என்பதற்காக கிராம பெரியவர்கள் பல வகையில் முயற்சித்தாலும், சிலரின் சதியால் அவர்களுக்கு அந்த வசதி கிடைக்காமல் போகிறது. இதனால், இளைஞர்களின் படிப்பு உள்ளிட்ட கனவுகள் சிதைக்கப்பட, ஒரு கட்டத்தில் தனுஷ் மற்றும் அவரது நண்பர்கள் கோபமடைந்து பேருந்து ஒன்றை அடித்து உடைக்க, அதனால் அந்த கிராமத்து மக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுகிறது. அந்த ஆபத்தில் இருந்து கிராம மக்களை நாயகன் தனுஷ் காப்பாற்றினாரா இல்லையா, என்பது தான் மீதிக்கதை.

 

எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்திக் கொள்ளும் தனுஷ், கர்ணன் கதாப்பாத்திரத்தில் கம்பீரமாக வலம் வருகிறார். லுங்கியுடன் கையில் வாள் ஏந்தி வரும் காட்சிகளில், கைதட்டல் சத்தம் காதை பதம் பார்த்து விடுகிறது. ஊர் பெரியவர்களுக்காக தனது கோபத்தை அடக்கிக்கொள்ளும் காட்சிகளாகட்டும், பேருந்தை உடைக்க கட்டையுடன் வரும் காட்சி மற்றும் காவல்துறை அதிகாரியிடம் தனது மக்களுக்காக பேசும் காட்சியாகட்டும், அனைத்திலும் அனைத்துவிதமான உணர்வுகளையும் கச்சிதமாக வெளிக்காட்டி நம் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்.

 

கதாநாயகியாக நடித்திருக்கும் ரஜிஷா விஜயன் கொடுத்த வேலையை சரியாக செய்திருந்தாலும், அவரை விடவும் நம் கவனத்தை ஈர்ப்பது தனுஷின் அக்காவாக நடித்திருக்கும் லக்‌ஷ்மி பிரியா தான். தம்பிக்காக பரிந்து பேசுபவர், காதல் விவகாரம் தெரிந்தவுடன், கோபம் கொண்டு தனுஷை வெளுத்து வாங்கும் காட்சியில், குடும்பத்துக்காக உழைக்கும் ஒட்டு மொத்த பெண்களின் பிரதிபலிப்பாகிறார்.

 

ஹீரோவுக்கு நிகரான வேடத்தில் லால் நடித்திருக்கிறார். கிராம மக்களை காப்பாற்ற தனது உயிரை விடும் அவர் இறுதியில் கதையின் நாயகனாக நம் மனதில் நின்றுவிடுகிறார்.

 

காவல்துறை அதிகாரியாக வரும் நட்டி நட்ராஜ், தன் மனதில் இருக்கும் வன்மத்தை வெளிப்படுத்தும் விதம், சாதி ரீதியிலான ஒடுக்குமுறை எப்படி வேலை செய்கிறது, என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

 

காமெடிக்காக அல்லாமல் கதாப்பாத்திரத்திற்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் யோகி பாபு, குணச்சித்திர நடிகராக ஜொலிக்கிறார்.

 

கெளரி கிஷன், பூ ராம், ஜி.எம்.குமார், சண்முகராஜன், சுபத்ரா, அழகம்பெருமாள் என படத்தில் நடித்த அனைவரும் கிராமத்து மக்களாகவே மாறியிருக்கிறார்கள். 

 

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், கிராமத்தின் வாழ்வியலை அரிதாரம் இன்றி வெளிகாட்டியிருப்பதோடு, ஒவ்வொரு கோணத்திலும், ஒரு விஷயத்தை நம்முள் கடத்துகிறார்.

 

சந்தோஷ் நாராயாணனின் இசையில் பாடல்களும், பின்னணியும் தனித்துவமாக இருந்தாலும், சில முக்கியமான காட்சிகளில் பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணன் காணாமல் போவது ஏமாற்றமளிக்கிறது.

 

தற்போதைய காலக்கட்டத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் இல்லை, என்ற கருத்து பரவலாக நிலவினாலும், அன்றைய காலக்கட்டத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகளும், அடக்குமுறைகளும் எப்படி இருந்தது என்பதை, தான் சந்தித்த மற்றும் கேள்விப்பட்ட சம்பவங்களின் தொகுப்பாக இந்த திரைக்கதையை இயக்குநர் மாரி செல்வராஜ் வடிவமைத்துள்ளார்.

 

”பழைய கதை எதுக்குப்பா...” என்று சிலருக்கு தோன்றாலம். இப்படிப்பட்ட வாழ்க்கையை கடந்து தான் நம் முன்னோர்கள் வந்திருக்கிறார்கள், என்பதை அவர்களுடைய தலைமுறைகள் தெரிந்துக் கொண்டால் தான், எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலைகள் உருவாகமல் இருப்பதோடு, இதுபோன்ற சம்பவங்கள் இனியும் எங்கேவாது நடந்தால், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும், என்பதற்கான ஒரு வழியாகவும் இயக்குநர் மாரி செல்வராஜ் காட்சிகளை கையாண்டுள்ளார்.

 

படத்தின் முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும் தனுஷும், அவரது நண்பர்களும் கோபமடைந்து பேருந்தை உடைக்கும் காட்சியில் படம் ஜெட் வேகம் எடுப்பதோடு, ஒட்டு மொத்த படத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் சொல்ல வரும் கருத்தை அந்த ஒரு காட்சி புரிய வைத்துவிடுகிறது. 

 

படத்தில் உள்ள பல விஷயங்கள் பாராட்டும்படி உள்ளது. குறிப்பாக வசனங்கள். “முத்தையா மகன் கண்ணபிரான என்று பெயர் வைக்கலாம், மாடசாமி மகன் கர்ணனு பெயர் வைக்க கூடாதா?”, “எங்க தேவைகள பார்க்காம, நாங்க நிமிர்ந்து பாக்குறோமா இல்லையானு பார்ப்பீங்களா” உள்ளிட்ட பல வசனங்கள் சமூகத்தை கேள்வி கேட்கும்படி உள்ளது.

 

சாதி பாகுபாடு ஒழிய வேண்டும் என்றால், ஒடுக்கப்பட்ட மக்கள் படித்து அதிகாரத்துக்கு வரவேண்டும், என்ற கருத்தை தனது முதல் படத்தில் வலியுறுத்தியிருந்த இயக்குநர் மாரி செல்வராஜ், இந்த படத்தில், அப்படி நம்மை மேலே வர முடியாமல் ஆரம்பத்திலேயே அடக்கி வைக்க நினைப்பவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுவது தான் சரியாக இருக்கும், என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

 

தனுஷ் போன்ற மாஸ் ஹீரோவை வைத்துக் கொண்டு தான் சொல்ல வந்ததை நேர்த்தியாகவும் அதே சமயம், தனுஷ் ரசிகர்களுக்கான ஒரு படமாகவும் இப்படத்தை சரியான முறையில் இயக்குநர் மாரி செல்வராஜ் கொடுத்திருக்கிறார்.

 

‘கர்ணன்’ - வீரியம்

 

ரேட்டிங் 4/5