Sep 01, 2023 05:24 PM

’கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்பட விமர்சனம்

2cf924dd1bbd7f80ae073ff233df5068.jpg

Casting : Bharathiraja, Yogi Babu, Adithi Menon, Goutham Menon, Saral, Mahana

Directed By : Thangar Bachan

Music By : GV Prakash Kumar

Produced By : Thangar Bachan

 

ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிராஜா, நடுத்தர வயதில் தான் தொலைத்த உறவை தேடிச் செல்கிறார். அதேபோல், பரோட்டா கடையில் மாஸ்டராக பணியாற்றும் யோகி பாபு பெறாத பிள்ளையை தேடி செல்கிறார். இருவரும் ஒரு பேருந்து பயணத்தில் சந்தித்துக் கொள்வதோடு, இருவரும் சேர்ந்தே பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இவர்கள் தேடிச் சென்ற உறவுகள் இவர்களுக்கு கிடைத்தார்களா?, இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் பாரதிராஜாவின் வயது முதிர்வு அவருடைய கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தாலும், பல இடங்களில் அவரது உடல் ஒத்துழைக்க மறுப்பது தெளிவாக தெரிகிறது. இருந்தாலும் தன்னால் முடிந்தவரை தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

 

கதையின் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபுவின் அப்பாவித்தனமான நடிப்பு கவனம் ஈர்க்கிறது. பெறாத பிள்ளைக்காக அவர் ஏங்கும் காட்சிகள் இதயத்தை கனக்க செய்கிறது.

 

பாரதிராஜாவின் மகனாக நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் மேனன், வழக்கமான பாணியிலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

 

அதிதி மேனன் அழுத்தமான கதாபாத்திரத்தில் அசால்டாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.

 

மஹானா, குழந்தை நட்சத்திரம் சாரல், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் என படத்தில் பலர் இருந்தாலும் யாரும் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை.

 

என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பதோடு, கதாபாத்திரங்களின் உணர்வை ரசிகர்களிடம் கடத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.

 

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை கதையின் போக்கை மாற்றாமல் பயணித்திருக்கிறது.

 

மூத்த படத்தொகுப்பாளர் பி.லெனின் பணி அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. கதையை கோர்வாக சொல்லும்படியாக அல்லாமல், ஆரம்பம் முதலே தேவையில்லாத விஷயங்களை சொல்லும் காட்சிகளால் சில இடங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

 

மனித உணர்வுகள் பற்றி பேசும் கதையை ரசிகர்களின் உள்ளத்திற்குள் கடத்தும் முயற்சியாக எழுதி இயக்கியிருக்கும் தங்கர் பச்சான், பரபரப்பான உலகத்தில் ஒரு அமைதியான படத்தை கொடுத்திருப்பதில் வெற்றி பெற்றாலும், அதை சரியான முறையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தோல்வியடைந்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘கருமேகங்கள் கலைகின்றன’ எதிர்பார்ப்புகளை கானல் நீராக ஏமாற்றி விட்டது.

 

ரேட்டிங் 2/5