‘கருப்பங்காட்டு வலசு’ விமர்சனம்
Casting : Ebenezer Devaraj, Neelima Esai, George Vijay, Maari Chelladurai, Aria, Gowri Shankar, Jithesh Tony
Directed By : Selvendran
Music By : Adithyha Soorya
Produced By : Crew 21 Entertainment
நகரங்களுக்கு இணையாக கிராமங்கள் மாறி வரும் தற்போதைய காலக்கட்டத்திலும் மிகவும் பின் தங்கிய கிராமமாக இருக்கிறது ‘கருப்பங்காட்டு வலசு’ என்ற கிராமம். வெளிநாட்டில் இருந்து வரும் ஊர் தலைவரின் மகளான நீலிமா, தனது சொந்த கிராமத்தின் நிலை அறிந்து, அங்கு மாற்றத்தைக் கொண்டு வரும் நடவடிக்கையில் இறங்குகிறார். நீலிமாவின் முயற்சியால் சிசிடிவி கேமரா, மாணவர்களுக்கு கனிணி பயிற்சி, கழிப்பிட வசதி உள்ளிட்ட வசதிகள் கிராம மக்களுக்கு கிடைக்கிறது. இதனால் மகிழ்ச்சியடையும் கிராம மக்கள், கோவில் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். அன்றைய இரவு கிராமத்தில் உள்ள இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் மரணமடைய, அந்த மரணங்களுக்கு பின்னணியில் இருக்கும் மர்மத்தை, பல ட்விஸ்ட்டுகளோடு சொல்வது தான் படத்தின் கதை.
நீலிமா மற்றும் ஜார்ஜ் விஜய் ஆகியோரை தவிர மற்ற நடிகர்கள் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும், நடிப்பில் பல படங்கள் நடித்த அனுபவத்தை வெளிக்காட்டியிருப்பதோடு, கதாப்பாத்திரங்களுக்கு மிக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள்.
பச்சைக்கிளி வாத்தியார் வேடத்தில் நடித்தவரும், ரெட்டை மலை வேடத்தில் நடித்தவரும் தங்களது நடிப்பின் மூலம் தனி முத்திரை பதித்திருக்கிறார்கள். ஊர் தலைவரின் மகளாக நடித்திருக்கும் நீலிமாவும், போலீஸாக நடித்திருக்கும் ஜார்ஜ் விஜயும் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஆதித்ய சூர்யாவின் இசையில் ”புயல் காத்தா...” பாட்டு இனிமை. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. ஷ்ரவன் சரவணனின் ஒளிப்பதிவில், கிராமத்தின் குறுகிய தெருக்கள் கூட, கதாப்பாத்திரங்களாக முக்கியம் பெருகின்றன.
கிராமத்தில் நடக்கும் திருட்டு, அதில் இருந்து மக்களை காப்பாற்ற பொருத்தப்படும் சிசிடிவி கேமரா, அதே கேமராவினால் ஏற்படும் மரணம், என ஒவ்வொரு சம்பவத்தையும், மற்றொரு சம்பவத்துடன் முடிச்சிப்போட்டு இயக்குநர் செல்வேந்திரன் அமைத்திருக்கும் திரைக்கதையும், காட்சிகளும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் கதையை சமூக அக்கறையோடு சொல்லியிருக்கும் இயக்குநர் தேவேந்திரன், சில விஷயங்களை முழுமையாக சொல்லாமல், படம் பார்ப்பவர்கள் குழப்பமடையும் விதமாக சொல்லியிருப்பது படத்திற்கு பலவீனம்.
கதாப்பாத்திரங்கள் மூலம் முதல் பாதி படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தும் இயக்குநர், இரண்டாம் பாதியை பார்க்கும் ஆர்வத்தை நமக்கு தூண்டும் விதமாக இடைவேளை பிளாக் வைத்ததும், அதனை தொடர்ந்து வரும் காட்சிகளும், படத்தை இறுதிவரை இண்டர்ஷ்டிங்காக பார்க்க தூண்டுகிறது.
ரேட்டிங் 3/5