’கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்பட விமர்சனம்

Casting : Arulnidhi, Santhosh Pradap, Dushara Vijayan, Rajasiman, Yaar Kannan
Directed By : Sy Gowthamraj
Music By : D.Imman
Produced By : Ambeth Kumar
இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கீழத்தெருவில் வசிக்கும் சந்தோஷ் பிரதாப்பும், மேலத்தெருவில் வசிக்கும் நாயகன் அருள்நிதியும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக பழகுகிறார்கள். இதற்கிடையே சாதியை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு எதிராக சந்தோஷ் பிரதாப் நிற்க, அவருக்கு துணையாக அருள்நிதி நிற்கிறார். இவர்களின் நட்பு சாதிபாகுபாட்டுக்கு எதிராக நிற்கிறது. இதனால் கோபமடையும் அரசியல்வாதி ராஜசிம்மன், எப்படியாவது அந்த கிராமத்தில் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகிறார். திடீரென்று சந்தோஷ் பிரதாப் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை பழி அருள்நிதி மீது விழுகிறது. சந்தோஷ் பிரதாப்பை கொலை செய்தது யார்? கொலை பழியோடு தலைமறைவாக இருக்கும் அருள்நிதி சந்தோஷ் பிரதாப் கொலைக்கு காரணமானவர்களை என்ன செய்தார்? என்பதை சாதிக்கு எதிரான அரசியலோடு தற்காலத்தில் பேசப்பட வேண்டிய அரசியலை மிக நாகரீகமாகவும், அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும்படியும் பேசுவது தான் ‘கழுவேத்தி மூர்க்கன்’.
கதையின் நாயகனாக இயல்பான வேடங்களில் நடித்து வந்த அருள்நிதி முதல் முறையாக மாஸான வேடத்தில் நடித்திருக்கிறார். பெரிய முறுக்கு மீசையுடன் மூர்க்கன்சாமி என்ற பெயருக்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கும் அருள்நிதி, எவ்வளவு பெரிய ஆக்ஷன் படமாக இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட வேடமாக இருந்தாலும் சரி தன்னால் அதை மிக சரியாக கையாள முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் படம் முழுவதும் மிரட்டியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் மூர்க்கத்தனம் மிரட்டலாக இருப்பது போல், காதல் காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் வெள்ளந்தியான நடிப்பு என முழு படத்தையும் தன் தோள்மீது சுமந்திருக்கிறார்.
கதைக்கு ஓட்டாமல் பயணித்தாலும் நாயகி துஷாரா விஜயனின் துள்ளல் நடிப்பும், நக்கலான பேச்சும் காட்சிகளை ரசிக்க வைக்கிறது. தொடர்ந்து துணிச்சலான பெண்ணாக நடித்து வரும் துஷாரா, இந்த படத்திலும் அதே சாயல் கொண்ட வேடத்தில் நடித்திருந்தாலும் காதல் காட்சிகளில் கவனம் ஈர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
பூமி என்ற கதாபாத்திரத்தில் சாந்தமாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருப்பதோடு, படிப்பு ஒன்றே ஒருவரை உயர்த்தும் என்ற சிந்தனையை படம் பார்ப்பவர்கள் மனதிலும் பதியும் வகையில் வலம் வருகிறார்.
யார் கண்ணன், ராஜசிம்மன் இருவரும் வழக்கமான வில்லன்களாக நடித்திருந்தாலும், அவர்களின் அளவான நடிப்பு படத்திற்கு எந்தவித பாதகத்தையும் ஏற்படுத்தவில்லை.
முனிஷ்காந்த் வரும் காட்சிகளில் சிரிக்க முடியவில்லை என்றாலும் சிந்திக்க முடிகிறது. அதிகாரத்திற்கு எதிராக காவல்துறை அதிகாரியிடம் அவர் பேசும் வசனங்கள் அனைத்தும் அப்ளாஷ் பெறுகிறது.
சரத் லோகித்சவா, பத்மன், சாயா தேவி என்று படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, அவர்கள் மூலமாகவும் கதைக்கு தொடர்பான அரசியல் பேசி கவனிக்க வைத்திருக்கிறார்கள்.
ஸ்ரீதரின் ஒளிப்பதிவு இராமநாதபுர மாவட்டத்தின் வறட்சியை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறது. கருவேலம் மரங்கள் நிறைந்த இராமநாதபுர மாவட்டத்தின் நிலபரப்பை பருந்து பார்வையில் காட்டும் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது.
டி.இமான் இசையில் பாடல்கள் ஏற்கனவே கேட்டது போல் இருந்தாலும், யுகபாரதியின் வரிகள் மூலம் முணு முணுக்க வைக்கிறது. பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்கு ஏற்றபடி அமைந்திருக்கிறது.
இரண்டாம் பாதியை வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்த்தும் விதத்தில் படத்தொகுப்பு செய்திருக்கும் நாகூரான், முதல் பாதியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
சண்டைப்பயிற்சி இயக்குநர் கே.கணேஷின் சண்டைக்காட்சிகள் கமர்ஷியல் அம்சமாக இருந்தாலும், திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையிலும், ரசிக்கும்படியும் இருக்கிறது.
சாதிபாகுபாடு பார்க்க கூடாது என்று சொல்லும் படங்கள் கூட உயர்சாதியினரின் பெருமையை பேசும் படங்களாக தான் இருக்கும். ஆனால், சாதிபாகுபாடு பார்க்க கூடாது என்பதோடு, ஒருவனுக்கும் மேலே இருப்பதாக நினைப்பவர்களும், மற்றொரு சமூகத்தினருக்கு கீழே தான் இருக்கிறார்கள், என்பதை தற்காலத்து அரசியலோடு சேர்த்து மிக சரியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சை. கௌதம ராஜ்.
வழக்கமான கிராமத்து பின்னணியில் திரைக்கதை அமைத்திருந்தாலும், நடிகர்கள் கார்த்தி, பிரசாந்த் ஆகியோரது ரசிகர் மன்ற பலகைகள், கிழிந்த சாதி சங்க பேனருக்கு பின்னால் கம்பீரமாக நிற்கும் அம்பேத்கர் சிலை, என படம் முழுவதும் பல குறியீடுகள் மூலம் பாடம் சொல்லியிருப்பதோடு, படத்தில் பேசப்பட்டிருக்கும் அரசியல் வசனங்கள் மூலம் இயக்குநர் சை.கெளதம ராஜ் கைதட்டல் பெறுகிறார்.
சண்டைக்காட்சிகள், வசனங்கள், கதாபாத்திர வடிவமைப்பு என அனைத்தும் படத்திற்கும் பலம் சேர்த்தாலும், படத்தின் நீளம்மிகப்பெரிய பலவீனமாக அமைந்திருக்கிறது. அந்த பலவீனத்தை தள்ளி வைத்துவிட்டு பார்த்தால் ‘கழுவேத்தி மூர்க்கன்’ சாதிவெறியர்களுக்கான சம்மட்டி அடியாக மட்டும் இன்றி கமர்ஷியல் பட விரும்பிகளுக்கான விருந்தாகவும் இருக்கிறது.
ரேட்டிங் 3.5/5