Jun 16, 2018 07:15 AM

’கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ விமர்சனம்

909507850d2fd6a14ccb7636d9d76f3b.jpg

Casting : K.Bagyaraj, R.Sundarajan, R.V.Udhayakumar, Mansoor Alikhan, Power Star

Directed By : Razak

Music By : Srikanth

Produced By : Heaven Entertainment

 

தொழிலதிபர் ஒருவர் பெண்ணையும், அவளின் குழந்தையையும் கடத்த முடிவு செய்து, அந்த வேலையை நான்கு வயதான ரவுடிகளிடம் ஒப்படைக்கிறார். கடத்தல் முயற்சியில் ஈடுபடும் நான்கு ரவுடிகளும் தோல்வியடைய, தங்களால் இது முடியாது என்பதால், நான்கு இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களிடம் கடத்தல் வேலையை ஒப்படைக்கிறார்கள். பணத்திற்காக இதில் ஈடுபடும் நான்கு இளைஞர்களும் குழந்தையையும், பெண்ணையும் வெற்றிகரமாக கடத்திவிட்டு, தகவலை ரவுடிகளுக்கு தெரியப்படுத்த, அவர்களும் அப்பெண்ணையும், குழந்தையையும் அடைத்து வைக்கப்பட்ட இடத்திற்கு செல்கிறார்கள்.

 

இதற்கிடையே, பெண் மற்றும் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் போலீஸுக்கு தெரியவர, அவர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பு போலீஸ் உயர் அதிகாரி பாக்யராஜியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதே சமயம், விஷயம் போலீஸுக்கு சென்றுவிட்ட தகவல் கடத்தல்காரர்களுக்கும் தெரிந்துவிடுகிறது. போலீஸிடம் சிக்காமல் கடத்தியவர்களை ஒப்படைத்துவிட்டு பணத்தை பெற வேண்டும் என்ற முயற்சியில் கடத்தல்காரர்கள் ஈடுபடும் போது, கடத்தப்பட்ட பெண்ணும், குழந்தையும் அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிட, அவர்களை கண்டுபிடித்து தொழிலதிபரிடம் ஒப்படைத்தார்களா? அதற்குள் இவர்களை போலீஸ் உயர் அதிகாரி பாக்யராஜ் பிடித்தாரா இல்லையா, என்பதை நகைச்சுவையாக சொல்லியிருப்பது தான் ’கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ படத்தின் மீதிக்கதை.

 

கே.பாக்யராஜ், ஆர்.சுந்தரராஜன், ஆர்.வி.உதயகுமார், அனுமோகன், ராஜ்கபூர், மன்சூரலிகான் ஆகியோர் படத்தின் முக்கிய வேடங்களில் நடித்திருக்க, பாடகர் மனோவின் மகன் ரத்தீஷும், நடிகை இனியாவின் தங்கை தாராவும் இப்படத்தின் மூலம் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார்கள். இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் முதல்வர் வேடத்தில் நடித்திருக்கிறார். மற்றும் அஸ்மிதா, விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா, வெங்கல்ராவ், நெல்லை சிவா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

 

படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே நடித்திருக்கிறார்கள். படம் முழுவதும் காமெடியோ காமெடி தான் என்றாலும், நமக்கு சிரிப்பு மட்டும் ரொம்ப கஷ்ட்டப்பட்டு வருகிறது. இருந்தாலும் சில இடங்களில் குபீர் என்றும் சிரிக்க வைத்துவிடுகிறார்கள்.

 

மன்சூரலிகானின் வேடமும், அவரது எப்பிசோடும் படத்திற்கு சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறது.

 

ஸ்ரீதரின் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்தின் இசையும் சுமார் ரகம் தான் என்றாலும், கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை காமெடியாக கொடுக்க நினைத்திருக்கும் இயக்குநர் ரஜாக், இவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்துக்கொண்டு, திரைக்கதையை அழுத்தம் இல்லாமல் அமைத்திருக்கிறார்.

 

காமெடி படம் தான் என்பதால், லாஜிக்கை தவிர்த்துவிட்டு பார்த்தால் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ என்ற இந்த காமெடி பயணத்தை ஒரு முறை பார்க்கலாம்.

 

ரேட்டிங் 2.5/5