Feb 23, 2018 08:04 AM

கேணி விமர்சனம்

59f4b17c0f6dd37daebaa006bc97e774.jpg

Casting : Jayapradha, Aanu Hassan, Parthiban, Nazar, Revathi, Rekha

Directed By : M.A.Nishad

Music By : M.Jayachandran and Sam C.S

Produced By : Sajeev PK - Anne Sajeev

 

தண்ணீரின் முக்கியத்துவத்தையும், அந்த தண்ணீரை வைத்து மாநிலங்கள் நடத்தும் அரசியலையும் சொல்வது தான் ‘கேணி’ படத்தின் கதை. மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் எப்படி என்பதை பார்ப்போம்.

 

கேரளாவில் அரசு உயர் பதவியில் பணிபுரியும் ஜெயப்பிரதாவின் கணவர் உயிரிழந்துவிட, அவரது ஆசைப்படி தமிழக எல்லையில் இருக்கும் அவரது சொந்த ஊருக்கு ஜெயப்பிரதா வருகிறார். அங்கே அவர் வீட்டில் இருக்கும் கேணியில் எப்போதும் வற்றாமல் தண்ணீர் இருக்கும். ஆனால், அந்த கிணற்றை கேரள அரசு சொந்தம் கொண்டாடுகிறது. அதே சமயம், அந்த கிராமத்தில் தண்ணீர் இல்லாமல் வரட்சி ஏற்படுவதோடு, தண்ணீர் பஞ்சத்தால் அந்த ஊர் மக்களும் சிறுவர்களும் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

 

தனது கேணியில் இருக்கும் தண்ணீரை அந்த ஊர் மக்களுக்கு கொடுக்க ஜெயபிரதா, எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோற்றுப் போனாலும், அவர் துவண்டுப் போகாமல் அந்த கேணியை மீற்பதற்காக நடத்தும் அதிரடி போராட்டத்தில் எப்படி வெற்றி பெறுகிறார், என்பது தான் ‘கேணி’ படத்தின் மீதிக்கதை.

 

வயது முதிர்வு தோற்றத்தில் தெரிந்தாலும் நடிப்பில் இளமையாகவே இருக்கும் ஜெயபிரதாவின் போராட்ட உணர்வும், எலியவர்களுக்காக வருந்துவதையும் நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். நாசர், பார்த்திபன், ரேகா, ரேவதி, ஹனு ஹாசன், எம்.எஸ்.பாஸ்கர் என்று அனைவரும் தங்களது கதாபாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள். இருந்தாலும், சில இடங்களில் இத்தனை பேர் எதற்கு? என்ற கேள்வி எழுகிறது.

 

தண்ணீர் பிரச்சினையை பற்றி பேசும் படத்தில், பொய்யான பாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் கேரள உயர் அரசு அதிகாரி, இஸ்லாமியரை தீவிரவாதி என்று கைது செய்வது, என கதைக்கு தேவையில்லாதவைகள் சில இருந்தாலும், கேரளாவில் நடந்த சில சம்பவங்களை நமக்கு நினைவு கூறும் வகையில் இருக்கின்றன.

 

தண்ணீருக்காக போராடிய இந்திரா என்ற கதாபாத்திரத்தை சுற்றி தான் கதை நகர்கிறது. அவரைப் பற்றி தெரிந்துக்கொள்ள முயற்சிக்கும் மூன்று நிருபர்கள், அவர்களுக்கு இந்திராவின் கதையை சொல்லும் மூன்று பேர், அவர்களுக்கு கீழே வரும் சில கதாபாத்திரங்கள் என்று எக்கச்சக்கமான கதாபாத்திரங்களினால் சில இடங்களில் திரைக்கதை அழுத்தமில்லாமல் நகர்வதோடு படத்தின் நீளமும் அதிகரிக்கிறது. இயக்குநரும், எடிட்டரும் கதாபாத்திரங்களிலும், காட்சிகளிலும் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் புரட்சிகரமான மாபெரும் வெற்றி நிச்சயம்.

 

படம் முழுவதும் போராட்ட உணர்வு கொப்பளித்தாலும், படத்தில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களும் அரசியல் பேசுவதை தவிர்த்திருக்கலாம். அதேபோல், பார்த்திபன் எண்ட்ரியாகி வசனம் பேசும் இடங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றிருந்தாலும், அவருக்கு கொடுத்த பில்டப்புக்கு ஏற்றவாறு அவரது கதாபாத்திரம் இல்லை என்பது படத்திற்கு மற்றொரு மைனஸ். பார்த்திபன் பேசும் பாணியிலேயே சொல்ல வேண்டும் என்றால், “எதையோ புடுங்குவது போல எண்ட்ரி கொடுப்பவர், இறுதிவரை எதையும் புடுங்காமல், கடைசியில் கோர்ட் ஆர்டர் கொடுத்த பிறகு கேணி அருகே வைத்திருக்கும் கேரள அரசின் பலகையை புடுங்குவதோடு” அவரது வேலையை முடித்துக்கொள்கிறார்.

 

எம்.ஜெயச்சந்திரனின் இசையில் பாடல்களும், சாம் சி.எஸ்-ன் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்ப்பது போல, நவ்சத் ஷெரீப்பின் ஒளிப்பதிவில் வரட்சியின் தாக்கம் நமக்கும் தண்ணீர் தாகம் எடுக்க வைத்துவிடுகிறது. 

 

வரட்சியான கிராமத்தில் இருக்கும் தண்ணீர் போல, குறைகள் படத்தில் இருந்தாலும், வற்றாத ஊற்றாக இருக்கும் அந்த கேணியில் இருக்கும் தண்ணீர் போல, படத்தில் நல்ல விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. 

 

மொத்தத்தில், அரசியல்வாதிகளை கூட நாகரீகமாக விமர்சித்திருக்கும் இந்த ‘கேணி’ சமூகத்திற்கு தேவையான ஒரு படமாகவும், ரசிகர்கள் பார்க்க வேண்டிய ஒரு படமாகவும் இருக்கிறது.

 

ஜெ.சுகுமார்