’கே.ஜி.எப் 2’ விமர்சனம்
Casting : Yash, Sanjay Dutt, Srinidhi Shetty, Raveena Tandon, Prakash Raj
Directed By : Prashanth Neel
Music By : Ravi Basrur
Produced By : Vijay Kiragandur, Karthik Gowda
முதல் பாகத்தில், கூலிக்காக கொலை செய்ய மும்பையில் இருந்து கே.ஜி.எப்-க்கு வரும் யஷ், அந்த பிரம்மாண்ட சாம்ரஜ்யத்தின் தலைவனை பலர் முன்பு நேரடியாக வீழ்த்த வேண்டும், என்று திட்டம் போட்டு, தனது அசுர பலத்தால் வீழ்த்தி விடுகிறார்.
கருடாவை வீழ்த்தி கே.ஜி.எப் சாம்ராஜ்யத்தை கைப்பற்றி அதை பல மடங்கு உயரத்துக்கு எடுத்து செல்லும் யஷ் இடம் இருந்து கே.ஜி.எப்-பை கைப்பற்ற ஆதிரா என்ற வில்லன் வருகிறார். மறுபக்கம், யஷின் கே.ஜி.எப்-ஐ கையகப்படுத்த இந்திய அரசு முடிவு செய்கிறது. இந்த இரு தரப்பின் எதிர்ப்பை சமாளித்து, தனது சாம்ராஜ்யத்தை யஷ் எப்படி காப்பாற்றுகிறார், என்பதே ‘கே.ஜி.எப் 2’-வின் கதை.
கருடா மரணம் அடைந்தால், கே.ஜி.எப்-பை சொந்தம் கொண்டாடலாம் என்று எண்ணியிருந்தவர்களை அழைத்து, இனி இங்கு எல்லாமே நான் தான், என்று கூறும் யஷின் சாம்ராஜ்யம் சில வருடங்களில் உச்சத்தை அடைகிறது. அதே சமயம் சிபிஐ, கேஜிஎப்-பில் நடப்பதை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் பிரதமர் ரவீணா டாண்டனிடமே சிபிஐ அதிகாரி நேரடியாகப் பேசி யஷ் மீது நடவடிக்கை எடுக்கும் அனுமதியைப் பெறுகிறார். இதனிடையே, தன்னுடைய கேஜிஎப் கோட்டையை இழந்த சஞ்சய் தத்தும் அதை மீண்டும் கைப்பற்ற நினைக்கிறார். இப்படியான சூழலில் யஷ் என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் கதை ஒரு பக்கம் இருந்தாலும், அதை படமாக்கிய விதம் தான் கே.ஜி.எப் 2-வின் ஹைலைட். இப்படி ஒரு மிரட்டலான மேக்கிங்கை இதுவரை நாம் பார்த்திருக்க மாட்டோம்.
ஆக்ஷன் படங்களிலேயே பெஸ்ட் படம் இது தான், மற்றவையெல்லம வேஸ்ட், என்று படத்தின் அத்தனை காட்சிகளும் சொல்ல வைக்கிறது.
ராக்கி பாய் என்ற கதாப்பாத்திரத்தில் முதல் பாகத்திலேயே மிரட்டலாக நடித்திருந்த யஷ், இந்த இரண்டாம் பாகத்தில் ஹீரோயிஷம் மூலம் ரசிகர்களை கவர்கிறார்.
நடிகர் யஷின் உழைப்பு திரை முழுவதும் நிறைந்திருக்கிறது. உடல் மொழியில் மட்டும் நடிக்காமல், தனது உணர்வுகளை கண்களின் மூலமாகவும் வெளிப்படுத்தியிருக்கும் யஷின் எண்ட்ரி மற்றும் அவரது ஹீரோயிஷக் காட்சிகள் அனைத்தும் கைதட்டல் பெறுகிறது. குறிப்பாக, துபாய் சென்று அங்குள்ள தலைவனை சந்தித்துப் பேசும் காட்சி, பிரதமர் அலுவலகத்திற்கே சென்று தன்னைப் பற்றியே தன் மீது புகார் கொடுக்கும் காட்சி என நிறைய காட்சிகளை சொல்லலாம்.
நாயகனுக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் என்பது குறைவாகவே இருக்கும். ஆனால், இந்த படத்தில் நாயகி ஸ்ரீநிதி வரும் காட்சிகளில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆதிரா என்ற மிரட்டல் வில்லனாக சஞ்சய் தத். அவரது தோற்றமும், உடல்மொழியும் ஹாலிவுட் வில்லனைப் பார்ப்பது போல உள்ளது.
பிரதமராக ரவீனா டாண்டன். பெண் என்றால் அழகு மட்டும்தான் என்று யார் சொன்னது, பெண்களின் கம்பீரமே தனி அழகு தான், என்பதை தனது நடிப்பால் நிரூபிக்கிறார் ரவீனா டாண்டன்.
சிறிய கதாபாத்திரங்களாக இருந்தாலும் அச்யுத் குமார், ஈஸ்வரி ராவ், சரண் ஆகியோரும் கவனம் பெறுகிறார்கள்.
இசையமைப்பாளர் ரவி பர்சுர், ஒளிப்பதிவாளர் புவன் கவுடா, படத்தொகுப்பாளர் உஜ்வால் குல்கர்ணி, ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் ஆகியோர் இயக்குநர் பிரஷந்த் நீலுக்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறார்கள். இவர்களுடைய பணிகள் தான் படத்தை பிரம்மாண்டமாகவும், பிரமிக்க வைக்கும்படியும் மாற்றியிருக்கிறது.
மிகப்பெரிய ஆக்ஷன் திரைப்படத்தை மிகப்பெரிய ஹீரோயிஷத்தோடும், அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும்படியும் கொடுத்திருக்கும் இயக்குநர் பிரஷாந்த் நீல், தனது ‘கே.ஜி.எப்’ சாப்டர் ஒன்று மற்றும் இரண்டு படங்களை இந்திய சினிமாவுக்கே முன்மாதிரி திரைப்படங்களாக கொடுத்திருக்கிறார்.
ஒரு நடிகரை எப்படி கையாள்வது, மற்றும் அவர் மூலம் எந்த விஷயத்தை எப்படி சொல்லலாம், என்று அனைத்தையும் மிக கவனமாக கையாண்டிருக்கும் இயக்குநர் பிரஷாந்த் நீல், ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் அளவுக்கு காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
இடைவேளை வரை திரைக்கதை மெதுவாக நகர்வது மற்றும் கே.ஜி.எப் முதல் பாகம் பார்க்காதவர்களுக்கு இரண்டாம் பாகம் புரியாதபடி இருப்பது, ஆகியவை மட்டுமே படத்திற்கு மைனஸ்.
இந்த இரண்டு குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், ‘கே.ஜி.எப் 2’ பல சுவாரஸ்யங்களும், ட்விஸ்ட்டுகளும் நிறைந்த செம படம்.
அதேபோல், படத்தின் இறுதிக்காட்சியில் 3-ம் பாகம் இருப்பது போல் லீட் வைக்கிறார்கள். அப்படி மூன்றாம் பாகம் எடுத்தார்கள் என்றால் நிச்சயம் இதைவிட பெரிதாக எடுப்பார்கள் என்ற நம்பிக்கையை இந்த இரண்டாம் பாகம் கொடுக்கிறது.
மொத்தத்தில், கே.ஜி.எப் 2 சிறப்பான தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும் சர்பிரைஸான ஆக்ஷன் படம்.