Feb 10, 2023 06:45 AM

’கொடை’ திரைப்பட விமர்சனம்

7cb3b8515e0c7aaa01390ded7dd77173.jpg

Casting : Karthick Singa, Robo Shankar, Anaya, M.S.Bhaskar, Marimuthu, Singamuthu, Ajay Ratnam, Bose Venkat, Swaminathan, Gnanasambanthan

Directed By : Raajaselvam

Music By : Subash Kavi

Produced By : SS Pictures

 

கொடைக்கானலில் தங்கும் விடுதி நடத்தி வரும் நாயகன் கார்த்திக் சிங்கா, ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் ஒன்றையும் நடத்தி வருகிறார். கொடைக்கானலில் தீயணைப்பு துறையில் பணியாற்றும் நாயகி அனயாவை ஒரு தலையாக காதலிக்கும் கார்த்திக் சிங்கா, தான் நடத்தும் ஆதரவற்ற இல்லத்தில் இருக்கும் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து அவர்களுடைய கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார்.

 

இதற்கிடையே நாயகி அனயாவின் தந்தை ஆனந்த் பாபு, கார்த்திக் சிங்காவின் ஆதரவற்ற இல்லத்திற்கு ரூ.25 லட்சம் நன்கொடை கொடுக்க, அந்த பணத்தை கார்த்திக் சிங்காவிடம் இருந்து அஜய் ரத்னத்தின் ஆட்கள் மோசடி செய்து பறித்துவிடுகிறார்கள். இழந்த பணத்தை மீட்க முடிவு செய்யும் கார்த்திக் சிங்கா, மோசடி செய்தவர்கள் வழியிலேயே சென்று அவர்கள் இதுவரை மோசடி செய்த அனைத்து பணத்தையும் அவர்களிடம் இருந்து கைப்பற்ற திட்டம் போடுகிறார். அந்த திட்டத்தில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா?, அவருடைய காதல் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

 

வாசன் கார்த்திக் என்ற பெயரோடு சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர், தற்போது தனது பெயரை கார்த்திக் சிங்கா என்று மாற்றிகொண்டிருக்கிறார். முதல் படத்தில் பார்த்த அதே இளமையோடும், துடிப்போடும் நடித்திருக்கும் கார்த்திக் சிங்கா, வழக்கம் போல் நடனம், சண்டைக்காட்சிகளில் பட்டையை கிளப்பியிருக்கிறார். ஆனால், நடிப்பில் அவரது திறமையை காட்டுவதற்கான சரியான வாய்ப்பு தான் அமையவில்லை. இந்த படத்திலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த பல இடங்களில் முயற்சித்திருந்தாலும், காட்சிகள் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்பதே நிஜம்.

 

நாயகியாக நடித்திருக்கும் புதுமுகம் அனயா, குடும்ப பாங்கான முகம். கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருப்பதோடு, கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாகவும் இருக்கிறார்.

 

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ரோபோ சங்கர், படம் முழுவதும் வருகிறார். ஆனால், அவர் வருக் காட்சிகளில் நமக்கு சிரிப்பு தான் வரவில்லை. அவரும் காமெடி செய்து சிரிக்க வைக்க எவ்வளவோ முயற்சி செய்தாலும், அனைத்தும் வீணாகிப்போனது தான் மிச்சம்.

 

வில்லனாக நடித்திருக்கும் அஜய் ரத்தினம், கொடூர வில்லனாக தன்னை அடையாளப்படுத்த வெறித்தனமாக நடித்திருக்கிறார்.

 

எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், மாரிமுத்து, சிங்மமுத்து, சுவாமிநாதன், கு.ஞானசம்பந்தம், ஆனந்த்பாபு, கே.ஆர்.விஜயா, வைஷாலி தணிகா, கராத்தே ராஜா என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும், யாரும் மனதில் நிற்கவில்லை.

 

கதை கொடைக்கானலில் நடப்பதால் கொடை என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். ஆனால், தலைப்பில் இருந்த கொடைக்கானலை ஒளிப்பதிவாளர் அர்ஜுனன் கார்த்திக், படத்தில் காட்டாதது பெருத்த ஏமாற்றம். 

 

சுபாஷ் கவியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்துள்ளது.

 

கதையை தெளிவாக சொல்ல வேண்டிய படத்தொகுப்பாளர் ஜி.சசிகுமார், எடுத்த காட்சிகளை எதுவும் செய்யாமல் அப்படியே ஒட்டி கொடுத்தது போல் காட்சிகள் ஒன்றுக்கொண்டு தொடர்பில்லாமல் நகர்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் ராஜா செல்வம், காதல் கலந்த ஆக்‌ஷன் கதையை பல குழப்பங்களோடு சொல்லியிருப்பதோடு, எந்த விஷயத்தை எப்படி சொல்வது என்று தெரியாமல் குழப்பமடைந்திருக்கிறார். குறிப்பாக படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தும் அவர்களை சரியாக பயன்படுத்தாமல், அவர்கள் போக்கிற்கு நடிக்க விட்டு வேடிக்கை பார்த்தது போல் காட்சிகள் இருக்கிறது.

 

நாயகனின் ஒருதலை காதல், சமூக சேவை மற்றும் மோசடி கும்பலிடம் இருந்து சாமர்த்தியமாக பணத்தை கைப்பற்றுவது, என ஒரு முழுமையான கமர்சியல் படத்திற்கான அத்தனை அம்சங்களும் கதையில் இருந்தாலும், அதை சரியான முறையில் திரைக்கதை மற்றும் காட்சி அமைத்து சொல்லாமல் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர்.

 

முதல் பாதியில் சற்று தடுமாற்றமடைந்திருக்கும் இயக்குநர் இரண்டாம் பாதி மற்றும் க்ளைமாக்ஸில் படத்தை சற்று சுவாரஸ்யமாக நகர்த்தியிருப்பதோடு, இரண்டாம் பாகம் இருப்பது போல படத்தையும் முடித்திருக்கிறார். இரண்டாம் பாகத்திலாவது, நடிகர்களை சரியான முறையில் பயன்படுத்தி, தெளிவான படத்தை கொடுப்பார் என்று நம்புவோம்.

 

மொத்தத்தில், ‘கொடை’ வட போச்சே... என்று புலம்ப வைக்கிறது.

 

ரேட்டிங் 2.5/5