Aug 17, 2018 09:49 AM

‘கோலமாவு கோகிலா’ விமர்சனம்

d1ab3e04db831c9e06ef687e3768b646.jpg

Casting : Nayanthara, Yogi Babu, Saranya Ponvannan, Naan Kadavul Rajendran

Directed By : Nelson Dilipkumar

Music By : Anirudh Ravichander

Produced By : Lyca Productions Allirajah Subaskaran

 

ஹீரோயின் சப்ஜெக்ட்டில் தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் நயந்தாரா, இந்த ‘கோலமாவு கோகிலா’ படம் மூலம் தனது வெற்றியை நிலை நிறுத்தினாரா இல்லையா, என்பதை பார்ப்போம்.

 

வறுமையில் இருக்கும் நயந்தாராவும் அவரது குடும்பமும் அடுத்த வேலை சாப்பாட்டுக்கே கஷ்ட்டப்படும் நிலையில் இருக்கிறார்கள். இதற்கிடையே, அவரது அம்மா சரண்யா கேன்சரால் பாதிக்கப்படுகிறார். அம்மாவை காப்பாற்றும் முயற்சியில் இறங்கும் நயந்தாரா, சூழ்நிலை காரணமாக போதை பொருள் கடத்தும் கும்பலிடம் சிக்கிக் கொள்ள, அவர்கள் நயந்தாராவை வைத்து போதை பொருட்களை கடத்த திட்டம் போடுகிறார்கள். அதன் மூலம் நயந்தாரா பிரச்சினையில் சிக்கிக்கொள்கிறார்.

 

ஏற்கனவே குடும்ப கஷ்டத்தில் இருக்கும் நயந்தாரா, போதை பொருள் கடத்தல் கும்பலின் திட்டத்தால் மேலும் பல பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள அவற்றில் இருந்து எப்படி விடுபட்டு தனது அம்மாவை காப்பாற்றுகிறார் என்பது தான் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் கதை.

 

ஒரு மாஸ் ஹீரோவுக்கு நிகராக கதை தேர்வில் கனவனம் செலுத்தி வரும் நயந்தாராவின், இந்த ’கோலமாவு கோகிலா’ அவரது திரைப் பயணத்தில் முக்கியமான படமாக இருக்கும். இயக்குநர் நெல்சன், ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதில் ரொம்பவே தெளிவாக இருந்திருக்கிறார் என்பதை படத்தின் காட்சிகள் அனைத்தும் நிரூபிக்கின்றது.

 

‘நானும் ரவுடி தான்’ படத்தில் வரும் காதம்பரி கதாபாத்திரத்தை நினைவுப்படுத்தினாலும் நடிப்பில் நயந்தாரா அசத்துகிறார். காட்சிக்கு ஏற்றவாறு தனது பாடி லேங்குவேச்சை மாறுபடுத்திக் காட்டுபவர், டார்க் காமெடி ஏரியாவில் தனது வசன உச்சரிப்பினாலும், டயலாக் டெலிவரியினாலும் தன்னை ஒரு நடிகையாக நிலைநிறுத்துகிறார்.

 

நயந்தாராவுக்கு பிறகு படத்தில் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் யோகி பாபு, திரையில் தோன்றியதும் திரையரங்கமே அதிருகிறது. பிறகு ஒரு டூயட் பாடலோடு முதல் பாதியில் காணாமல் போகும் யோகி பாபு, இரண்டாம் பாதி முழுவதும் நயந்தாராவுடன் டிராவல் பண்ணி நம்மை குஷிப்படுத்துவதோடு, திரைக்கதையோடு ஒட்டியே பயணிக்கிறார்.

 

Kolamaavu Kokila

 

சின்னத்திரை ஜாக்குலீன், நான் கடவுள் ராஜேந்திரன், சரண்யா பொண்வன்னன், மளிகை கடை சிறுவன் என்று படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் அவர் அவர் பங்குக்கு நம்மை சிரிக்க வைக்கிறார்கள். அதிலும் டோனி என்ற வேடத்தில் நடித்திருப்பவர் ரொம்பவே கவனிக்க வைக்கிறார். தனக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் நூறு சதவீதம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அவருக்கு அப்ளாஸ் காதை பிளக்கிறது.

 

சிவகுமார் விஜயின் ஒளிப்பதிவில் முழு படமும் ஒரே கலர் டோணில் பயணிக்கிறது. கதைக் களத்திற்கு ஏற்றவாறே கதாபாத்திரங்களையும் காட்டியிருக்கும் இவரது ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அனிருத்தின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டது. பின்னணி இசையில் தனக்கே உரித்தான பாணியில் படத்திற்கு பலம் சேர்த்திருக்கும் அனிருத் சில இடங்களில், கதாபாத்திரங்களின் வசனத்தை கூட கேட்க விடாமல் செய்வதை குறைத்திருக்கலாம்.

 

படத்தின் ஆரம்பமே செம விறுவிறுப்பாக தொடங்க, அதனை தொடர்ந்து வரும் காட்சிகளும் அதே விறுவிறுப்புடனே நகர்ந்தாலும், முழு படத்தையும் அதே விறுவிறுப்புடனே நகர்த்துவதற்கான வாய்ப்பு இருந்தும் இயக்குநர் அதை செய்யாமல் சற்று தடுமாறியிருக்கிறார். இருந்தாலும் படத்தில் இடம்பெற்றிருக்கும் காமெடி வசனங்கள் மற்றும் டார்க் காமெடி சூப்பராக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

 

நான் கடவுள் ராஜேந்திரன், யோகி பாபு ஆகியோரது காமெடி காட்சிகளுக்கு எப்படி ரசிகர்கள் சிரிக்கிறார்களோ அதேபோல் டோனி என்ற வேடத்திற்கும், நயந்தாராவின் டயலாக் டெலிவரிக்கும் திரையரங்கே அதிரும்படி சிரிக்கிறார்கள்.

 

அழுத்தம் இல்லாத க்ளைமாக்ஸ், விறுவிறுப்பாக நகர்த்த வேண்டிய திரைக்கதையை நயந்தாராவுக்காக சில இடங்களில் ஆமை போல நகர்த்தி செல்வது என்ற சிறு சிறு குறைகள் படத்தில் இருந்தாலும், கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, அவர்களது நடிப்பு மற்றும் அவர்களது காமெடி டைமிங் என அனைத்தும் படம் ஆரம்பம் முதல் முடியும் வரை நம்மை சிரித்துக் கொண்டே இருக்க செய்கிறது.

 

மொத்தத்தில், இந்த ‘கோலமாவு கோகிலா’ சாதாரண பெண்ணல்ல, சரக்குள்ள பெண் என்பதை நிரூபித்துவிட்டார்.

 

ரேட்டிங் 4/5