‘கொளஞ்சி’ விமர்சனம்
Casting : Samuthirakkani, Sangavi, Rajaji, Moorthy
Directed By : Dhanaram Saravanan
Music By : Natarajan Sankaran
Produced By : Naveen
’மூடர் கூடம்’ இயக்குநர் நவீன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தனராம் சரவணன் இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கொளஞ்சி’ எப்படி என்று பார்ப்போம்.
சேட்டை செய்யும் மகனுக்கும், கண்டிப்பான அப்பாவுக்கும் இடையே நடக்கும் மன ரீதியான போராட்டத்தை கதைக்களமாக கொண்டு, கிராமத்தில் நடைபெறும் ஜாதி பிரச்சினை குறித்து பேசியிருப்பது தான் ‘கொளஞ்சி’ படத்தின் கதை.
பெரியார் சிந்தனைவாதியான சமுத்திக்கனியின் மூத்த மகனான கொளஞ்சி மாணவப் பருவத்திற்கே உண்டான சேட்டை செய்பவராக இருக்கிறார். அவரது சேட்டை தனத்தை அப்பா சமுத்திரக்கனி கண்டிக்க, அவரது அம்மாவான சங்கவியோ கண்டுக்கொள்ளாமல் மகனை சுதந்திரமாக விடுகிறார். அப்பாவின் கண்டிப்பில் இருந்து தப்பித்து அம்மாவுடன் சுதந்திரமாக வாழ நினைக்கும் கொளஞ்சி, சூழ்நிலையை பயன்படுத்தி தனது அப்பா, அம்மாவை பிரித்துவிட, பிறகு தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து, அவர்களை மீண்டும் ஒன்று சேர்த்தாரா இல்லையா, என்பதே படத்தின் மீதிக்கதை.
குடும்ப பிரச்சினையை களமாக வைத்துக் கொண்டு சமூக பிரச்சினைப் பற்றி பேசியிருக்கும் இயக்குநர் தனராம் சரவணன், டைடில் கதாபாத்திரமான கொளஞ்சியின் சேட்டை தனத்தின் மூலம் சில நியாயமான கேள்விகளை நம் முன் வைக்கிறார். ஜாதி பெருமை பேசுபவர்களின் பிள்ளைகள் எப்படி வளர்கிறார்கள், அதே சமயம், ஜாதி இல்லை என்று கூறுபவர்களின் பிள்ளைகள் எப்படிப்பட்ட மனநிலையில் வளர்கிறார்கள், என்பதை இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் கிராமங்களில் தற்போது இருக்கும் ஜாதி பிரிவினை பிரச்சினைகளுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.
பெரியார் சிந்தனைவாதியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி தனது அனுபவ நடிப்பால் கவர்வதோடு, அவர் பேசும் வசனங்கள் மூலம் கைதட்டலும் பெருகிறார். சமுத்திரக்கனிக்கு எப்போதும் போல கருத்து சொல்லும் டைலர் மேட் ரோல் தான் என்றாலும், தன்னால் முடிந்தவரை நடிப்பில் வித்தியாசத்தை காட்டியிருப்பவர், பெரியார் சிந்தனைவாதியாக இருந்தாலும், தனது குடும்ப பிரச்சினை என்றவுடன், தனது ஆண்மையின் அதிகாரத்தை காட்டும் இடங்கள் ரசிக்க வைக்கிறது.
கொளஞ்சி என்ற வேடத்தில் நடித்திருக்கும் சிறுவன் பிரபாகரன், இயல்பான பள்ளி மாணவராக கவர்கிறார். அவர் செய்யும் சேட்டைகள் அவரது தந்தைக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், அவர் கேட்கும் கேள்விகள் நம்மை ரசிக்க வைக்கிறது. கொளஞ்சியின் நண்பர் வேடத்தில் நடித்திருக்கும் நசாத் வரும் இடங்கள் அனைத்தும் தியேட்டரில் சிரிப்பு சத்தம் ஒலிக்கிறது.
கொளஞ்சியின் அம்மாவாக நடித்திருக்கும் சங்கவி, அனுபவ நடிப்பால் கவர்ந்தாலும், கிராமத்து பெண் வேடத்திற்கு சற்று ஓட்டாமல் இருக்கிறார்.
இளம் காதல் ஜோடிகளாக வரும் ராஜாஜி - நைனா சர்வார் ஜோடியின் கதாபாத்திரமும், காதலும் அதை சுற்றி வரும் பாடலும் திணித்தது போல இருப்பதோடு, விறுவிறுப்பான திரைக்கதைக்கு ஸ்பீட் பிரேக்கராகவும் அமைந்துவிடுகிறது.
இயக்குநர் தனராம் சரவணன் மற்றும் தயாரிப்பாளர் நவீன் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கும் வசனங்கள் கூர்மையாக உள்ளது. படத்தில் சமுத்திரக்கனி மூலம் இவர்கள் பேசியிருக்கும் வசனங்கள் அனைத்தும் கைதட்டல் பெறுகிறது. விஜயன் முனுசாமியின் ஒளிப்பதிவும், நட்ராஜன் சங்கரின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
பலவீனமான வில்லன் கதாபாத்திரம், திருப்பம் இல்லாத திரைக்கதை படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்திருந்தாலும், பலமான வசங்கள் அதை சரி செய்துவிடுகிறது.
சிறுபிள்ளைகளை சிறுவர்களாக மட்டுமே பார்க்காமல், அவர்கள் சொல்வதில் இருக்கும் நியாயத்தையும், அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கிறது, என்பதையும் பெரியவர்கள் உணர வேண்டும் என்பதை சொல்லும் இப்படத்தின் மூலம் சமூகத்திற்கு தேவையான விவாதத்தையும் இயக்குநர் தனராம் சரவணன் தொடங்கியிருக்கிறார்.
கர்ம்ஷியலுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் காதல் பாடல்கள், காதல் காட்சிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், இந்த ‘கொளஞ்சி’ நிச்சயம் பார்க்க வேண்டிய படமே
ரேட்டிங் 3/5