Sep 22, 2017 09:17 AM

‘கொஞ்சம் கொஞ்சம்’ விமர்சனம்

9719c816449f03258468f39f2ee021a8.jpg

Casting : கோகுல் கிருஷ்ணா, நீனு, ப்ரியா மோகன், அப்பு குட்டி, மதுமிதா, மன்சூர் அலிகான்

Directed By : உதய் சங்கரன்

Music By : வல்லவன்

Produced By : பெட்டி சி.கே, பி.ஆர்.மோஹன்


கேரளாவில் உள்ள இரும்புக்கடை ஒன்றில் பணிபுரியும் ஹீரோ கோகுல் கிருஷ்ணா, விடுமுறை கிடக்கும் போது தமிழ்நாட்டில் உள்ள தனது அம்மாவையும், அக்காவையும் பார்த்துவிட்டு வருபவர், தான் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகே வசிக்கும் தமிழ் பெண்ணான ஹீரோயின் நீனுவை காதலிக்கிறார்.

 

விபத்து ஒன்றால் காது கேட்கும் திறனை இழக்கும் ஹீரோவின் அக்காவான ப்ரியா மோகனின் திருமணம் நின்றுபோய் விடுகிறது. பிறகு ஹீரோவின் அம்மாவும் திடீரென்று உயிரிழக்க, தனது அக்காவுடன் கேரளாவுக்கு வரும் ஹீரோ, ஒரு கட்டத்தில் தனது காதலியையும் இழந்துவிடுகிறார். அக்காவின் மருத்துவ செலவுக்கான பணத்தை சம்பாதிக்க வேண்டும், மறுபுறம் சித்தி கொடுமையால் தொலைத்த காதலியை கண்டுபிடிக்க வேண்டும், என்ற முயற்சியில் இறங்கும் ஹீரோவுக்கு, திருட்டு பட்டம், போலீஸ் அடி, என்று பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வர, அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் அவர், அவைகளை எப்படி சமாளித்து வாழ்க்கையில் சாதிக்கிறார் என்பது தான் இந்த ‘கொஞ்சம் கொஞ்சம்’ படத்தின் கதை.

 

ஹீரோ கோகுல் கிருஷ்ணன், ஹீரோயின் நீனு, புதியவர்கள் தான் என்றாலும், நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். அதிலும் ஹீரோ கோகுல் ரசிகர்களை கவரும் விதத்தில் நடித்திருப்பதோடு, நடனத்திலும் அசத்துகிறார். ஹீரோவின் அக்காவாக நடித்துள்ள ப்ரியா மோகனும் தனது கதாபாத்திரம் மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

இரும்புக்கடை முதலாளியாக நடித்துள்ள அப்புக்குட்டியி,ன் குட்டியான காமெடி காட்சிகள் ரொம்ப குறைவாகவே ரசிகர்களை சிரிக்க வைத்தாலும், அவரது குணச்சித்திர நடிப்பு நிறைவாக உள்ளது.

 

வல்லவனின் இசையில் பாடல் வரிகள் தெளிவாக புரியும் விதத்தில் இருப்பதோடு, பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. பி.ஆர்.நிக்கி கண்ணமின் ஒளிப்பதிவில் கேரளா மட்டும் அழகல்ல, பழைய இரும்புக்கடையும் அழகாகவே தெரிகிறது.

 

எந்த கஷ்ட்டம் வந்தாலும் சோர்ந்து விடாமல் எதிர்த்து போராட வேண்டும், என்பதை இளமை ததும்பும் காதல் கதையோடும், அக்கா தம்பி பாசப்போராட்டம் மூலமாகவும் சொல்லியிருக்கும் இயக்குநர் உதய் சங்கரன், ரொம்ப பழைய மெசஜை, அதே பழமையோடு சொல்லியிருந்தாலும் நேர்மையாக சொல்லியிருக்கிறார்.

 

நேர்மையாக இருப்பது பெரிதல்ல, எதுவும் இல்லாத போதும் ஒருவன் நேர்மையாக இருக்கிறானே அது தான் ரொம்ப பெரியது, என்ற விஷயத்தை அழகாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர், தவறு செய்வதற்கு முன்பாக, பல முறை யோசித்தால் தவறே நடக்காது, என்ற அறிவுரையை இளைஞர்களுக்கு அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

 

ஏற்கனவே பல படங்களில் நாம் பார்த்திருக்கும் விஷயம் தான் என்றாலும், அதையே சில சுவாரஸ்யங்களோடும், இளைஞர்களுக்கு பாடம் சொல்லும் விதமான காட்சிகளோடும், காதல், காமெடி, செண்டிமெண்ட் என்று அனைத்தும் சேர்த்து ஒரு கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கும் இந்த ‘கொஞ்சம் கொஞ்சம்’ நிறைவான படமாகவே உள்ளது.

 

ஜெ.சுகுமார்