Mar 01, 2025 07:32 AM

’கூரன்’ திரைப்பட விமர்சனம்

d7719f0b1ed6ef1f216ec540a9ab4146.jpg

Casting : SA Chandrasekar, YG Mahendran, Balaji Sakthivel, Kavitha Bharathi, Saravana Subbaiah, Indraja Robo Shankar

Directed By : Nithin Vemupathi

Music By : Sidharth Vibin

Produced By : Kana Productions and VB Combines - Director Vicky

 

கொடைக்கானலில் சாலை ஓரமாக தனது தாயுடன் நடந்து செல்லும் நாய்க்குட்டி கட்டுப்பாடு இல்லாத பயணித்த கார் மோதி இறந்துவிடுகிறது. தனது குட்டியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு போராடும் தாய் நாயின் உணர்வை புரிந்துக்கொள்ளும் பிரபல வழக்கறிஞர் எஸ்.ஏ.சந்திரசேகர், நாயின் புகாரை காவல்துறை ஏற்க வைப்பதோடு, அந்த வழக்கில் வாதிட்டு தாய் நாய்க்கு நீதி வாங்கிக் கொடுக்க போராடுகிறார். அவரது போராட்டம் வெற்றி பெற்றதா ?, தாய் நாய்க்கு நீதி கிடைத்ததா ? என்பதை நம்பமுடியாத காட்சிகளுடன், நம்பும் வகையில் தொழில்நுட்ப கருவிகள் மூலம் சொல்வதே ‘கூரன்’.

 

கூர்மையான அறிவுத்திறன் கொண்ட  ஒரு நாய், தனக்கு நடந்த அநீதிக்காக போராடுவதால் ’கூர்மையான அறிவுத்திறன்’ என்பதை சுருக்கி ‘கூரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் வயதுக்கு ஏற்ற வேடத்தில் கூர்மையாக நடித்திருக்கிறார். வசன உச்சரிப்பு, உடல் மொழி என அனைத்திலும் நிதானமாக செயல்பட்டிருப்பவர் நீதிமன்ற வழக்கின் போதும் தனது நிதானமான மற்றும் தெளிவான வாதத்தின் மூலம் நாய் பக்கம் இருக்கும் நியாயத்தை படம் பார்ப்பவர்களிடமும் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.

 

ஜென்ஸி மற்றும் பைரவா என்ற பெயர் கொண்ட நாய் படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக வலம் வந்திருக்கிறது. பயிற்சியாளரின் சொல்படி கேட்டு சிறப்பாக நடித்திருக்கிறது.

 

நீதிபதியாக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சரவண சுப்பையா, வழக்கறிஞராக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல், சத்யன், ஜார்ஜ் மரியான், கவிதா பாரதி, இந்திரஜா ரோபோ சங்கர் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் மார்டின் தன்ராஜ் கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, நாயின் நடவடிக்கைகளை நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

 

இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

சட்டம் என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல நாய் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் சமம் என்ற கருத்தை தனது திரைக்கதை மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர், “மதுபானக் கடைகள் மூலம் எவ்வளவு பணம் வருகிறது என்று பார்க்கும் அராங்கம், அதன் மூலம் எவ்வலவு பிணம் விழுகிறது, என்பதை பார்ப்பதில்லை” உள்ளிட்ட தனது கூர்மையான வசனங்கள் மூலம் சமூக சீர்க்கேடுகளை கோடிட்டு காட்டியுள்ளார்.

 

கார் ஏற்றி கொல்லப்பட்ட குட்டிக்காக ஒரு தாய் நாய் எப்படி காவல் நிலையம் செல்லும் ?, அப்படியே காவல் நிலையம் செல்லும் அந்த நாய்க்காக வழக்கறிஞரால் நீதிமன்றத்தில் வாதாட முடியுமா? அதற்கு நீதிமன்றம் அனுமதிக்குமா?, அப்படியே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும்,  என்ன நடந்து என்பதை நாயால் சொல்ல முடியுமா ? இப்படி பல கேள்விகள் பார்வையாளர்கள் மனதில் எழுந்தாலும்  அனைத்து கேள்விகளுக்கும் வரலாற்று கதை மற்றும் தொழில்நுட்ப ரீதியாக பதிலளிக்கும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் நிதின் வேமுபதி.

 

பார்வையற்றவரை சம்பவத்தை கண்ணால் பார்த்த சாட்சியாக சித்தரித்திருப்பது, அவருக்கான தனித்திறன் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சியளித்தாலும், அனைத்தையும் புரியும்படி விவரித்திருக்கும் இயக்குநர் நிதின் வேமுபதி, தாய்மை உணர்வு என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘கூரன்’ நீதி அனைவருக்கும் சமம் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறது.

 

ரேட்டிங் 3/5