Oct 14, 2018 08:00 AM

‘கூத்தன்’ விமர்சனம்

b86d2a74496eef6d5b0466c33ed854a8.jpg

Casting : Rajkumar, Srijitha Ghosh, Kira Narayanan, Sonal Singh, Urvasi

Directed By : Venky

Music By : Balaji

Produced By : Nilgirish Murugan

 

’லக்‌ஷ்மி’ திரைப்படத்தை தொடர்ந்து நடனத்தை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் இந்த ‘கூத்தன்’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

பிலிம் நகர் என்ற இடத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் திரைத்துறை தொழிலாளர்களில் ஒருவரான ஹீரோ ராஜ்குமார், தனது நண்பர்களுடன் சேர்ந்து நடனக் குழு ஒன்றை நடத்தி வருகிறார். அந்த குழுவின் மூலம் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வென்று வருகிறார். அதே சமயம், பெரிய நடன இயக்குநரான நாகேந்திர பிரசாத்தும் நடன பள்ளி ஒன்றை நடத்தி வருவதோடு, தனது நடனக் குழு மூலம் அனைத்து போட்டிகளிலும் முதலிடத்தை பிடித்து வருகிறார். இவரை எப்படியாவது நடனத்தில் வென்றாக வேண்டும் என்று ஹீரோயின் ஸ்ரீஜித்தா கோஷ் நினைப்பதோடு, அவர் மீது கொலைவெறி கோபமாகவும் இருக்கிறார்.  (அது ஏன் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது)

 

இதற்கிடையே, நடனப் போட்டி ஒன்றில், நாயகி ஸ்ரீஜித்தா கோஷ், நாகேந்திர பிரசாத்தைக் காட்டிலும் சிறப்பாக நடனம் ஆடினாலும், முதல் பரிசு என்னவோ நாகேந்திர பிரசாத்துக்கே வழங்கப்பட, இதை கண்டு ஆத்திரமடையும் ஹீரோ ராஜ்குமார், ஸ்ரீஜித்தாவுக்கு ஆதரவாக பேசுகிறார். இதன் மூலம் ராஜ்குமாருக்கும், ஸ்ரீஜித்தா கோஷுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு பிறகு அது காதலாகிறது.

 

இந்த நிலையில், ஹீரோ ராஜ்குமார் தங்கியிருக்கும் பிலிம் நகரின் முதலாளி அந்த இடத்தை விற்க முடிவு செய்து, அங்கிருப்பவர்களை காலி செய்யுமாறு கூறுவதோடு, தொடர்ந்து இதே இடத்தில் இருக்க வேண்டும் என்றால், தனக்கு ரூ.1 கோடி கொடுத்து இடத்தை நீங்களே வாங்கிக்கொள்ளுங்கள் என்றும் கூறுகிறார். அந்த ஒரு கோடி ரூபாயை கொடுக்க ஹீரோ சம்மதித்துவிட, அந்த பணத்திற்காக ஆசிய அளவில் நடைபெறும் நடனப் போட்டியில் ஹீரோ தனது குழுவினருடன் கலந்துக்கொள்ள முடிவு செய்கிறார். அவருக்கு ஹீரோயின் ஸ்ரீஜித்தா மற்றும் அவரது நடன ஆசிரியை அக்காவும் உதவி செய்ய, ஹீரோ நடன ஜாம்பவனான நாகேந்திர பிரசாத்துடன் மோத, அவர் ஹீரோவுக்கு பல நெருக்கடிகளை கொடுக்கிறார்.

 

அத்தனை நெருக்கடிகளையும் தாண்டி ஹீரோ நடனப் போட்டியில் வெற்றி பெற்றாரா, இல்லையா தனது பிலிம் நகர் மக்களை காப்பாற்றினாரா, இல்லையா என்பது தான் ‘கூத்தன்’ படத்தின் கதை.

 

அறிமுக ஹீரோ ராஜ்குமார், ஹீரோயின் ஸ்ரீஜித்தா கோஷ், கிரா நாராயணன், சோனல் சிங் என அனைவரும் ஆர்வக்கோளாறாக நடித்திருக்கிறார்கள். ஊர்வசி மட்டும் ஆறுதலாக தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

 

நலிவடைந்த சினிமா கலைஞர்கள் பற்றி படத்தில் பேச முயற்சித்திருக்கும் இயக்குநர் வெங்கி, அதை நடன பின்னணியில் சொல்லியிருக்கிறார். நடனம், சினிமா கலைஞர்கள் வாழ்க்கை என்ற இரண்டையுமே அழுத்தமில்லாமல் சொல்லியிருப்பவர், திரைக்கதையை அலங்கோலமாகவும் அமைத்திருக்கிறார்.

 

ஆசிய அளவிலான நடனப் போட்டி நடைபெறுவதாக படத்தில் காட்டிவிட்டு, குறிப்பிட்ட மூன்று குழுவினரை மட்டுமே நடனம் ஆட வைக்கிறார். இதற்கு உள்ளூர் போட்டியாகவே அந்த காட்சியை வடிவமைத்திருக்கலாம்.

 

வில்லனாக நடித்திருக்கும் நடன இயக்குநர் நாகேந்திர பிரசாத், நடன ஜாம்பவனாக திகழ்கிறார். ஆனால், அவரது நடனம் மட்டும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. அதுவும் ரசிக்கும்படியாகவும் இல்லை.

 

பாலாஜியின் இசையும், மாடசாமியின் ஒளிப்பதிவும் எந்தவித குறையும் இல்லாமல் இருந்தாலும், காட்சி அமைப்பும், திரைக்கதையும் படம் பார்ப்பவர்களை தியேட்டரைவிட்டு எழுந்து ஓட வைக்கிறது.

 

மொத்தத்தில், இந்த ‘கூத்தன்’ ”எதுக்கு தான் இங்க வந்து மாட்டீக்கிட்டோமோ” என்று படம் பார்ப்பவர்களை குமுற வைக்கிறான்.

 

ரேட்டிங் 2/5