Sep 04, 2017 07:43 PM

'குரங்கு பொம்மை' விமர்சனம்

7dd585253877be03ca63d800ed4e391f.jpg

Casting : விதார்த், பரதிராஜா, டெல்னா டேவிஸ், ரமா, பி.எ.ல்தேனப்பன், முருகவேல், கல்கி

Directed By : நித்திலன்

Music By : பி.அஜனீஷ் லோக்நாத்

Produced By : ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ்

 

குரங்கு பொம்மை போட்ட பை ஒன்றை ஒருவர் தொலைத்துவிட, அது விதார்த் கைக்கு கிடைக்கிறது. தொலைத்தவரிடம் அந்த பையை திருப்பிக் கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கும் விதார்த், சமூகவலைதளத்தில் பை குறித்த தகவலை வெளியிட, சிலர் என்னுடையது தான் என்று விதார்த்துக்கு போன் செய்ய, விதார்த்தோ சரியான நபரிடம் அந்த பையை ஒப்படைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறார். அதே சமயம், தனது நண்பனுக்காக கடத்தல் சிலையை கை மாத்த சென்னைக்கு வரும் விதார்த்தின் அப்பாவான பாரதிராஜா காணாமல் போகும் செய்தி விதார்த்துக்கு வர, பையை ஒப்படைக்கும் பணியுடன் தனது அப்பாவையும் தேடும் பணியில் இறங்குகிறார்.

 

பூட்டப்பட்ட அந்த பையினுள் என்ன இருக்கிறது? என்ற கேள்வியோடு சுவாரஸ்யமாக நகரும் திரைக்கதையை, பாரதிராஜா காணாமல் போகும் எப்பிசோட் பரபரப்பாக்க, இறுதியில் என்ன நடக்க போகிறது என்ற எதிர்ப்பார்ப்பில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் சீட் நுணியில் உட்கார செய்கிறது முழுப்படமும்.

 

டைடிலில் ஹீரோ என்று பெயர் போட்டாலும், படத்தின் ஹீரோ தான் இல்லை, என்பதை தெரிந்தும் கதையின் நாயகனாக விதார்த் தேர்வு செய்யும் அனைத்து படங்களும் பர்பெக்ட் படங்களாக இருக்கின்றன. அந்த வரிசையில் இந்த படம் பக்கா பர்ப்பக்ட் படம். நடிக்க தனக்கு பெரிய அளவில் வாய்ப்பில்லை என்றாலும், கிடைத்த வாய்ப்பில் தனது இயல்பான நடிப்பால் கவர்கிறார்.

 

இந்த படத்தை பார்ப்பவர்கள், இனி பாரதிராஜாவை ’இயக்குநர் இயமம்’ என்று சொல்வதை விட்டுவிட்டு, ’நடிகர் இமயம்’ என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதற்கு முன்பு பல படங்களில் பாரதிராஜா நடித்திருந்தாலும் அவரை ஒரு நடிகராக அவரது 100 சதவீத திறமையை வெளிக்காட்டிய படம் என்றால் இதுவாகத்தான் இருக்கும். இயகுநராக பல நல்ல கதைகளை சொல்லி தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்த பாரதிராஜா, இந்த படத்தில் நடிகராக சொல்லும் கதையை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டு இருக்கலாம் போலிருக்கிறது. அப்படி ஒரு தொனியில், அந்த இரண்டு நிமிடத்தில் முகத்தில் பலவிதமான எக்ஸ்பிரசன்களோடு பாரதிராஜா கதை சொல்லும் அந்த காட்சிக்கு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

அப்பாவித்தனமான நடிப்புக்கு ஐ.எஸ்.ஐ சான்றிதழ் கொடுத்தால் அது டெல்னா டேவிஸுக்கு தான் கிடைக்கும். அந்த அளவுக்கு அப்பாவியாக நடித்திருக்கும் அவர் ஹீரோயினுக்கான ஒப்பனை இல்லாமல் திரையில் தோன்றுகிறார். பிக்பாக்கெட் திருடன் வேடத்தில் நடித்துள்ள கல்கி என்ற நடிகரின் காட்சிகள் அனைத்தும் காமெடியாக இருந்தாலும் அவரது நடிப்பு ரசிகர்களை உற்று கவனிக்க வைக்கிறது. திருடிவிட்டு சிக்கிக்கொண்டு தர்ம அடி வாங்கும் போது சட்டென்று “அங்கே பாருங்க கேமரா..” என்று சொல்லி எஸ்கேப் ஆகி ஆடியன்ஸிடம் அப்ளாஸ் வாங்குபவர், அழுத்தமான திரைக்கதை ஓட்டத்தின் நடுவே நம்மை அவ்வபோது சிரிக்க வைக்கிறார்.

 

தயாரிப்பாளர்களாக இருந்து நல்ல நடிகராக உருவெடுத்தவர்களின் பட்டியலில் பி.எல்.தேனப்பனின் பெயரையும் சேர்க்க வேண்டும். வில்லனா, நல்லவனா என்று ரசிகர்களை யோசிக்க வைக்கும் அளவுக்கு ஒரே கேரக்டரில் இருவித நடிப்பைக் கொடுத்திருக்கும் தேனப்பன், இந்த படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர் ஆகிவிடுவார் என்பது மட்டும் உறுதி.

 

குணச்சித்திர வேடங்களில் நடித்து, மேடை நாடக நடிப்பை வெளிப்பத்திக் கொண்டிருந்த முருகவேலுக்கு இப்படிப்பட்ட கொடூர வில்லன் வேடத்தை கொடுத்த இயக்குநரின் நம்பிக்கையை அவர் காப்பாற்றியுள்ளார். சாதாரணமாக பேசிவிட்டு குடிக்க தண்ணீர் கொடுத்து கொலை செய்யும் அவரது பாணி நம்மை அதிர வைப்பதுடன், இறக்கும் நேரத்திலும் எந்தவித பயமும் இல்லாமல், “என்னை கொல்ல தான் முடியும், உன்னால வேற என்ன செய்ய முடியும்” என்று அவர் நக்கலாக கேட்டு, தனது வில்லத்தனத்தின் வீரியத்தை வெளிப்படுத்தும் இடமும், அவரை கொலை செய்யாமல், அதற்கும் மேலே என்ற ரீதியில் விதார்த் அவருக்கு கொடுக்கும் தண்டனையும் ஆடியன்சிடம் அப்ளாஸ் வாங்குகின்றன.

 

கஞ்சா கருப்பு, கிருஷ்ணமூர்த்தி, விதார்த்தின் அம்மாவாக நடித்த ரமா, பாலா சிங் என்று படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வச்சணையில்லாமல் வாரி இறைத்திருக்கிறார்கள்.

 

சிறிய பட்ஜெட் படம் என்று வார்த்தையில் சொன்னாலும், படத்தின் பெரும்பாலான காட்சிகள் மக்கள் கூட்டம் நிறைந்த, போக்குவரத்து அதிகமுள்ள முக்கிய சாலைகளிலும், சென்னையின் சந்து பொந்துகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. நடிகர்களை மட்டுமல்லாது காட்சிகளையும் இயல்பாக படம்பிடித்துள்ள ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமார் அவை நம் மனதில் ஒட்டிக்கொள்ளும் வகையிலும் படமாக்கியிருக்கிறார்.

 

திரைக்கதையின் ஓட்டத்திற்கு பாடல்கள் தடையாக அமைந்தாலும் பி.அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை திரைக்கதைக்கு கூடுதல் பரபரப்பை கொடுத்திருக்கிறது. அபினவ் சுந்தர் நாயக் காட்சிகளுக்கு கத்திரி போட்ட விதம் சாதாரண படத்தை, சர்வதேச தரத்திலான படமாக்கியிருக்கிறது.

 

தொலைந்த ஒரு பையை வைத்து இப்படி ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையை அமைக்கலாம் என்பதை நிரூபித்துள்ள இயக்குநர் நித்திலன், இனி படம் பண்ணப் போகும் அறிமுக இயக்குநர்களுக்கு நல்ல வழிக்காட்டியாக இருப்பார். அந்த அளவுக்கு ‘குரங்கு பொம்மை’ படத்தை மிக நேர்த்தியாக கையாண்டிருக்கிறார். 

 

பையினுள் பணம் இருக்குமோ அல்லது கடத்தப்பட்ட சிலை இருக்குமோ!, அந்த பை எப்படி இங்கே வந்தது? என்ற பலவிதமான கேள்விகளோடு இண்டர்ஸ்டிங்காக நகரும் திரைக்கதையில், பையினுள் இருப்பதை இயக்குநர் சொல்லும் இடமும், அந்த பொருளும் ஒட்டு மொத்த திரையரங்கத்தையே கலங்கடித்து விடுவதுடன், உயிர் இல்லாத அந்த குரங்கு பொம்மை உயிர் பெற்றுவிடுகிறது. குரங்கு பொம்மை பையையும் ஒரு கதாபாத்திரமாக காட்டியிருக்கும் இயக்குநர் நிதிலனுக்கு எழுந்து நின்று அப்ளாஷ் கொடுக்கலாம்.

 

மொத்தத்தில் இந்த ‘குரங்கு பொம்மை’ இந்த ஆண்டின் தவிர்க்க முடியாத திரைப்படங்களில் முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது.

 

ஜெ.சுகுமார்