Sep 01, 2023 07:05 PM

’குஷி’ திரைப்பட விமர்சனம்

00179fc3fc4344515da9ba3027eb91b5.jpg

Casting : Vijay Devarakonda, Samantha, Sachin Khedekar, Saranya Ponvannan, Murali Sharma, Lakshmi

Directed By : Shiva Nirvana

Music By : Hesham Abdul Wahab

Produced By : Naveen Yerneni & Y. Ravi Shankar

 

நாத்திகவாதியான சச்சின் கேடகெரின் மகன் விஜய் தேவரகொண்டாவும், ஜோதிட நிபுணரான பிராமணர் முரளி சர்மாவின் மகள் சமந்தாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க இரு குடும்பத்தாரும் முடிவு செய்கிறார்கள். ஆனால், இருவரின் ஜாதகப்படி தோஷம் இருப்பதாகவும், அதற்கு பரிகார பூஜை செய்தால் மட்டுமே இவர்களது வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று முரளி சர்மா கூறுகிறார். அதற்கு சச்சின் கேடகெர் மறுப்பு தெரிவிப்பதோடு, அப்படி ஒரு திருமணமே தேவையில்லை என்ற முடிவுக்கும் வருகிறார். இதனால் பெற்றோர்களை எதிர்த்து விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் பதிவு திருமணம் செய்து கொள்கிறார்கள்.

 

திருமணமாகி ஒரு வருடம் முடிவதற்குள் விஜய் தேவரகொண்டா - சமந்தா தம்பதி வாழ்க்கையில் குழந்தை பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு தனது தந்தை சொல்லும் ஜாதக தோஷம் தான் காரணம் என்று சமந்தா நம்ப, விஜய் தேவரகொண்டா அதை ஏற்க மறுக்கிறார். இதனால், இருவருக்கும் இடையிலான கருத்துவேறுபாடு பெரிதாகி இருவரும் பிரிந்துவிட, பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

விஜய் தேவரகொண்டா சமந்தாவை உருகி உருகி காதலித்து ரசிகர்களையும் உருகச்செய்து விடுகிறார். சமந்தாவை காதலோடு அவர் பார்க்கும் ஒவ்வொரு பார்வையும் காஷ்மீர் பனிப்பாறைகளும் உருகிவிடும் அளவுக்கு பெரும் காதல்கொண்ட பார்வைகளாக இருக்கிறது. காதலியாக பெண்ணை ரசிப்பவர், மனைவியான உடன் அவருடைய செயலை வெறுப்பது, அதே மனைவி பிரிந்த உடன் அவர் இல்லாமல் தவிப்பது என்று ஆண்களின் அத்தனை உணர்ச்சிகளையும் நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

காஷ்மீர் ஆப்பிள் போல் பிரஷாக இருக்கும் சமந்தா, தன் கண் பார்வைகளால் ரசிகர்களின் இதயங்களை பந்தாடுகிறார். தன்னை துரத்தி துரத்தி காதலிக்கும் விஜய் தேவரகொண்டாவை அவர் பார்க்கும் விதமும், பிறகு காதலில் விழுந்தவுடன் அவர் வெளிப்படுத்தும் காதலும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. எந்த இடத்திலும் அதிகமாக நடிக்காமல் அளவான நடிப்பை கொடுத்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார் சமந்தா.

 

முரளி சர்மா, சச்சின் கேடகெர், சரண்யா பொன்வண்ணன், லட்சுமி என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அவர் அவர் வேடத்திற்கு நியாயம் சேர்க்கும் விதத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் முரளி.ஜி காஷ்மீரை காட்டும் முதல் ஷாட்டிலேயே நம் கண்களை கொள்ளையடித்து விடுகிறார். அதை தொடர்ந்து அவர் காட்டும் காஷ்மீர் காட்சிகள் அனைத்துமே கொள்ளை அழகாக இருப்பதோடு, விஜய் தேவரகொண்டா - சமந்தா ஜோடியை பேரழகாக காட்டி ரசிக்க வைத்திருக்கிறார்.

 

இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வாஹப்பின் இசையில் இரண்டு பாடல்கள் ஏற்கனவே பெரிய ஹிட்டாகி விட்டது. காட்சிகளுடன் அந்த பாடல்களை பார்க்கும் போது கூடுதலாக ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்களில் வரிகள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் இசை ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் காதலை நம் இதயத்துக்குள் கடத்திவிடுகிறது.

 

படத்தொகுப்பாளர் பிரவின் புதிக்கு மிகப்பெரிய வேலை இருந்திருக்கிறது. ஆனால், அதை அவருடைய பெரிய மனது செய்ய தவறியிருக்கிறது. பல இடங்களில் அவர் கத்திரி போட்டிருந்தால் படம் கூடுதல் கவனம் பெற்றிருக்கும்.

 

முழுக்க முழுக்க காதல் கதை, நாம் ஏற்கனவே பார்த்த பாணியிலான காதல் கதை என்றாலும், அதை வேறு வடிவில் ரசிகர்களுக்கு பிடித்தது போல் கொடுத்ததில் இயக்குநர் ஷிவ நிர்வாணா வெற்றி பெற்றிருந்தாலும், பல இடங்களில் காட்சிகளின் நீளத்தால் ரசிகர்களை சோர்வடையவும் செய்திருக்கிறார்.

 

படத்தில் பல நட்சத்திரங்கள் இருந்தாலும், விஜய் தேவரகொண்டா - சமந்தா இவர்கள் மட்டுமே முழு படத்தையும் சுமந்திருக்கிறார்கள். படம் முழுவதும் இவர்களை ரசிக்கும்படி காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர், அதை சுருக்கமாக கையாண்டிருந்தால் படம் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்திருக்கும். காட்சிகளின் நீளத்தை சகித்துக்கொண்டு பொருமையாக பார்த்தால் நிச்சயம் ரசிகர்களை இந்த படம் குஷிப்படுத்தும்.

 

மொத்தத்தில், விஜய் தேவரகொண்டா - சமந்தா ஜோடியின் காதல் கெமிஸ்ட்ரிக்காக நிச்சயம் இந்த ‘குஷி’-யை ஒரு முறை பார்க்கலாம்.

 

ரேட்டிங் 3/5