‘குற்றம் புரிந்தால்’ திரைப்பட விமர்சனம்
Casting : Aadhik Babu, Archana, MS Baskar, Abinaya, Arul D.Shankar, Ram, Nishanth
Directed By : Disney
Music By : KS Manoj
Produced By : Amaravathy Film Studios - Aathur Arumugam and Suganthi Arumugam
நாயகன் ஆதிக் பாபு, மாமா எம்.எஸ்.பாஸ்கரின் ஆதரவில் வளர்கிறார். மாமன் மகள் நாயகி அர்ச்சனாவும் ஆதிக் பாபுவும் காதலிக்கிறார்கள். படிப்பு முடிந்த உடன் அர்ச்சனாவுக்கும், ஆதிக் பாபுக்கும் திருமணம் செய்து வைக்க எம்.எஸ்.பாஸ்கர் முடிவு செய்கிறார். திடீரென்று இவர்களது வீட்டுக்குள் நுழையும் மூன்று பேரால், மகிழ்ச்சியான இவர்களது வாழ்க்கை சிதைக்கப்படுகிறது.
மாமாவையும், காதலியையும் பரிகொடுக்கும் நாயகன் ஆதிக் பாபு, சட்டத்தின் மூலம் அந்த மூன்று பேருக்கு தண்டனை வாங்கி கொடுக்க முயற்சிக்கிறார். ஆனால், சட்டமும் அவர்களுக்கு வளைந்துக்கொடுக்க, அவர்களுக்கான தண்டனையை தானே கொடுக்க முடிவு செய்கிறார். அந்த மூன்று பேர் யார்? அவர்களை ஆதிக் பாபு கண்டுபிடித்து அவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தார்? என்பதை விறுவிறுப்பாக சொல்வது தான் ‘குற்றம் புரிந்தால்’.
நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஆதிக் பாபு, முதல் படம் போல் இல்லாமல் நன்றாக நடித்திருக்கிறார். செண்டிமெண்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டுபவர் காதல் காட்சிகளில் மட்டும் அளவாக நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அர்ச்சனா, கதையின் மையப்புள்ளி கதாபாத்திரத்தில் அளவான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
நாயகியின் தந்தையாகவும், நாயகனின் மாமாவாகவும் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ‘நாடோடிகள்’ அபிநயா, காக்கி உடையில் கம்பீரமாக இருப்பதோடு, அழகாகவும் இருக்கிறார்.
அருள் டி.ஷங்கர், ராம், ரேணிகுண்டா நிசாந்த் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் கொடுத்த வேலையை மிக சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கே.கோகுல் கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பதோடு, அனைத்து காட்சிகளையும் லைவாக படமாக்கியிருக்கிறார். பெரும்பாலான காட்சிகளை மக்கள் நிறைந்த பகுதிகளில் படமாக்கி, படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறார்.
பாடல்களை ரசிக்கும்படி கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் கே.எஸ்.மனோஜ், பின்னணி இசையையும் அளவாக கொடுத்திருக்கிறார்.
பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கும் இயக்குநர் டிஸ்னி, சமுதயாத்தில் பெண்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் மோசமாகி வருவதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
ஹீரோ பழிவாங்குவது பழைய ஃபார்மூலா தான் என்றாலும் அதை படமாக்கிய விதத்தில் வித்தியாசத்தை காட்டியிருக்கும் இயக்குநர் டிஸ்னி, படம் முழுவதையும் லைவ் லொக்கேஷன்களில் படமாக்கி வியக்க வைத்திருக்கிறார். குறிப்பாக மெட்ரோ ரெயில் போன்றவற்றில் காட்சிகளை படமாக்கியது இயக்குநரின் புத்திசாலிதனத்தை காட்டுகிறது.
கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தியிருக்கும் இயக்குநர் டிஸ்னி, சிறிய பட்ஜெட் படம் என்றாலும் அதை பெரிய படமாக காட்டுவதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டிருப்பது அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது. சரியான வாய்ப்பு கிடைத்தால் இயக்குநர் டிஸ்னி மிகப்பெரிய ஆக்ஷன் படத்தை கொடுப்பார் என்ற நம்பிக்கையை திரைக்கதையும், காட்சிகள் வடிவமைப்பும் கொடுக்கிறது.
படத்தில் சில இடங்களில் சில குறைகள் இருந்தாலும், தான் சொல்ல வந்ததை மிக நேர்த்தியாக சொல்லியிருப்பதோடு, சமுதாயத்திற்கு தேவையான ஒரு படமாகவும் கொடுத்த விதத்தில் இயக்குநர் டிஸ்னினையை பாராட்டி வரவேற்கலாம்.
மொத்தத்தில், ‘குற்றம் புரிந்தால்’ குறையில்லை.
ரேட்டிங் 3/5