Oct 01, 2021 04:10 AM

‘லிப்ட்’ திரைப்பட விமர்சனம்

f1621ff255a1afc7a777b32167af6e47.jpg

Casting : Kavin, Amritha, Kiran Konda, Gayathri Reddy, Balaji Venugopal

Directed By : Vineeth Varaprasad

Music By : Britto Michael

Produced By : Hepzi

 

ஐடி நிறுவனம் ஒன்றில் டீம் லீடராக பணியில் சேரும் நாயகன் கவினும், அதே நிறுவனத்தில் பணியாற்றும் நாயகி அம்ரிதாவும், இரவு நேரத்தில் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் போது, லிப்டில் சிக்கிக்கொள்வதோடு, அந்த லிப்டில் நடக்கும் சில திகிலான சம்பவங்களால் அதிர்ந்து போகிறார்கள். பிறகு லிப்டில் இருந்து வெளியேறி, அந்த கட்டிடத்தில் இருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். ஆனால், அந்த கட்டிடத்தில் இருந்து அவர்களால் வெளியேற முடியவில்லை.

 

கட்டிடத்தில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவிக்கும் கவின் மற்றும் அம்ரிதாவுக்கு இறுதியில் என்ன நடந்தது?, அங்கு நடக்கும் திகில் சம்பவங்களின் பின்னணி, ஆகியவற்றை படம் பார்ப்பவர்கள் அலறும் வகையில் சொல்லியிருப்பது தான் ‘லிப்ட்’.

 

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றவாறு நடிப்பில் அசத்தியிருக்கும் கவின், சிறு சிறு எக்ஸ்பிரஷன்களை கூட மிக கவனமாக செய்திருக்கிறார். ஒரே இடத்தில், இரண்டு கதாப்பாத்திரங்களை சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் படம், என்ற எண்ணம் படம் பார்ப்பவர்களிடம் ஏற்படாத வகையில், கவின் காட்சிகளை நகர்த்தி செல்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் அம்ரிதா கவினுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார். பேய் விளையாட்டு பற்றி ஜாலியாக பேசுபவர், பிறகு பேய் இருக்கும் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டு பதறும் காட்சிகளில் நாமும் பதற்றம் அடையும் அளவுக்கு நடித்திருக்கிறார்.

 

கிரண் கொண்டா மற்றும் தாரா ஜோடி ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் இயலாமையை உணர்த்துகிறது. ஐடி நிறுவன மேலாளராக நடித்திருக்கும் பாலாஜி, ஊழியர்களை காவு வாங்கும் கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகளை பிரதிபலிக்கிறார்.

 

எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒரே லொக்கேஷன் என்றாலும், அதில் வித்தியாசமான பிரேம்களை வைத்து, காட்சிகளை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.

 

பிரிட்டோ மைக்கேலின் இசை படத்தின் மற்றொரு நாயகன் என்று சொல்லலாம். பேய் படம் என்றாலே சத்தம் சற்று அதிகமாக இருக்கும். ஆனால், பிரிட்டோ மைக்கேல் தனது பின்னணி இசை மூலம், சத்தமில்லாமலேயே பல இடங்களில் நம்மை பயமுறுத்துகிறார். 

 

தபஸ் நாயக்கின் ஒலிக்கலவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. படத்தொகுப்பாளர் ஜி.மதனின் பணி மிக கச்சிதமாக இருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் வினித் வரப்பிரசாத், ஐடி நிறுவன ஊழியர்களைப் பற்றிய ஜாலியான கதையாக படத்தை தொடங்கி, பிறகு அதிர வைக்கும் திகில் காட்சிகளால் ரசிகர்களை அலறவிடுகிறார். இறுதியில், ஐடி நிறுவன ஊழியர்களின் வலி நிறைந்த வாழ்க்கையை சொல்லி படத்தை முடிக்கிறார்.

 

பேய்களை நகைச்சுவை கதாப்பாத்திரமாக சித்தரித்து வெளிவரும் படங்களால் சோர்வடைந்திருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர், இரண்டு மணி நேரம் நம்மை கட்டிப்போட்டது போல படத்தை விறுவிறுப்பாகவும், திகிலாகவும் நகர்த்தி செல்கிறார்.

 

முதல் பாதியில் திரைக்கதை ஓட்டம் சில இடங்களில் நொண்டியடித்தாலும், இரண்டாம் பாதியில் வேகம் எடுக்கும் படம், க்ளைமாக்ஸ் வரை நம்மை சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறது.

 

ரேட்டிங் 3/5