Feb 09, 2024 08:10 PM

’லவ்வர்’ திரைப்பட விமர்சனம்

5fdc76a3529ff64fd5b31d9437d8fbe4.jpg

Casting : Manikandan, Sri Gowri Priya, Kanna Ravi, Keetha Kailasam, Saravanan, Harish Kumar, Nikila Shankar

Directed By : Praburam Vyas

Music By : Sean Roldan

Produced By : Million Dollar Studios and MRP Entertainment

 

தனது விரக்தியான வாழ்க்கையின் வலியை தன் காதலி மீது திணிக்கும் நாயகன் மணிகண்டனின் அதீத உரிமையால், நாயகி ஸ்ரீ கெளரி ப்ரியா பல சிக்கல்களை சந்திக்கிறார். ஒவ்வொரு முறையும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில், மணிகண்டனின் செயலை மன்னித்து அவரை ஏற்றுக்கொள்ளும் ஸ்ரீ கெளரி ப்ரியா, ஒரு கட்டத்தில் மணிகண்டனை பிரிந்தே ஆக வேண்டும் என்று முடிவு எடுக்கிறார். 6 வருட காதல் திடீரென்று இல்லை என்றால் எப்படி, என்று காதல் முறிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் மணிகண்டன், காதலியை சமாதானப்படுத்த முயற்சிக்க, வழக்கம் போல் அவரை ஸ்ரீ கெளரி ப்ரியா மன்னித்து ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பதை கரடு முரடான காதலோடு சொல்வது தான் ‘லவ்வர்’.

 

காதலியை காதலன் உருகி..உருகி...காதலிப்பது தான் காதல், என்ற வழக்கமான காதல் கதையாக அல்லாமல், காதலின் கருப்பு பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டும் காதலர்களின் வாழ்க்கை பயணத்தை சினிமாத்தனம் இன்றி இயல்பாக சொல்லியிருக்கிறார்கள்.

 

’குட் நைட்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி தனது நடிப்பு மூலம் கவனம் ஈர்த்த மணிகண்டன், இதில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பு மூலம் கவனம் ஈர்த்திருப்பதோடு, மிரட்டவும் செய்திருக்கிறார். இப்படி ஒரு காதலன் தனக்கு கிடைக்கவே கூடாது, என்று பெண்கள் சாமியிடம் வேண்டிக் கொள்ளும் அளவுக்கு சைக்கோ காதலனாக மிரட்டுகிறார். 

 

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீ கெளரி ப்ரியா பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கிறார். மணிகண்டனுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மிக இயல்பாக நடித்திருப்பவர், மணிகண்டனின் செயலால் கண்கலங்கும் காட்சிகள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார். காதலை முறித்துக்கொள்ளலாம் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பவர், மணிகண்டன் விடைபெறும் போது கதறி அழும் காட்சியில் அப்ளாஷ் பெற்றுவிடுகிறார்.

 

கண்ணா ரவி, ஹரிஷ் குமார், சரவணன், கீதா கைலாசம் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையின் ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

 

ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டன் இசையும் காதலர்களின் உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்தும் வகையில் பயணித்திருக்கிறது. பரத் விக்ரமனனின் படத்தொகுப்பு படத்தை தொய்வில்லாமல் நகர்த்தி செல்கிறது.

 

காதல் பற்றி சரியான புரிதல் இல்லாமல், அந்த உறவை சிக்கலோடு கடந்து செல்லும் இளசுகளுக்கு காதல் என்றால் என்ன? என்பதை புரிய வைத்திருக்கும் இயக்குநர் பிரபுராம் வியாஸ், காதலின் கருப்பு பக்கங்களை காட்சிகளாக வடிவமைத்து பார்வையாளர்கள் பதற்றம் அடையும் அளவுக்கு படத்தை நகர்த்தினாலும், க்ளைமாக்ஸில் காதலை எந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்பதை அழகாக சொல்லி காதலர்களை கொண்டாட வைத்துவிடுகிறார்.

 

புதிய கோணத்தில் ஒரு காதல் கதையை ரசிக்கும்படி சொல்லியிருந்தாலும், அதை சுற்றி கையாண்ட காட்சிகள் காதல் உணர்வோடு, போதை உணர்வையும் சேர்த்துக் கொடுக்கிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகளில் மது குடிப்பது மற்றும் சிகரெட் புகைக்கும் காட்சிகள் அளவுக்கு அதிகமாக வருகிறது. படத்தை பார்க்கும் இளைஞர்கள் காதல் காட்சிகளுடன் தங்களை தொடர்புப்படுத்திக் கொள்கிறார்களோ இல்லையோ, போதைப் பொருட்களை பயன்படுத்தும் காட்சிகளில் நிச்சயம் தங்களை தொடர்புப்படுத்திக் கொள்வார்கள்.

 

மொத்தத்தில், இந்த ‘லவ்வர்’ இளசுகளை கொண்டாடவும் வைக்கும், தள்ளாடவும் வைக்கும்.

 

ரேட்டிங் 3/5