Mar 14, 2025 02:54 AM

’மாடன் கொடை விழா’ திரைப்பட விமர்சனம்

babd4e1c52a7df477d3e6975109b257f.jpg

Casting : Gokul Goutham, Sharmisha, Dr. Surya Narayanan, Super Good Subramaniyam, Sripriya, Balraj, Maryappan, Sivavelan, Rashmitha

Directed By : Ra.Thangapandi

Music By : Vibin.R

Produced By : Captain Sivaprakasham Udhayasuriyan

 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுடலை மாடன் சாமியின் கொடை விழாவின் போது, தெருக்கூத்து கலஞரான திருநங்கை ஒருவர் மர்மமான முறையில் மரணமடைகிறார். அவரது மணத்தின் பின்னணியில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்காமல் அதை தற்கொலை வழக்காக காவல்துறை முடிக்கிறது. அன்றில் இருந்து அந்த இடத்தில் சுடலை மாடன் சாமியின் கொடை விழா நடக்காமல் போக, ஊர் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.

 

இதற்கிடையே, தங்களது சொந்த நிலத்தில் இருக்கும் சுடலை மாடன் சாமி கோவிலில் பல வருடங்களாக நடக்காமல் இருக்கும் கொடை விழாவை மீண்டும் நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார் நாயகன்  கோகுல் கவுதம். ஆனால், கிறிஸ்த்தவ மதத்திற்கு மாறிய அவரது தந்தை அந்த நிலத்தை அடமானம் வைத்து விடுவதோடு, கொடை விழா நடத்தும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு, கிறிஸ்த்தவ மதத்திற்கு மாறும்படி மகனை கட்டாயப்படுத்துகிறார். ஊர் மக்கள் மற்றும் உறவினர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக கொடை விழாவை நத்தியாக வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கும் நாயகன், அதற்கான முயற்சியில் ஈடுபடும் போது அவர் மீது கொலைப்பழி விழுகிறது. சிறைக்கு செல்லும் நாயகன் தான் நினைத்தது போல் சுடலை மாடன் கொடை விழாவை நத்தினாரா ?, திருநங்கையின் மர்ம மரணத்தின் பின்னணி என்ன?, நாயகன் மீது விழுந்த கொலைப்பழியின் பின்னணி என்ன ? ஆகிய கேள்விகளுக்கான விடையை கிராமத்து வாழ்வியல் மற்றும் சிறுதெய்வ வழிபாட்டு முறையின் பின்னணியில் சொல்வதே ‘மாடன் கொடை விழா’.

 

சிறுதெய்வ வழிபாட்டு முறையையும், அதனை சுற்றி நடக்கும் சம்பவங்களையும் வைத்துக்கொண்டு எதார்த்தமான கிராமத்து வாழ்வியலை, நேர்த்தியான திரை மொழியில் சொல்லப்பட்டிருக்கும் இந்த ‘மாடன் கொடை விழா’ நாம் சொல்ல வேண்டிய ஏராளாமன் கதைகள் நம்ம ஊரிலேயே இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

 

நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் கோகுல் கவுதம், மண்ணின் மைந்தனாக, கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாக இருக்கிறார். சுடலை மாடன் சாமியாக அதிரடி ஆட்டம் போடுபவர், காதல் காட்சிகளில் மட்டும் சற்று தயக்கத்துடன் நடித்திருக்கிறார். நடிப்பில் கொஞ்சம் பயிற்சி எடுத்துக் கொள்வது நல்லது.

 

நாயகியாக நடித்திருக்கும் ஷர்மிஷா, வாயாடி பெண்ணாக நடித்திருந்தாலும் பெண்களின் உரிமை மற்றும் அவர்களது அடக்குமுறைகளுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தும் ஒரு கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார். காதல் காட்சிகளிலும் சரி, திருமணம் என்ற பெயரில் பெண்களை வியாபார பொருளாக சித்தரிக்கப்படும் முறைக்கு எதிராக பதிலடிக்கும் கொடுக்கும் காட்சிகளிலும் சரி அவரது அதிரடியான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

 

Maadan Kodai Vizha Movie Review

 

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் சூப்பர் குட் சுப்பிரமணியம், அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீப்ரியா மற்றும் வில்லனாக நடித்திருக்கும் டாக்டர் சூர்ய நாராயணன் ஆகியோரை தவிர நாயகனின் சித்தப்பா வேடத்தில் நடித்திருக்கும் சிவவேலன், பால்ராஜ், மாரியப்பன், ரஷ்மிதா என அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும் பதற்றம் இல்லாத நடிப்பு மூலம் படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார்கள்.

 

விபின். ஆர் இசையில் பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி, “யாருப்பா இசையமைப்பாளர்...” என்று கேட்கும் அளவுக்கு சிறப்பாக இருக்கிறது. கதையில் இருக்கும் காதலை தனது பின்னணி இசை மூலமாகவும், பாடல் மூலமாகவும் பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருப்பவர், வில்லனின் வேடம், சுடலை மாடன் சாமியின் வருகை ஆகியவற்றின் மீது பார்வையாளர்களின் கவனம் திரும்பும்படி பின்னணி இசையமைத்து பாராட்டு பெறுகிறார்.

 

ஒளிப்பதிவாளர் சின்ராஜ் ராம், சினிமாவுக்கான லொக்கேஷன்களை தேடி அலையாமல், கதாபாத்திரங்களின் வாழ்வியல் பகுதிகளை எதார்த்தமாக காட்சிப்படுத்தி, படம் பார்ப்பவர்களுக்கும், அந்த கிராமத்தில் பயணிக்கும் உணர்வை ஏற்படுத்துவதோடு, கதையோடும் பார்வையாளர்களை பயணிக்க வைத்துவிடுகிறார்.

 

சீர் செய்யும் பெண் வியாபார பொருள் அல்ல, அதை பெற்றுக்கொள்ளும் ஆண்கள் தான் வியாபார பொருள் என்பதை தனது வசனங்கள் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் நெய்வேலி பாரதி குமார், மதம் என்பது மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக தான், பிரித்துப்பார்ப்பதிற்கில்லை என்ற உண்மையை உரக்க சொல்லியிருக்கிறார். 

 

எழுதி இயக்கியிருக்கும் இரா.தங்கபாண்டி நம் பக்கத்தில் இருக்கும், இதுவரை சொல்லப்படாத பல கதைகள் நம்மிடமே இருக்கிறது, என்பதை உணர்த்தும் வகையில் கிராமத்து வாழ்வியலின் ஒரு பகுதியை கதைக்களமாக எடுத்துக் கொண்டு அதை திரை மொழியில் நேர்த்தியான படைப்பாக கொடுத்திருக்கிறார்.

 

வெளிநாட்டு படங்களைப் காப்பியடித்து, அதை புரியாத வகையில் கொடுக்கும் தற்போதைய காலக்கட்டத்தில், நம் கலாச்சாரம் மற்றும் வாழ்வியலோடு பின்னி பிணைந்திருக்கும் கதையை எதார்த்தம் மீறாமல், அதே சமயம் ஒரு திரைப்படத்தை ரசிக்க கூடிய அனைத்து கமர்ஷியல் விசயங்களையும் திரைக்கதையில் சேர்த்து நேர்த்தியான திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் இரா.தங்கபாண்டி.

 

சிறு தெய்வ வழிபாடு முறைப்பற்றி தெரிந்தவர்கள் இந்த படத்துடன் ஒன்றிவிடுவது போல், தெரியாதவர்களுக்கு இந்த படம் நிச்சயம் புதிய அனுபவத்தை கொடுப்பதோடு, கிராமத்து வாழ்வியலோடு பயணித்த அனுபவத்தை கொடுப்பது உறுதி.

 

மொத்தத்தில், இந்த ‘மாடன் கொடை விழா’ கொண்டாடப்பட வேண்டிய நம் மண் சார்ந்த படைப்பு.

 

ரேட்டிங் 3.5/5