’மாமனிதன்’ விமர்சனம்
Casting : Vijay Sethupathi, Gayatri, Guru Somasundaram, Shaji
Directed By : Seenu Ramasamy
Music By : Ilaiyaraaja,Yuvan Shankar Raja
Produced By : Yuvan Shankar Raja, Shan Sutharasan
3ம் வகுப்பு வரை படித்திருக்கும் விஜய் சேதுபதி ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றுகிறார். தான் படிக்கவில்லை என்றாலும் தனது பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கும் விஜய் சேதுபதி, அவர்களை தனியார் பள்ளியில் சேர்க்க நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஆட்டோ ஓட்டுவதை விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் வேலையில் ஈடுபடுகிறார. ஆனால், அதுவே அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையை கொடுக்க, அதனால் ஊரை விட்டு ஓடுகிறார். அதனால் அவரது குடும்பம் பெரும் துயரத்துக்கு ஆளாக, ஊரை விட்டு ஓடிய விஜய் சேதுபதி திரும்ப வந்தாரா? அவரது பிள்ளைகளின் வாழ்க்கை என்ன ஆனது? என்பது தான் மீதிக்கதை.
பாசம், நல்லொழுக்கம் நிறைந்த குடும்ப தலைவன் கதாப்பாத்திரத்தில் எப்போதும் போல் விஜய் சேதுபதி நன்றாக நடித்திருக்கிறார். தனது பிள்ளைகளுடன் அன்பாக பழகுவது, நண்பர்களுடன் இயல்பாக பழகுவது, தன்னை தற்குறி என்றவரிடம், தான் ஒரு காமராஜர் போல, என்று கூறி உணர்ச்சி பொங்க வசனம் பேசுவது என அனைத்து இடங்களிலும் விஜய் சேதுபதியின் நடிப்பு பாராட்டும்படி இருக்கிறது.
விஜய் சேதுபதி படத்தில் மட்டுமே பார்க்க கூடிய காயத்ரி, இந்த படத்தில் வயதுக்கு மீறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். கதாப்பாத்திரத்திற்கு பொருத்தம் இல்லாமல் இருப்பதோடு, அவரது நடிப்பும் பெரிதாக இல்லை. சோகமோ சந்தோஷோமோ இரண்டையும் ஒரே அளவுகோலில் வைத்து கொடுத்திருக்கும் காயத்ரியின் நடிப்புக்கு தேசிய விருது கிடைக்கும் என்று சொன்ன சீனு ராமசாமிக்கு பெரிய மனசு.
விஜய் சேதுபதியின் நண்பராக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம் தனது கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். ரியல் எஸ்டேட் அதிபராக நடித்திருக்கும் ஷாஜி, குழந்தை நட்சத்திரங்கள் என மற்ற கதாப்பாத்திரங்களும் கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருக்கிறார்கள்.
இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைத்திருக்கிறார்கள். ஆனால், பாடல்களும் பின்னணி இசையும் அதை பொய் என சொல்கிறது. இளையராஜாவின் இசையில் இதைவிட மோசமான பாடல்களை நாம் கேட்டிருக்க முடியாது (ஒருவேளை படம் பிடிக்காததால் இளையராஜா இப்படி இசையமைத்திருப்பாரோ)
பல படங்களில் தனது ஒளிப்பதிவு மூலம் ரசிகர்களை வியக்க வைத்த எம்.சுகுமார் தான் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆனால், அதுவும் சொன்னால் தான் தெரிகிறதே தவிர காட்சிகளில் தெரியவில்லை என்பது மற்றொரு வருத்தம்.
கூலி வேலை செய்பவர்கள் கூட தனது பிள்ளைகளை ராஜாவாக வாழ வைக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அது அவர்களுடைய ஆசை மட்டும் அல்ல கடமையும் கூட. ஆனால், இதை செய்பவர்களை இயக்குநர் சீனு ராமசாமி மாமனிதன் என்று சொல்வது படம் பார்ப்பவர்கள் காதில் வாழைப்பூ வைத்தது போல் இருக்கிறது.
ஒரு வேளை அனைத்து தகப்பன் மார்களையும் மாமனிதன் என்று இயக்குநர் சீனு ராமசாமி சொல்வது போல் எடுத்துக் கொண்டாலும், ஒரு பிரச்சனை வரும் போது அதை சமாளித்து தனது குடும்பத்தை காப்பாற்றாமல், ஊரை விட்டு ஓடுவது போல் காட்டியிருப்பது கதையின் மிகப்பெரிய பலவீனமாக இருப்பதோடு, குடும்பத்திற்காக பல போராட்டங்களையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வாழும் குடும்ப தலைவன்களை தலை குணிய வைத்திருக்கிறது.
வாழ்க்கையில் பிரச்சனை வந்தால் ஓடாமல் அதை எதிர்த்து நின்று போராட வேண்டும், என்று தான் சொல்வார்கள். ஆனால், இயக்குநர் சீனு ராமசாமியோ வாழ்க்கையில் பிரச்சனையோ கஷ்ட்டமோ வந்தால், ஓட வேண்டும், அப்படி ஓடினால் அந்த பிரச்சனைகள் காணாமல் போய்விடும் என்ற மிகப்பெரிய பொய்யை கதைக்கருவாக சொல்லியிருக்கிறார். கரு தான் இப்படி இருக்கிறது என்றால், அதற்கு திரைக்கதை அமைத்திருக்கும் விதமும், காட்சி அமைப்புகளும் படம் பார்ப்பவர்களை தூங்க வைக்கிறது.
தனக்கு முதல் பட வாய்ப்பு கொடுத்ததோடு, ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தையும் கொடுத்த இயக்குநர் சீனு ராமசாமிக்கு நன்றிக்கடனாக தொடர்ந்து கால்ஷீட் கொடுத்து படம் இயக்க வாய்ப்பு கொடுத்து வரும் விஜய் சேதுபதியை சீனு ராமசாமி மாமனிதனாக கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால், இப்படி ஒரு தவறான கருத்தை மக்களிடம் திணித்திருப்பது மிகப்பெரிய தவறு.
மொத்தத்தில், இந்த ‘மாமனிதன்’ பொய்யானவன்.
ரேட்டிங் 2/5