மதுரவீரன் விமர்சனம்
Casting : Shanmugapandiyan, Meenakshi, Samuthirakkani
Directed By : P. G. Muthiah
Music By : Santhosh Dhayanidhi
Produced By : Viji Subramanian
ஜல்லிக்கட்டு போட்டியையும், அதன் மீதிருந்த தடையை எதிர்த்து சென்னையில் நடத்தப்பட்ட போராட்டத்தையும் கருவாக கொண்டு உருவாகியுள்ள படமே ‘மதுரவீரன்’.
பெண் பார்ப்பதற்காக மலேசியாவில் இருந்து தனது சொந்த ஊருக்கு வரும் சண்முகபாண்டியன் வந்த வேலையை பார்க்காமல், தனது அப்பாவின் கொலைக்கு பின்னால் இருக்கும் காரணத்தையும், கொலையாளி யார்?, என்பதையும் கண்டரிவதில் மும்முரம் காட்டி வருவதோடு, தனது அப்பாவின் மரணத்தால் தனது கிராமத்தில் நின்று போன ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் நடத்தும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்.
ஆனால், அந்த ஊரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தினால் ஜாதி மோதல் வரும் என்று கூறும் அரசு, அனுமதி வழங்க தயங்குகிறது. அதே சமயம், சண்முகபாண்டியனை அச்சுறுத்தும் வகையில் சிலர் மறைந்திருந்து தாக்குகின்றார்கள். என்னதான் நடந்தாலும், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியே தீருவேன் என்பதில் உறுதியாக இருக்கும் சண்முகபாண்டியன், தனது உறுதியில் வெற்றி பெறும் போது, உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்து விடுகிறது. பிறகு அந்த தடை எப்படி தகர்க்கப்பட்டது, என்பதை உலகமே அறியும்.
உச்ச நீதிமன்றத்தின் தடையை மக்கள் போராட்டம் தகர்த்தாலும், தனது உள்ளூர்வாசிகள் சிலர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடுக்கட்டையாக இருக்க, அவர்களை வீழ்த்தி மீண்டும் தனது கிராமத்தில் சண்முகபாண்டியன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தினாரா இல்லையா, என்பது தான் ‘மதுரவீரன்’ படத்தின் கதை.
திரைப்படங்களில் ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே ஹீரோக்கள் காளைகளை அடக்குவார்கள். ஆனால், ஹீரோ காளையை அடக்காமலே ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறுகிறார் என்றால், அது இந்த படத்தில் தான். படமே ஜல்லிக்கட்டைப் பற்றி பேசினாலும், படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்களாகட்டும், ஹீரோவாகட்டும் ஒரு காட்சியில் கூட காளையை அடக்காமல், ஜல்லிக்கட்டு போட்டியை பற்றி பேச மட்டும் செய்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் அதிகம் உயரம் கொண்ட நடிகர் என்ற சிறப்பை பெற்றுள்ள சண்முகபாண்டியன், முழுமையாக தயாராகமல் நடிக்க வந்திருப்பது, படம் முழுவதும் தெரிகிறது. காதல் காட்சி, காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் என்று எந்தக் காட்சியிலும் அவரது நடிப்பு ஒட்டவில்லை. அதிலும், அவர் முகத்தில் இன்னும் பால் வடிவதால், கோபமாக வசனம் பேசும் காட்சிகளிலும், செண்டிமென் காட்சிகளிலும், நமக்கு சிரிப்பு தான் வருகிறது.
மதுரவீரன் படத்தின் நிஜமான ஹீரோ என்றால் அது சமுத்திரக்கனி தான். எந்த வேடமாக இருந்தாலும் அதில் பசை தடவியது போல் ஒட்டிக்கொள்ளும் சமுத்திரக்கனி, ரத்னவேல் என்ற வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தினாலும், எப்போதும் போல இந்த படத்திலும் அட்வைஸ் அவதாரமாகவே தோன்றுவது சற்று உறுத்துகிறது. இருந்தாலும், அவர் வரும் காட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நகர்கிறது.
புதுமுகம் மீனாட்சி எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும், ஹீரோயினாக தெரியாத முகமாக இருந்தாலும், நமது பக்கத்து வீட்டு பெண்ணாக ரொம்ப சாதாரணமானவராக இருக்கிறார். படத்திற்கும் அவருக்கும் சம்மந்தமே இல்லாதபடி திரைக்கதை அமைந்தாலும், ஹீரோயின் என்ற ஒருவரை காட்டியாக வேண்டும் என்பதற்காக, ஒரு பாடலும் சில காட்சிகளும் வைக்கப்பட்டிருக்கிறது.
நடிகராகியுள்ள தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் ரொம்ப முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், நடிப்பில் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி உள்ளது. பல படங்களில் நடித்த அனுபவம் பெற்ற வேல ராமமூர்த்தியின் பார்வையும், மிடுக்கான நடையும் அவரது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்தாலும், சில இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்துவிடுகிறார். மைம் கோபி தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்.
சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்களில் மண் மனம் வீசுகிறது. இசையில் தமிழ் கலாச்சாரம் தெரிகிறது. பி.ஜி.முத்தையாவின் கேமரா திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டியை கிராபிக்ஸ் கலந்துக் கொடுக்காமல் ஒரிஜனலாக படமாக்கியியதற்கு சபாஷ் சொல்லலாம்.
ஜல்லிக்கட்டு போட்டி குறித்து பல படங்கள் பேசியிருந்தாலும், அதற்கு பின்னாள் இருக்கும் ஜாதி பிரிவிணை பற்றி எந்த படமும் பேசியதில்லை. அதை இந்த படத்தில் வெளிப்படையாக பேசியிருக்கும் பி.ஜி.முத்தையா, ஜாதி பாகுபாடு பார்ப்பதால் தான் தமிழகர்கள் வீழ்த்தப்படுகிறார்கள், என்று படத்தில் சொன்னாலும், பாடல்களில் மட்டும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை உயர்த்தி பேசுபவர், ஜாதி பிரிவிணை வேண்டாம், என்பதை எந்த பாடலிலும் சொல்லவில்லை.
மெரீனாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை வைத்துக் கொண்டு, தமிழ் சினிமாவில் ஏற்கனவே வெளியான சில படங்களின் சாயலோடு பி.ஜி.முத்தையா அமைத்திருக்கும் திரைக்கதை, அனைத்து அம்சமும் நிறைந்த கமர்ஷியல் பார்மட்டில் இருந்தாலும், படத்தில் நடித்த நடிகர் நடிகைகளால் எந்த அம்சமும் அவ்வளவாக எடுபடவில்லை. குறிப்பாக, பாலசரவணனின் காமெடி செம மொக்கையாக இருக்கிறது. அதேபோல், சண்முகபாண்டியன் பக்கமும் ரொம்ப வீக்காக உள்ளது. சாய்ந்து உட்கார்ந்திருக்கும் ரசிகர்களை சற்று நிமிர்ந்து உட்கார வைப்பது சமுத்திரக்கனியின் காட்சிகள் மட்டுமே. ஆனால், அவர் பல படங்களில் இப்படி வந்திருப்பதால், அங்கேயும் சில ரசிகர்கள் சோர்வடைந்துவிடுகிறார்கள்.
இருந்தாலும், மெரீனா உள்ளிட்ட ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் நடந்த போராட்டங்களை திரைக்கதையோடு சேர்த்திருக்கும் விதம், ஒரிஜினலாக ஜல்லிக்கட்டு போட்டியை படமாக்கியது, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது குரல் கொடுத்த விஜயின் வீடியோவை திரையிட்டது என்று ரசிகர்கள் ரசிக்கும்படியான காட்சிகளும் படத்தில் இருக்கின்றது.
குறிப்பாக, நான் கடவுள் ராஜேந்திரனை வைத்து ‘கபாலி’ ரஜினியை கலாய்த்திருக்கும் இயக்குநர் பி.ஜி.முத்தையா, கர்நாடக அரசிடம் சொல்லி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட சொல்லுங்க, பிறகு அரசியலுக்கு வருவீங்க, என்று ரஜினிக்கு மறைமுகமாக அட்வைஸ் செய்திருப்பவர், தமிழர்கள் ஒற்றுமை இன்மையால் தான் தோற்று போகிறார்கள் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில், கமர்ஷியலான, அதே சமயம் நாம் ஏற்கனவே பார்த்த பல படங்களின் பாணியிலான ஒரு படமாக இந்த ‘மதுரவீரன்’ இருந்தாலும், தமிழர்களின் பெருமையை ஓங்க ஒலிக்கச் செய்யும் ஒரு முயற்சியாகவும் உள்ளது.
ஜெ.சுகுமார்