’மாஃபியா’ விமர்சனம்
Casting : Arun Vijay, Prasanna, Priya Bhavani Shankar
Directed By : Karthik Naren
Music By : Jakes Bejoy
Produced By : Lyca Productions
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு துறையில் (Narcotics Control Bureau) பணியாற்றும் அருண் விஜயும், அவரது குழுவினரும், போதை பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவனான பிரசன்னாவை பிடிக்க வலை விரிக்க, பிரசன்னாவோ அருண் விஜயின் வலையில் சிக்காமல், தனது வில்லத்தனத்தால் சில அதிகாரிகளை வீழ்த்துகிறார். ஒரு கட்டத்தில் பிரசன்னாவின் சாம்ராஜ்யமே ஆட்டம்காணும் அளவுக்கு அருண் விஜய் செக் வைக்கிறார். அந்த செக்கில் இருந்து மீள்வதற்காக பிரசன்னா போடும் சதி திட்டத்தில், அருண் விஜய் மட்டும் இன்றி அவரது குடும்பத்தாரும் சிக்கிக்கொள்ள, அதில் இருந்து அவர்கள் மீண்டார்களா அல்லது மாண்டார்களா, என்பது தான் படத்தின் கதை.
போலீஸ் வேடத்திற்கு ஏற்றவாறு கட்டுமஸ்த்தான உடல் தோற்றத்தில் கம்பீரமாக இருக்கும் அருண் விஜய், இந்த படத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு துறை அதிகாரி என்பதால், போலீஸ் உடை கிடையாது. அதேபோல், எந்த தவறு நடந்தாலும் அவரால் தட்டி கேட்கவும் முடியாது. போதை பொருள் சம்மந்தமான குற்றங்களை மட்டுமே புலனாய்வு செய்யும் அதிகாரி என்பதால், அதற்குள் எப்படிப்பட்ட நடிப்பை கொடுக்க முடியுமோ, அதை நன்றாகவே கொடுத்திருக்கிறார். இருந்தாலும், அவரிடம் ஏதோ ஒன்று மிஸ்ஸாகிறது.
கதாநாயகி என்று சொல்ல முடியாது, படத்தின் ஒரு கதாப்பாத்திரமாக நடித்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். ஆரம்பக் கால படங்களில் பிரியா பவானி சங்கர் முகத்தில் இருந்த பொலிவு, கொஞ்சம் அல்ல, நிறையவே மிஸ்ஸிங். அது மட்டும் அல்ல, ஏதோ குழந்தை கையில் பொம்மை கொடுத்தது போல, இந்த படத்தில் அவர் கையில் துப்பாக்கியை கொடுத்திருக்கிறார்கள்.
வில்லனாக நடித்திருக்கும் பிரசன்னா தனது வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். அதிகம் பேசவில்லை, அதிகம் நடிக்கவில்லை, அனைத்தையும் அளவோடு கையாண்டிருக்கிறார்.
ஜேக்ஸ் பீஜாயின் பின்னணி இசையும், கோகுல் பினாயின் ஒளிப்பதிவும் கதையுடனேயே பயணித்திருக்கிறது. ஸ்ரீஜித் சாரங்கின் எடிட்டிங் கச்சிதமாக இருந்தாலும், இன்னும் கூட சில இடங்களில் கத்திரி போட்டிருக்கலாம். அந்த அளவுக்கு படத்தின் முதல் பாதி உள்ளது.
இயக்குநர் கார்த்திக் நரேன், தான் சொல்ல வந்ததை நேர்த்தியான காட்சிகளோடும், கச்சிதமான திரைக்கதையோடும் சொல்லியிருந்தாலும், படத்தின் முதல் பாதியை ரொம்ப பொறுமையாக நகர்த்தி செல்வது, ரசிகர்களை சலிப்படைய செய்துவிடுகிறது. இருந்தாலும், போதை பொருள் தடுப்பு பிரிவு என்ற அமைப்பின் பணியையும், போதை பொருள் கடத்தல் கும்பலின் லிங் போன்றவற்றை தெளிவாக ரசிகர்களுக்கு புரிய வைத்திருக்கிறார்.
அருண் விஜய் மற்றும் பிரசன்னா இருவருக்கும் இடையே நடக்கும் போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? என்பதை ரசிகர்கள் முன் கூட்டியே யூகித்தாலும், அது எப்படி நடக்கப் போகிறது, என்பதை இயக்குநர் விறுவிறுப்பாக எடுத்துச் செல்வதோடு, க்ளைமாக்ஸில் யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு ட்விஸ்ட்டையும் வைத்து அசத்தியிருக்கிறார்.
முதல் பாதி படம் பொருமையாக நகர்ந்தாலும், மேக்கிங் மூலம் அதை சரி செய்துவிடும் கார்த்திக் நரேன், படத்தை முடிக்கும் போது, அடுத்த பாகத்தில், போதை பொருள் கடத்தல் பற்றி இன்னும் விரிவாக சொல்லப் போகிறேன், என்பதை சொல்லாமல் சொல்வது சபாஷ் போட வைக்கிறது.
ரேட்டிங் 3/5