Jul 23, 2022 07:21 AM

’மஹா’ விமர்சனம்

c6763cdcf89c09cb13b9ee80557d913c.jpg

Casting : Hansika, Simbu, Srikanth, Thambi Ramaiah, Karunakaran, Sujith Shankar, Manasvi

Directed By : UR Jameel

Music By : Ghibran

Produced By : Etcetera Entertainment

 

சிறுமிகள் கடத்தி கொடூரமாக கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டிருக்க, திடீரென்று ஹன்சிகாவின் மகள் மானஸ்வியும் கடத்தப்படுகிறார். அவரை காப்பாற்ற காவல்துறை உதவியை நாடும் ஹன்சிகா, தனது மகளை காப்பாற்றினாரா? இல்லையா?, என்பது தான் ‘மஹா’ படத்தின் கதை.

 

அழகான அம்மாவாக வரும் ஹன்சிகா, நடிப்பையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். தனது மகளிடம் காட்டும் பாசம், மகள் காணாமல் போன பிறகு துடிப்பது, அவரை நினைத்து தினம் தினம் வாடுவது என்று படம் முழுவதையும் தனது தோளில் சுமந்திருக்கிறார்.

 

ஹன்சிகாவின் கணவர் வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சிம்பு வரும் காட்சிகள் அனைத்தும் சரவெடி. அவரது ஆரம்ப காட்சியில் வரும் சண்டைக்காட்சியும், ஹன்சிகாவுடனான டூயட் பாடல், காதல் வசனங்கள் என அனைத்தும் துள்ளல் ரகம்.

 

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த் கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருக்கிறார். அவருடன் வரும் தம்பி ராமையா மற்றும் கருணாகரன் ஆகியோரும் தங்களது பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

 

வில்லனாக நடித்திருக்கும் சுஜித் சங்கர் அதிகம் பேசவில்லை என்றாலும் தனது தோற்றம் மற்றும் நடிப்பு மூலம் மிரட்டுகிறார்.

 

ஜிப்ரான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

காதல் காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஆர்.மதி, சிறுமிகளை கடத்தி வைக்கபப்ட்டிருக்கும் இடத்தை பயப்படும் வகையில் படமாக்கியிருக்கிறார்.

 

சைக்கோ ஜானராக தொடங்கும் கதை திடீர் திருப்பங்கள் மூலம் நம் மனதில் பல கேள்விகளை ஏற்படுத்தி படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார் இயக்குநர் யு.ஆர்.ஜமீல். 

 

கடத்தப்பட்ட ஹன்சிகாவின் மகள் என்ன ஆனார்? என்ற கேள்விக்கு விடை கிடைப்பதற்கு முன்பாக படத்தில் வரும் பல ட்விஸ்ட்டுகளால் படம் ஜெட் வேகத்தில் பயணிக்கிறது.

 

ஹன்சிகா - சிம்பு ஆகியோரது கெமிஸ்ட்ரி மூலம் காதல் காட்சிகள் ரசிக்கும்படியும், மதம் தொடர்பாக சிம்பு மற்றும் ஹன்சிகா பேசும் வசனங்கள் பாராட்டும்படியும் இருக்கிறது.

 

மொத்தத்தில், ‘மஹா’ ஆஹா...என்று சொல்ல வைக்கிறது.

 

ரேட்டிங் 4/5