Dec 03, 2022 06:40 AM

’மஞ்சக் குருவி’ திரைப்பட விமர்சனம்

37585d1b33bcde2e2121a2b0d2e76f73.jpg

Casting : Kishor, Raja Nayagam, Vishwa, Neeraja, Kanja Karuppu, Pasanga Pandi, Senthi, Pasanga Sivakumar

Directed By : Arangan Chinnathambi

Music By : Soundaryan and Amarkeeth MS

Produced By : VR Combines - Vimala Raja Nayagam

 

நாயகன் கிஷோர் கும்பகோணத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரிய ரவுடி. கிஷோரின் குருவான மற்றொரு ரவுடி சங்கிலி வாத்தியாரை கொலை வழக்கில் கிஷோர் சிக்க வைத்துவிடுகிறார். சிறைக்கு செல்லும் சங்கிலி வாத்தியார் கிஷோரை பழி தீர்க்க முடிவு செய்கிறார். இதற்கிடையே கிஷோரின் ரவுடித்தனம் பிடிக்காத அவருடைய தங்கையான நாயகி நீரஜா, அவரை பிரிந்து தனது சித்தப்பா வீட்டில் வசித்து வருகிறார்.

 

கிஷோரின் தங்கை என்று தெரியாமல் நீரஜா மீது விஷ்வா காதல் கொள்கிறார். தனது காதலை நீரஜாவிடம் சொல்லும் போது, காதலை நிராகரிக்கும் நீரஜா, தனது அண்ணன் எப்போது ரவுடி தொழிலை விட்டுவிட்டு திருந்துகிறாரோ, அப்போது தான் காதல், திருமணம் பற்றி நான் யோசிப்பேன், அதுவரை எனது வாழ்வில் எதுவும் இல்லை, என்று சொல்லிவிடுகிறார்.

 

தான் காதலித்த பெண் கிடைக்கவில்லை என்றாலும் அவரது ஆசை நிறைவேற வேண்டும் என்று நினைக்கும் விஷ்வா, கிஷோருடன் பழகி அவரை திருத்தும் முயற்சியில் ஈடுபட, கிஷோர் திருந்தினாரா? சங்கிலி வாத்தியார் கிஷோரை பழி தீர்த்தாரா? விஷ்வாவின் காதல் கைகூடியதா? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வதே படத்தின் மீதிக்கதை.

 

கதையின் நாயகனாக குணா என்ற வேடத்தில் ரவுடியாக நடித்திருக்கும் கிஷோர், படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார். ரவுடியாக அதிரடி காட்டுபவர் தங்கை விஷயத்தில் கலங்கும் காட்சியில் ரசிகர்களையும் கலங்க வைக்கிறார்.

 

சங்கிலி வாத்தியார் என்ற வேடத்தில் வில்லனாக  நடித்திருக்கும் குங்பூ மாஸ்டர் ராஜநாயகத்தின் எண்ட்ரியும், நடிப்பும் மிரட்டலாக இருக்கிறது. அவருக்கான காட்சிகளை சற்று கூடுதலாக வைத்திருக்கலாமே, என்று எண்ண வைக்கும் அளவுக்கு அவர் சிறப்பாக நடித்திருக்கிறார்.

 

இளம் ஹீரோவாக நடித்திருக்கும் விஷ்வா கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். நாயகியிடம் காதலை வெளிப்படுத்தும் காட்சியாகட்டும், நாயகி காதலை ஏற்காத போது தனது இயல்பான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு கனம் சேர்க்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் நீரஜா, குடும்பபாங்கான முகம். கல்லூரி மாணவி வேடத்திற்கு பொருத்தமாக இருப்பவர் பல காட்சிகளில் கண்களினாலேயே பேசுகிறார்.

 

கஞ்சா கருப்பு, பசங்க பாண்டி, சாரபாம்பு ஆகியோரின் காமெடி காட்சிகள் அவ்வபோது சிரிக்க வைத்தாலும் சில இடங்களில் மொக்கையாகவும் இருக்கிறது. பசங்க சிவகுமார், செந்தி ஆகியோரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

ஆர்.வேலின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, காட்சிகளை கலர்புல்லாகவும் படமாக்கியிருக்கிறது. 

 

செளந்தர்யன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி உள்ளது. அமர்கீத் எம்.எஸ்-ன் பின்னணி இசை கதைக்கு ஏற்ப அமைந்துள்ளது.

 

கதை எழுதி இயக்கியிருக்கும் அரங்கன் சின்னதம்பி, காதல் கதையில் கம்யூனிசம் பேசியிருப்பதோடு அதை முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

 

காதல், காமெடி, ஆக்‌ஷன், அண்ணன் - தங்கை செண்டிமென்ட் என அனைத்தையும் அளவாக கையாண்டிருக்கும் இயக்குநர் அரங்கன் சின்னதம்பி, தான் சொல்ல வந்ததை நேர்த்தியாக சொல்லி ரசிக்க வைக்கிறார்.

 

மொத்தத்தில், ‘மஞ்சக் குருவி’ உயர பறக்கும்.

 

ரேட்டிங் 3/5