’மன்மத லீலை’ விமர்சனம்
Casting : Ashoke Selvan, Ria Suman, Samyuktha Hedge, Smruthi Venkat, Jayaprakash, Premji, Karunakaran
Directed By : Venkat Prabhu
Music By : Premji Amaran
Produced By : Rockfort Entertainment - T Muruganantham
பெண்கள் விஷயத்தில் மன்மதனாக இருக்கும் நாயகன் அசோக் செல்வன், பிரபலமான பேஷன் டிசைனராக இருக்கிறார். அவருக்கு ஒரு மனைவி, ஒரு பெண் குழந்தை இருக்கிறார்கள். மனைவி ஊருக்கு போன நிலையில், முகவரி மாறி அவருடைய வீட்டுக்கு வரும் ஒரு பெண்ணுக்கு அடைக்களம் கொடுப்பதோடு, அவரோடு உல்லாசமாகவும் இருக்க, திடீரென்று அவருடைய மனைவி வீட்டுக்கு வந்து விடுகிறார். மனைவியிடம் மாட்டாமல் அசோக் செல்வன், தப்பித்தாரா இல்லையா, என்பது ஒரு பக்கம் இருக்க, அவருடன் உல்லாசமாக இருந்த அந்த முகவரி தெரியாத பெண் யார்? என்ற கேள்விக்கான விடையும் தான் படத்தின் கதை.
பிளே பாய் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தும் அசோக் செல்வன், கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். கல்லூரி மாணவராக இருக்கும் போது சரி, கணவனான பிறகும் சரி பெண்களை அரவணிக்கும் போதும், அவர்களிடம் தப்பு செய்து மாட்டிக்கொண்ட பிறகு எஸ்கேப் ஆவதிலும் சரி, நடிப்பில் அசத்துகிறார். அதிலும், இறுதிக்காட்சியில் அவரது மறுமுகத்தை காட்டும் போது, அங்கேயும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்து பாராட்டு பெறுகிறார்.
சம்யுக்தா ஹெக்டே, ஸ்முருதி வெங்கட், ரியா சுமன் என படத்தில் மூன்று நாயகிகள் இருக்கிறார்கள். மூவரும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். அதிலும், சம்யுக்தா ஹெக்டே மற்றும் ரியா சுமனுக்கு தான் கூடுதல் வேலை, அதில் எந்த குறையும் வைக்காமல் அசோக் செல்வன் திருப்தியடையும் விதத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஜெயபிரகாஷ், பிரேம்ஜி,கருணாகரன், கயல் சந்திரன் என மற்ற கதாப்பாத்திரங்கள் கதைக்கு ஏற்ப அளவாக பயன்படுத்தப்பட்டிருந்தாலும், ஜெயப்பிரகாஷின் கதாப்பாத்திரம் கவனிக்க வைக்கிறது.
இசையமைப்பாளராக பிரேம்ஜி அமரன் போட்ட பாடல்களை விட, டைடிலில் ஒலிக்கும் பழைய பாடலும், பின்னணியும் இசையும் தான் ஈர்ப்பாக உள்ளது.
இரண்டு வீட்டுக்குள்ளேயே முழு படத்தையும் முடித்திருந்தாலும், ஒளிப்பதிவாளர் தமிழகன் காட்சிகளை கச்சிதமாக கையாண்டுள்ளார்.
படத்தொகுப்பாளர் வென்ங்கட் ராஜனின் பணி கச்சிதமாகவும், படத்தை சுவாரஸ்யமாகவும் நகர்த்தி செல்கிறது.
ஒரு சாதாரண கதைக்கு, மிக சாதாரண திரைக்கதை அமைத்திருந்தாலும், ஒரு சுவாரஸ்யமான படமாகவே இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்திருக்கிறார்.
அதே சமயம், படம் முழுவதுமே குறிப்பிட்ட சில லொக்கேஷன்களில் நடப்பதும், என்ன நடக்கப் போகிறது, என்பதை சற்று யூகிக்க முடிவதாலும் முதல் மாதி மந்தமாகவே நகர்கிறது. இடைவேளையில் வைக்கப்படும் ட்விஸ்ட் மற்றும் அதை தொடர்ந்து வரும் திருப்புமுனையால் படம் வேகம் எடுத்தாலும், படத்தில் உள்ள எளிமை சில இடங்களில் படத்தை பலவீனமாக்கி விடுகிறது.
படத்தின் தலைப்பு மற்றும் டீசரை பார்த்து வேற மாதிரியான எதிர்ப்பார்ப்போடு வருபவர்கள் நிச்சயம் ஏமாற்றம் அடைவார்கள். எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வருபவர்களுக்கு சிறு வியப்பும், பெரிய எச்சரிக்கை பாடமும் நிச்சயம்.
மொத்தத்தில், ‘மன்மத லீலை’ மன்மதன் என்ற நினைப்போடு சுற்றும் ஆண்களும், அவர்களைப் போல் இருக்கும் பெண்களும் பார்க்க வேண்டிய படம்
ரேட்டிங் 3/5