Oct 26, 2023 07:33 PM

’மார்கழி திங்கள்’ திரைப்பட விமர்சனம்

94c950773566123c620de0eb3b68db18.jpg

Casting : Bharathiraja, Shyam Selvan, Rakshana, Naksha Saran, Suseenthiran, Appukutty

Directed By : Manoj K.Bharathiraja

Music By : Ilayaraja

Produced By : Suseenthiran

 

பள்ளி மாணவர்களான நாயகன் ஷ்யாம் செல்வன், நாயகி ரக்‌ஷனா ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். முதல் மதிப்பெண் எடுப்பதில் இருவருக்கும் கடுமையான போட்டி நிலவே அந்த போட்டியே ஒரு கட்டத்தில் இருவர் மனதிலும் காதல் மலர செய்கிறது. பள்ளி படிப்பு முடிந்தவுடன் தனது காதல் பற்றி தாத்தா பாரதிராஜாவிடம் ரக்‌ஷனா சொல்கிறார். பேத்தியின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாலும், கல்லூரி படிப்பு முடிந்த பிறகு தான் மற்ற விசயங்கள், அதுவரை ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல், பேசிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று நிபந்தனை போடுகிறார். அதன்படி, இருவரும் வெவ்வேறு கல்லூரியில் படிக்க செல்ல, அவர்களுடைய படிப்பும், காதலும் என்னவானது? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஷ்யாம் செல்வன் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ரக்‌ஷனா இருவரும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள். 

 

நாயகன் ஷ்யாம் செல்வன், பக்கத்து வீட்டு பையன் போல் மிக எளிமையாகவும், எதார்த்தமாகவும் நடித்திருப்பதோடு, அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்.

 

நாயகி ரக்‌ஷனா, காதல் காட்சிகளிலும், தனது காதலை தாத்தாவிடம் சொல்லும் காட்சிகளில் அழகாக நடித்திருக்கிறார். காதலுக்காக தாத்தா போடும் நிபந்தனையை ஏற்று நடப்பவர், தனது காதலுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு எதிராக செயல்படும் காட்சிகள் மிரட்டல்.

 

நாயகியின் தாத்தாவாக நடித்திருக்கும் இயக்குநர் பாரதிராஜாவுக்கு மட்டும் அல்ல அவரது நடிப்புக்கும் வயதாகிவிட்டது பளிச்சென்று தெரிகிறது. அதிலும் சில இடங்களில் முடியாதவரை வம்பு பண்ணி நடிக்க வைத்தது போல் இருக்கிறது. இருந்தாலும், பல இடங்களில் தனது நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

நாயகியின் தாய்மாமனாக நடித்திருக்கும் இயக்குநர் சுசீந்திரன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு, மிடுக்கான நடிப்பால் மிரட்டவும் செய்கிறார்.

 

இளையராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காதல் கதைக்கு ஏற்றபடி மென்மையாக பயணித்திருக்கிறது.

 

வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவில் கதைக்களம் அழகாகவும், கதாபாத்திரங்களின் உணர்வுகள் அழுத்தமாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது.

 

சுசீந்திரனின் எளிமையான காதல் கதையை வலிமையாக சொல்வதற்காக ஆணவப் படுகொலையை திரைக்கதையில் சேர்த்திருக்கும் இயக்குநர் மனோஜ் கே.பாரதிராஜா, அதை புதிய வழியில் சொல்லி ரசிகர்களின் புருவத்தை உயர்த்த செய்திருக்கிறார்.

 

பள்ளி பருவத்தில் வரும் காதலை வைத்துக்கொண்டு, வழக்கமான பாணியில் திரைக்கதை மற்றும் காட்சிகளை நகர்த்தி செல்வது படத்திற்கு சற்று பலவீனமாக இருந்தாலும், படத்தில் வரும் திடீர் திருப்பமும், அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்களும் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறது.

 

நடிகர்களிடம் வேலை வாங்கிய விதம், காதல் காட்சிகளை கையாண்ட விதம், நாயகியின் தாத்தாவின் மனதுக்குள் ஒளிந்திருக்கும் சாதி வெறி, அதை வெளிப்படுத்தும் அந்த ஒரு வார்த்தை, போன்ற விசயங்களை மிக நேர்த்தியாக கையாண்டிருக்கும் மனோஜ் கே.பாரதிராஜா, இயக்குநராக வெற்றி பெற்றிருக்கிறார்.

 

மொத்தத்தில், இந்த ‘மார்கழி திங்கள்’ காதலர்களுக்கான படமாக மட்டும் இன்றி சமூகத்திற்கான பாடமாகவும் இருக்கிறது.

 

ரேட்டிங் 3/5