’மாஸ்டர்’ விமர்சனம்
Casting : Vijay, Vijay Sethupathi, Malavika Mohanan, Arjun Dass, Santhanu, Nazar
Directed By : Logesh Kanagaraj
Music By : Anirudh
Produced By : XB Film Creators
சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசியராக இருக்கு விஜய், சூழ்நிலை காரணமாக நாகர்கோவிலில் இருக்கும் சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு ஆசிரியராக செல்ல நேரிடுகிறது. அவர் அங்கு சென்றதும் அப்பள்ளியில் நடக்கும் கொடுமைகளை எதிர்ப்பவர், அதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடித்து காவு வாங்குவது தான் ‘மாஸ்டர்’ படத்தின் கதை.
மாஸ் ஹீரோவாக இருந்தாலும், கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்க முயற்சித்து வரும் விஜய்க்கு ஜேடி என்ற கதாப்பாத்திரம் கச்சிதமாக பொருந்துவதோடு, ஹீரோயிஷத்தை அடக்கி வாசித்து நடித்திருக்கிறார். எந்த நேரமும் போதையில் இருப்பவராக முதல் பாதி முழுவதும் அசால்டாக நடித்திருக்கும் விஜய், இரண்டாம் பாதியில் அதிரடி அவதாரம் எடுப்பதோடு, பல இடங்களில் தனது ரெகுலர் நடிப்பையும் தாண்டிய ஒரு நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
பலமான வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, பல இடங்களில் சும்மா இருந்தாலும், தனது கதாப்பாத்திரத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க பெரிதும் மெனக்கெட்டிருக்கிறார். விஜயுடனான காட்சிகளில் மிக சாதாரணமாக நடித்திருந்தாலும், சில இடங்களில் விஜயையே முந்திவிடுகிறார்.
படத்தின் கதாநாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனனுக்கு வேலையே இல்லை. ஆறுதலுக்காக ஒரு காதல் பாடல் கூட கொடுக்காமல் அவரை ஓரம் கட்டியிருக்கும் இயக்குநர் அவரது கதாப்பாத்திரத்தையே தூக்கியிருக்கலாம்.
நாசர், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, ஸ்ரீமன், சாந்தனு பாக்யராஜ், கெளரி கிஷன் என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும், அருஜுன் தாஸுக்கு மட்டுமே முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. மற்றவர்கள் மின்னல் போல வந்து போகிறார்கள்.
கல்லூரி பேராசிரியராக இருக்கும் விஜய், எந்த நேரமும் மது போதையில் இருப்பதும், பல நேரங்களில் தன்னை அறியாமல் உறங்குவதும், பிறகு யாராவது அவரை எழுப்பி விடுவதும், என்று பெரும் போதை ஆசாமியாக அவர் நடித்திருப்பதை அவரது ரசிகர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றாலும், அந்த போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகளை அவரே விவரித்து, அதை கைவிடுவது ஆறுதல்.
தனது முதல் படத்தால் சிறந்த திரைக்கதையாசிரியர் மற்றும் இயக்குநராக அறியப்பட்ட லோகேஷ் கனகராஜ், இந்த படத்தில் இரண்டு பெரிய நடிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் திரைக்கதை அமைத்திருக்கிறார். அதன் விளைவு பல இடங்களில் படம் நம்மை சலிப்படைய செய்கிறது.
பாடல்கள் மற்றும் பின்னணி இசை என இரண்டுக்கும் அனிருத் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. “வாத்தி கம்மிங்...” பாடலையும், அதன் பீஜியத்தையும் வைத்தே முழு படத்தையும் ஒப்பேற்றியிருக்கிறார். விஜய் படங்கள் என்றாலே பாடல்கள் முக்கியத்துவம் பெரும் என்பதை மனுஷன் மறந்துவிட்டார் போல.
சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது. இரவு நேரக் காட்சிகளில் அவரது கேமரா கூட கதை சொல்கிறது. படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்தும், அதை செய்யவில்லை. படத்தின் மிகப்பெரிய குறை நீளம் தான். அதை தாராளமாக குறைக்க கூடிய வாய்ப்பு இருந்தும் அதை செய்யாதது படத்தின் மிகப்பெரிய மைனஸ்.
குடிப்பதற்கான காரணமாக விஜய் செல்லும் திரைப்பட காதல் கதைகளும், அவரது ரியாக்ஷனும் திரையரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. அதிலும், ’’காதல் கோட்டை’ பட கதையை சொல்லும் போது, “ராஜஸ்தான்ல சுவட்டர் எதற்கு” என்று கேட்கும் இடம் ஆரவாரம்.
லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், பொன் பார்த்திபன் என மூன்று பேர் திரைக்கதை எழுதியும் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை. குறிப்பாக விஜயை விஜயாக காட்டாமல் அவரது ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார்கள். அதிலும், விஜயின் அறிமுக காட்சியில், அவரது எண்ட்ரியை எப்படி காட்ட வேண்டும் என்பதில் இயக்குநரும் அவரது குழுவினரும் பெரும் குழப்பமடைந்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது.
விஜய் சேதுபதியை பயங்கரமான வில்லனாக காட்டுவதற்காக வைக்கப்பட்ட காட்சிகள் திணிக்கப்பட்ட காட்சிகளாக இருப்பதோடு, விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் சந்திப்புக்கு முன் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சியும் எடுபடாமல் போகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டிய பல விஷயங்களை நடிகர்களுக்காக விரிவாக சொல்லியிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாப்பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார்.
படத்தில் இருக்கும் பல குறைகளையும் தாண்டி படத்தை ரசிக்க முட்கிறது என்றால், அது விஜய் மற்றும் விஜய் சேதுபதி என்ற நடிகர்களால் மட்டுமே.
ரேட்டிங் 2.5./5