Aug 02, 2024 07:46 PM

’மழை பிடிக்காத மனிதன்’ திரைப்பட விமர்சனம்

3851cfdfaa37b108e4106ec731977c03.jpg

Casting : Vijay Antony, Megha Akash, Sarathkumar, Sathyaraj, Dhananjaya, Murali Sharma, Saranya Ponvannan, Surender Thakur, Thalaivasal Vijay, Pruthvi Ambaar

Directed By : SD Vijay Milton

Music By : Vijay Antony and Roy

Produced By : Kamal Bohra, Pankaj Bohra, Lalitha Dhananjayan, B. Pradeep, Vikram Kumar. S

 

இந்திய ராணுவத்தின் ரகசிய படையில் பணியாற்றும் விஜய் ஆண்டனி, உடன் பணியாற்றும் நண்பரின் தங்கையை காதலித்து திருமணம் செய்துக்கொள்கிறார். அவரை கொலை செய்ய துரத்தும் முன்னாள் எதிரியின் தாக்குதலில் மனைவியோடு அவரும் இறந்து விட்டார் என்று நம்பப்படுகிறது.  ஆனால், உயிருக்கு போராடும் அவரை காப்பாற்றும் நண்பர், மீண்டும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதி, இறந்தவர் இறந்ததாகவே இருக்கட்டும் என்று நினைத்து, அவரை யாருக்கும் தெரியாமல் அந்தமானுக்கு அழைத்துச் செல்கிறார்.

 

புதிய இடத்திற்கு வரும் விஜய் ஆண்டனிக்கு புதிய உறவுகள் கிடைக்க, அவர்கள் மூலம் புதிய பிரச்சனைகளும் வருகிறது. அந்த பிரச்சனைகளில் இருந்து அவர் விடுபட்டாரா?, அவரை தேடும் எதிரிகளிடம் பிடிபட்டாரா? என்பதை விஜய் ஆண்டனியின் முந்தைய படத்தின் தொடர்ச்சியாக சொல்வதே ‘மழை பிடிக்காத மனிதன்’.

 

தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டியிருக்கும் விஜய் ஆண்டனி, ஆக்‌ஷனில் அதிரடியையும், நடிப்பில் நிதானத்தையும் வெளிப்படுத்தி மாஸ் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுகிறார். எதில் அசத்தினாலும் காதலில் மட்டும் சற்று சொதப்பியிருப்பவர், ஒரு கட்டத்தில் காதலே வேண்டாம் என்று ஒதுங்கிப்போய் கதையோடு ஒட்டாமல் போய்விடுகிறார். பிறகு மீண்டும் ஆக்‌ஷன் மூலம் கதையில் இணைந்துக்கொண்டு பின்னி எடுத்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் மேகா ஆகாஷுக்கு நாயகன் ஜோடி  இல்லை என்பது அவரை மட்டும் அல்ல ரசிகர்களையும் சோர்வடைய வைத்துவிடுகிறது. அதனால் தான், விஜய் ஆண்டனிக்கு போட்டியாக அவரும் ரொம்ப மெதுவாக, அனைத்து வசனங்களுக்கும் ஒரே விதமான ரியாக்‌ஷன் கொடுத்து ரசிகர்களை மேலும் மேலும் சோர்வடைய வைக்கிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் டாலி தனன்ஜெயா, போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் முரளி சர்மா ஆகியோருடன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சரத்குமார் மற்றும் சத்யராஜ் ஆகியோரின் அனுபவமான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், சுரேந்தர் தாக்கூர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

 

விஜய் ஆண்டனி மற்றும் ராய் ஆகியோரின் இசையில் பாடல்கள் ஹிட் ரகங்கள். பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளுக்கு ஏற்றபடி அமைந்திருக்கிறது.

 

விஜய் மில்டனின் ஒளிப்பதிவும், பிரவீன் கே.எல்-இன் படத்தொகுப்பும் படத்தின் தரத்தை பல மடங்கு அதிகரிக்கச் செய்திருக்கிறது.

 

ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்கியிருக்கும் எஸ்.டி.விஜய் மில்டன், விஜய் ஆண்டனியை அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக மட்டும் இன்றி காதல் நாயகனாகவும் காட்ட முயற்சித்திருக்கிறார். அதில் ஒன்று ரொம்ப கஷ்ட்டம் என்பதை புரிந்துக்கொண்டு தான் மற்றொரு கதாபாத்திரத்தை காதலுக்கு பயன்படுத்திவிட்டு, விஜய் ஆண்டனியை ஒன்லி ஆக்‌ஷன் ஹீரோவாக காண்பித்திருக்கிறார்.

 

விஜய் ஆண்டனிக்கு மட்டும் இன்றி ரசிகர்களுக்கும் புதுவிதமான அனுபவத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் விஜய் மில்டன், நாயகனுக்கு மழை பிடிக்காமல் போவதற்கான காரணமாக சொன்ன விசயத்தை தான் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால், அதே மழையின் போது ஹீரோ மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதும், அதை தொடர்ந்து இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகள் அந்த விசயத்தை மறந்து படத்தை ரசிக்க வைக்கிறது.

 

விஜய் ஆண்டனியின் முந்தைய படத்தின் தொடர்ச்சியாக இந்த படத்தின் கதையை ஆரம்பித்து, பிறகு வேறு ஒரு களத்தில் கதையை பயணிக்க வைத்திருக்கும் இயக்குநர் விஜய் மில்டன், ”கெட்டவன கொல்ல கூடாது, கெட்டத தான் அழிக்கணும்” என்ற மெசஜோடு படத்தை முடிக்காமல் அடுத்த பாகத்திற்கு அடித்தளம் அமைத்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆக்‌ஷன் பட விரும்பிகளுக்கு பிடித்தவனாக இருப்பான்.

 

ரேட்டிங் 3.5/5