Apr 18, 2019 04:55 PM

‘மெஹந்தி சர்க்கஸ்’ விமர்சனம்

f2c07769b9c5d1568778691b6b372cf8.jpg

Casting : Madhampatty Rangaraj, Shweta Tripathi, RJ Vignesh, Vela Ramamoorthy, Marimuthu

Directed By : Saravanan Rajendran

Music By : Sean Roldan

Produced By : Studio Green K. E. Gnanavel Raja

 

’குக்கூ’, ‘ஜோக்கர்’ போன்ற தரமான படங்களை இயக்கிய ராஜு முருகன், கதை மற்றும் வசனத்தில், அறிமுக இயக்குநர் சரவணன் ராஜேந்திரனின் திரைக்கதை இயக்கத்தில், அறிமுக நடிகர்கள் மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திருபாதி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘மெஹந்தி சர்க்கஸ்’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

1990 களில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள பூம்பாறை கிராமத்தில் ராஜகீதம் மியூசிக்கல் என்ற பெயரில் பாடல் ஒலிப்பதிவு கடை ஒன்றை நடத்தி வரும் ஹீரோ மாதம்பட்டி ரங்கராஜ், இளையராஜாவின் பாடல்கள் மூலம் இளைஞர்களிடம் காதலை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார். அந்த ஊருக்கு சர்க்கஸ் நடத்த வரும் வட மாநில குழுவில் உள்ள ஹீரோயின் ஸ்வேதா திருபாதி மீது ரங்கராஜுக்கு காதல் ஏற்படுகிறது. ஊரார் காதலை இளையராஜாவின் பாட்டு மூலம் வளர்த்தவர், தன் காதலை சும்மா விட்டுவிடுவாரா, இந்தி பாடல் கேட்ட ஸ்வேதா திருபாதியை இளையராஜாவின் பாடல் மூலமாகவே, தனது காதல் வலையில் சிக்க வைத்துவிடுகிறார்.

 

ஹீரோவின் சாதி வெறிப்பிடித்த அப்பா ஒரு புறம், மறு புறம் பிழைக்க வந்த இடத்தில் ஹீரோவின் காதலை ஏற்க மறுக்கும் ஹீரோயின் அப்பா. இப்படி இரு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வர, அதையும் மீறி பறக்க நினைக்கும் காதலர்களை நம்பிக்கை துரோகம் ஒன்று பிரித்துவிடுவதோடு, மீண்டும் அவர்கள் சேர முடியாதபடி அந்த துரோகம் தொடர, மதுவுக்கு அடிமையாகும் ஹீரோ இளையராஜா பாட்டும், ஹீரோயினின் அப்பா சொன்ன செய்ய முடியாத விஷயத்திலும் மூழ்கிவிடுகிறார். இதற்கிடையே, 25 வருடங்களுக்கு பிறகு ஹீரோயினியின் மகள் அம்மாவின் கடைசி ஆசையை நிறவேற்ற ஹீரோவை பார்க்க பூம்பாறைக்கு வர, அதன் பிறகு நடப்பவை தான் படத்தின் மீதிக்கதை.

 

காதல் இல்லாமல் எதுவும் இல்லை, என்பதை பல திரைப்படங்கள் சொன்னாலும், சில படங்கள் மட்டுமே அதை உணர்வுப்பூர்வமாக சொல்வதோடு, ரசிகர்களின் உள்மனதுக்குள் இருக்கும் சுகமான காதல் நினைவுகளையும், வலி நிறைந்த அனுபவங்களையும் தட்டி எழுப்பும் வகையில் சொல்கின்றன. அப்படியான படங்களின் வரிசையில் இந்த படத்திற்கு நிச்சயம் இடம் உண்டு.

 

Mehandi Circus Review

 

இளையராஜாவின் பாடல்களுக்கும், காதலுக்கும் எந்த அளவுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதை, அவரது சில பாடல்களோடும், அழகியலான காட்சிகளோடும் இயக்குநர் சரவணன் ராஜேந்திரன் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

 

ஹீரோவாக நடித்திருக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கு இது தான் முதல் படம் என்றாலும், அது தெரியாதவாறு இயல்பாக நடித்திருப்பவர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார். காதலின் சுகத்தையும், வலியையும் தனது எளிமையான நடிப்பின் மூலமாகவே வெளிப்படுத்தியிருப்பவர், பல காட்சிகளில் தனது கண்களினாலேயே நடித்திருக்கிறார். தொடர்ந்து நல்ல கதைகளையும், சினிமாவுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் தனக்கு தெரியும் என்பதை நிரூபிக்கும் படங்களையும் தேர்வு செய்து நடித்தால், மாதம்பட்டி ரங்கராஜ் நிச்சயம் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராகிவிடுவார்.

 

ஹீரோயின் ஸ்வேதா திருபாதி, வட மாநில பெண் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, ஹிந்தி கலந்த தமிழ் பேசியே நம்மை கவர்ந்துவிடுகிறார்.

 

ஹீரோவின் அப்பாவாக நடித்திருக்கும் மாரிமுத்து எப்போதும் போல தனது வேலையை சரியாக செய்திருக்கிறார். பெரும்பாலும் நேட்டிவிட்டி வில்லனாக மிரட்டும் வேலராமமூர்த்தி, வித்தியாசமான வேடத்தில், விபரீதமாக நடித்து மிரட்டுகிறார். அதிகமாக பேசினாலும், பெருஷா கவனிக்கப்படாமல் இருந்த ஆர்.ஜே.விக்னேஷுக்கு நல்ல ஒரு வேடத்தை கொடுத்து, ரசிகர்கள் கவனத்திற்கு இயக்குநர் கொண்டு சென்றிருக்கிறார்.

 

ஹீரோயினின் அப்பாவாக வரும் சன்னி சார்லஸ் மற்றும் காதல் வில்லன் அன்கூர் விகால் உள்ளிட்ட படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும், அவர்களது நடிப்பும் இயல்பாக இருப்பதோடு, நம்மை கதைக்குள் ஈர்க்கவும் செய்துவிடுகிறது.

 

90 களில் இளையராஜாவின் பாடல்கள் இல்லாமல் காதல் இல்லை என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் சரவணன் ராஜேந்திரனின் திரைக்கதைக்கும், காட்சிகளுக்கும், குட்டி இளையராஜவாகவே இசையமைப்பாளர்  ஷான் ரோல்டன் உயிர் கொடுத்திருக்கிறார்.

 

“கோடி அருவி..”, “வெள்ளாட்டு கண் அழகி...”, ”வெயில் மழையே...” ஆகிய பாடல்களை திரும்ப திரும்ப கேட்க வைக்கும் ஷான் ரோல்டன், பின்னணி இசையின் மூலமாகவும் நம்மை வருடிச் செல்கிறார். இளையராஜாவின் பாடல்களை வைத்து காதலை சொல்லியிருக்கும் கதைக்களத்தில், தனது இசையையும்  கச்சிதமாக பயணிக்க வைத்திருக்கும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. பாடலாசிரியர் யுகபாரதியின் எளிமையான பாடல் வரிகள் அத்தனையும் இனிமை.

 

வட மாநிலத்தில் வரண்ட பகுதியையும், தென் மாநிலத்தின் குளிர்ச்சியான இயற்கை எழில் நிறைந்த பகுதியையும் நமது கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வக்குமார்.எஸ்.கே. 

 

காதலை கையாளாமல் எந்த திரைப்படங்களும் இல்லை என்றாலும், அந்த காதலை கையாண்ட விதத்தில் சில படங்கள் மட்டுமே ரசிகர்களின் மனதிற்குள் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துக் கொள்கிறது. அப்படிப்பட்ட வகையில் தான் இப்படத்தை இயக்குநர் சரவண ராஜேந்திரன் கையாண்டிருக்கிறார்.

 

கதையின் சூழலுக்கு ஏற்றவாறு காட்சிகளையும் இதமாக வடிவமைத்திருப்பவர், காதல்பிரச்சினையையும், காதலர்களின் வலியையும் கூட ஆக்ரோஷமாக கையாளாமல் ரொம்ப அழகியலோடு கையாண்டு ரசிக்க வைக்கிறார்.

 

Mehandi Circus Review

 

”தாலி கட்றவன் புருஷன் இல்ல, மனசுக்குள்ள இருக்குறவன் தான் புருஷன்” என்று காதல் வசனங்கள் மூலம் கைதட்டல் வாங்கும் வசனகர்த்தா ராஜு முருகன், சாதி பிரிவினை பற்றியும், மனிதம் மற்றும் அரசியல் பற்றியும் பேசி வசனம் மூலம் படத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறார்.

 

காதல், பிரச்சினை, காதல் தோல்வி என்று பல படங்களில் பார்த்தவைகள் தானே, என்றாலும் கூட அதை சொல்லிய விதமும், குறிப்பாக படத்தின் இறுதிக் காட்சி, காவியமாக அமைந்த காதல் படங்களின் பட்டியலில் இப்படத்தையும் இடம்பெற செய்துவிடுகிறது.

 

இப்படி தான் படம் முடியும், என்று எதிர்பார்த்த ரசிகர்களை, எதிர்ப்பார்க்காத ஒரு முடிவை சொல்லி,  ஒட்டு மொத்த காதலர்களையும் இயக்குநர் சரவண ராஜேந்திரன் கொண்டாட வைத்துவிடுகிறார்.

 

மொத்தத்தில், இந்த ‘மெஹந்தி சர்க்கஸ்’ மற்றவர்களுக்கு பொழுதுபோக்காக இருந்தாலும், காதலர்களுக்கு பொக்கிஷமே.

 

ரேட்டிங் 3.5 / 5