’மெய்யழகன்’ திரைப்பட விமர்சனம்
Casting : Karthi, Aravind Swamy, Raj Kiran, Sri Divya, Swati Konde, Devadarsini, Jayaprakash, Sriranjani, Ilavarasu, Karunakaran, Saran Shakthi, Rachel Rebecca, Antony, Rajsekar Pandian, Indumathy
Directed By : C.Prem Kumar
Music By : Govind Vasantha
Produced By : 2D Entertainment - Jyotika and Suriya
சொந்தங்களின் துரோகத்தால் சொத்தை இழந்து இரவோடு இரவாக தஞ்சாவூரை விட்டுச் சென்று, சென்னையில் குடியேறும் அரவிந்த்சாமியின் குடும்பம் 20 வருடங்களாக சொந்த ஊர் மற்றும் சொந்தங்களின் எந்தவித தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். சித்தப்பா மகளின் திருமணத்திற்கு போக வேண்டிய சூழல் ஏற்பட, குடும்பத்தின் சார்பாக அரவிந்த்சாமி தஞ்சாவூர் செல்ல நேரிடுகிறது. மனது நிறைய தங்கை மீது பாசம் இருந்தாலும், உறவினர்களின் துரோகத்தால் வேண்டா வெறுப்பாக திருமணத்திற்கு செல்லும் அரவிந்த்சாமிக்கு, உறவினர் கார்த்தி அறிமுகமாகி, அவரிடம் அன்பு பொழிகிறார். கார்த்தி எந்தவிதத்தில் உறவு, அவர் பெயர் என்ன? என்பது கூட தெரியாமல், தெரிந்தது போல் அவருடன் பழகும் அரவிந்த்சாமி, கார்த்தியின் மூலமாக தன்னைப் பற்றியும், உறவுகளின் உண்ணதத்தை பற்றியும் தெரிந்துக்கொள்ள நேரிடும் பயணம் தான் ‘மெய்யழகன்’.
’96’ திரைப்படத்தில் ஒரு இரவில் காதலர்களை நெகிழச் செய்த இயக்குநர் பிரேம்குமார், இதில் உறவுகளின் மேன்மை பற்றியும், மனிதம் பற்றியும் பேசி அனைத்து தரப்பினரையும் நெகிழச் செய்திருப்பதோடு, சொந்த ஊரை விட்டு விலகியவர்களை கண்கலங்க செய்திருக்கிறார்.
டெல்டா இளைஞராக நடித்திருக்கும் கார்த்தி, நடிப்பு, பேச்சு, உடல் மொழி, வெகுளித்தனம், பாசம் என அனைத்து உனர்வுகளையும் மிக அழகாக வெளிக்காட்டி மெய்யழயகன் என்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். நகரமாக இருந்தாலும் சரி கிராமமாக இருந்தாலும் சரி, அதற்கான தோற்றத்தில் தன்னை கச்சிதமாக பொருத்திக்கொள்ளும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மூலம் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாக மக்கள் மனதில் மிக எளிதாக நுழைந்து விடுவார், அப்படி தான் மெய்யழகன் என்ற இளைஞராக பசை போட்டு ஒட்டிக்கொள்பவர், தனது நடிப்பு மூலமாக ரசிகர்களை பல இடங்களில் சிரிக்க வைத்து கண்கலங்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.
கார்த்திக்கு இணையான கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும் அருள்மொழி என்ற வேடத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார். சொந்த ஊர் மீது இருக்கும் ஈர்ப்பும் ,ஏக்கமும் தன் மனதில் எந்த அளவுக்கு இருக்கிறது, என்பதை தன் கண்கள் மூலமாக வெளிக்காட்டுபவர், கார்த்தியிடம் சொல்லாமல் அவரை விட்டு விலகும் காட்சிகளில் நடிப்பில் தஞ்சை கோபூரம் போல் உயர்ந்து நிற்கிறார்.
கார்த்தியின் மனைவியாக நடித்த ஸ்ரீ திவ்யா, அரவிந்த்சாமியின் மனைவியாக நடித்த தேவதர்ஷினி, ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ், இளவரசு, கருணாகரன், ஸ்ரீரஞ்சனி என பிரபல நட்சத்திரங்கள் பலர் இருந்தாலும் அவர்களுக்கான வாய்ப்பு என்னவோ குறைவு தான். ஆனால், அதை எந்தவித குறையும் இன்றி செய்து மக்கள் மனதில் நின்றுவிடுகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜின் கேமரா கதைக்களத்தின் அழகை மட்டும் இன்றி கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது. குறிபாக மெய்யழகன் மற்றும் அருள்மொழி கதாபாத்திரங்களின் மகிழ்ச்சி, சோகம், நெகிழ்ச்சி ஆகிய அனைத்து உணர்வுகளும் பார்வையாளர்களையும் தொற்றிக்கொள்ளும் விதத்தில் மகேந்திரன் ஜெயராஜின் கேமரா உணர்வுகளை காட்சிப்படுத்துவதில் அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி மென்மையாக பயணித்திருக்கிறது. இளையராஜா தன்னை சாடினாலும் தான் அவரது தீவிர ரசிகன் என்பதை கோவிந்த வசந்தா இந்த படத்திலும் நீரூபித்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ஆர்.கோவிந்தராஜ், இயக்குநரை காட்டிலும் காட்சிகளை அதிகம் ரசித்திருக்கிறார் என்பது காட்சிகளின் நீளத்தை பார்க்கும் போதே தெரிகிறது. இயக்குநரின் கற்பனை எவ்வளவு நீளமாக இருந்தாலும், படம் பார்க்கும் பார்வையாளர்களின் பக்கம் இருந்து அதை பார்க்காமல், இயக்குநர் பக்கம் நின்று அவர் பார்த்திருப்பது படத்திற்கு சில இடங்களில் பலவீனமாக அமைந்திருக்கிறது.
இயக்குநர் சி.பிரேம்குமார் ஒரு இரவு பயணத்தின் மூலம் உறவுகளையும், உணர்வுகளையும் மக்களிடம் கடத்தும் கதைக்கு திரைக்கதை மற்றும் காட்சிகள் அமைத்த விதம் மிக மென்மையாக இருப்பதோடு, ரசிகர்களை இளைபாற வைப்பது போல் இருக்கிறது. ஆனால், அதில் திடீரென்று தமிழர்களின் வரலாறு, வீரம், ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, ஈழத்தமிழர்கள் படுகொலை என்று சமூக கருத்துகளை பேசுவது பாராட்டுக்குரியதாக இருந்தாலும், அவை படத்துடன் ஒட்டாமல் பயணித்திருக்கிறது.
கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரது நடிப்பு மற்றும் திரை இருப்பு பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்திருப்பதோடு, சிரிக்க வைத்து ரசிக்க வைக்கவும் செய்கிறது. ஆனால், அவை படம் முழுவதும் வராமல் ஆங்காங்கே வருவதாலும், இருவருக்குமான உரையாடல் வேறு தலைப்புகளை நோக்கி செல்வதாலும் சில பார்வையாளர்கள் சற்று ஏமாற்றம் அடையவும் செய்கிறார்கள்.
இருவரை மட்டுமே வைத்துக்கொண்டு இயக்குநர் சி.பிரேம்குமார் கையாண்டிருக்கும் உணர்வுப்பூர்வமான திரைக்கதை பார்வையாளர்கள் மனதுக்கு நெருக்கமாக பயணித்தாலும், சில காட்சிகளின் நீளம் பார்வையாளர்களுக்கு இருக்கமான மனநிலையை ஏற்படுத்தி விடுகிறது. அந்த நீளமான காட்சிகளை சற்று பொருத்துக்கொள்பவர்கள் நிச்சயம் படத்துடன் ஒன்றிவுடுவதோடு, கொண்டாடவும் செய்வார்கள்.
மொத்தத்தில், ‘மெய்யழகன்’ மனதுக்கு நெருக்கமானவன்.
ரேட்டிங் 3.8/5