Jul 22, 2022 05:45 AM

‘மீம் பாய்ஸ்’ இணையதொடர் விமர்சனம்

f8fdc1f1a5ac5d81d218bdb014312a5d.jpg

Casting : Aditya Bhaskar, Namrata, Jayant, Siddharth, Badava Gopi, Latha Venkatraman, Sri Ganesh, Nikhil Nai

Directed By : Arun Gousik

Music By : Gopal Rao

Produced By : Anurak Srivatsava and Ruchir Joshi

 

ரைன்சைன் நிறுவனம் சார்பில் அனுராக் ஸ்ரீவட்சவா, ருச்சிகர் ஜோஸி தயாரிப்பில், அருண் கெளசிக் இயக்கத்தில் சோனி லிவ் ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இணைய தொடர் ‘மீம் பாய்ஸ்’. 8 பாகங்களை கொண்ட இந்த தொடர் எப்படி இருக்கிறது, என்று விமர்சனத்தை பார்ப்போம்.

 

ஒரே கல்லூரியில் படிக்கும் ஆதித்யா பாஸ்கர், நம்ரதா, ஜெயந்த் மற்றும் சித்தார்த் ஆகியோர் தங்களுக்கு பிடித்த துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார்கள். ஆனால், இவர்களது பெற்றோர் இவர்களுடைய எண்ணங்களை புரிந்துக்கொள்ளாமல், டிகிரி, குடும்ப தொழில், நல்ல வேலை, கல்யாணம் என்று வழக்கமான வாழ்க்கை வட்டத்திற்குள் இவர்களை தள்ள நினைக்கிறார்கள். இந்த நேரத்தில் மிகப்பெரிய அளவில் மீம்ஸ் போட்டி ஒன்று நடத்தப்படுகிறது, இந்த போட்டியில் மீம்ஸ் பாய்ஸ் என்ற பெயரில் பங்கேற்கும் இந்த நான்கு பேரும் வித்தியாசமான மீம்ஸ்களை உருவாக்க முடிவு செய்கிறார்கள்.

 

அதன்படி தங்களது கல்லூரியில் இருக்கும் குறைபாடுகளை மீம்ஸ்கள் மூலம் நகைச்சுவையாக சுட்டிக்காட்டுகிறார்கள். அந்த மீம்ஸ்கள் வைரலாக, அதை தடுக்க கல்லூரி முதல்வரான குரு சோமசுந்தரம் முயற்சி செய்வதோடு, மீம் பாய்ஸ் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதே சமயம், குரு சோமசுந்தரத்திற்கு ஆட்டம் காட்டும் மீம் பாய்ஸ் தொடர்ந்து தங்களது அதிரடி மீம்ஸ்கள் மூலம் அவருக்கு பல அதிர்ச்சிகளைக் கொடுக்கிறார்கள். இறுதியில் மீம் பாய்ஸ் யார்? என்று குரு சோமசுந்தரம் கண்டுபிடித்தாரா? இல்லையா?, மீம்ஸ் போட்டியில் மீம் பாய்ஸ் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதை நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்வது தான் ‘மீம் பாய்ஸ்’ தொடரின் மீதிக்கதை.

 

முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்கும் தொடர் என்றாலும், வகுப்புகளில் மாணவர்கள் செய்யும் சேட்டை, காதல், சக மாணவர்களிடையே ஏற்படும் மோதல் என்று வழக்கமான பாதையில் பயணிக்காமல், வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்ட திரைக்கதையும், நகைச்சுவை காட்சிகளும் முழு தொடரையும் ரசிக்க வைக்கிறது.

 

கல்லூரி மாணவர்களாக முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதித்யா பாஸ்கர், நம்ரதா, ஜெயந்த், சித்தார்த் ஆகிய நான்கு பேரும் இயல்பாக நடித்திருப்பதோடு, உண்மையாகவே ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்களைப் போல வலம் வருகிறார்கள். இந்த நாள்வர்க்குள் இருக்கும் கெமிஸ்ட்ரியால், அவர்கள் வரும் அனைத்து காட்சிகளும் சிரிக்க வைக்கிறது, ரசிக்கவும் வைக்கிறது.

 

கல்லூரி முதல்வராக டீன் நாராயணன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் குரு சோமசுந்தரம், எப்போதும் போல் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஷ் பெறுகிறார். மீம்ஸ் போடும் மாணவர்களை கண்டுபிடிக்க அவர் காட்டும் தீவிரம், கல்லூரி மாணவர்களிடம் காட்டும் கண்டிப்பு, கல்லூரி தலைவரிடம் போனில் திட்டு வாங்குவது என அனைத்து காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கும் படவா கோபி, தொடர் முழுவதும் வரும் முக்கிய கதாப்பாத்திரம். தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பவர், க்ளைமாக்ஸில் வெளிப்படுத்தும் தனது மற்றொரு முகம் அதிர்ச்சியளிக்கிறது.

 

மற்ற கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் லதா வெங்கட்ராமன், ஸ்ரீகணேஷ், நிகில் ஆகியோரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருப்பதோடு, இயல்பாக நடித்து சிரிக்கவும் வைக்கிறார்கள்.

 

கோபால் ராவின் இசை கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, அளவான பின்னணி இசை மூலம் தொடர் முழுவதும் பலமாக பயணித்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி, ஒரே ஒரு லொக்கேஷனில் முழு தொடரையும் படமாக்கினாலும் எந்த ஒரு இடத்திலும் சலிப்பு ஏற்படாத வகையில் வித்தியாசமான கோணங்கள் மூலம் காட்சிக்கு காட்சி வேறுபாட்டை காட்டியிருக்கிறார்.

 

மீம் பாய்ஸ்களை குரு சோமந்துரம் எப்படி கண்டுபிடிக்கப் போகிறார்? என்ற ஒற்றை கேள்வியை வைத்துக்கொண்டு 8 பாகங்களையும் ரசிகர்கள் ஆர்வத்தோடு பார்க்கும் விதத்தில் படு நேர்த்தியாக காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ராகுல் ராஜ்.

 

ராஜீவ் ராஜாராம் மற்றும்  த்ரிஷ்யா ஆகியோரது கருவாக்கம் மற்றும் உருவாக்கத்திற்கு காட்சிகளை அமைத்து அருண் கெளசிக் இயக்கியிருக்கிறார். எளிமையான கருவாக இருந்தாலும் அதை வைத்துக்கொண்டு சுமார் 4 மணி நேரம் நம் கவனம் சிதறாதபடி முழு தொடரையும் சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்கள்.

 

மாணவர்கள் உருவாக்கும் மீம்ஸ்கள் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைப்பது ஒரு பக்கம் இருக்க, மீம் பாய்ஸை கண்டுபிடிக்க குரு சோமசுந்தரம் களத்தில் இறங்கிய உடன், ஜெட் வேகத்தில் பயணிக்கும் தொடர், அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்ப்பார்ப்போடு காட்சிக்கு காட்சி பல திருப்புமுனைகளோடு பயணிக்கிறது.

 

சாதாரண கருவாக இருந்தாலும் அதையே படு சஸ்பென்ஸாக நகர்த்தி சென்றிருக்கும் இயக்குநர் சித்தார்த் கெளசிக், வெயிட்டான திரைக்கதையோடு, லைட்டாக ஒரு மெசஜை உள்ளே வைத்து, ஒட்டு மொத்த தொடரின் மூலம் 4 மணி நேரம் எப்படி போனது என்று தெரியாதபடி செய்துவிடுகிறார்.

 

பொதுவாக இணைய தொடர்கள் என்றாலே இளைஞர்களை குறிவைத்து தான் உருவாக்கப்படுகிறது, என்ற கருத்து இருக்கிறது. ஆனால், இந்த மீம் பாய்ஸ் தொடரை இளைஞர்கள் மட்டும் அல்ல சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்றாக உட்கார்ந்து பார்க்கும் வகையில் எந்தவித ஆபாச காட்சிகளோ அல்லது வசனங்களோ இல்லாமல் மிக நேர்மையாக எடுத்திருக்கிறார்கள்.

 

மொத்தத்தில், ‘மீம் பாய்ஸ்’ 100 சதவீத சிரிப்போடு, நல்ல இணைய தொடரை பார்த்த 100 சதவீத திருப்தியையும் கொடுக்கிறது.

 

ரேட்டிங் 4/5