‘மெர்க்குரி’ விமர்சனம்
Casting : Prabhu Deva
Directed By : Karthik Subburaj
Music By : Santhosh Naraynan
Produced By : Karthik Subburaj
கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராசைகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் இனியும் ஏற்படக்கூடாது என்பதை, திரில்லர் பாணியில் சொல்லியிருக்கும் படம் தான் ‘மெர்க்குரி’.
கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் நச்சு கழிவால் பாதிக்கப்பட்டு வாய் பேச முடியாமலும், காது கேளாமலும் பாதிக்கப்பட்ட ஐந்து நண்பர்கள் தங்களது கல்லூரி விழாவில் பங்கேற்க ஒரு இடத்தில் கூடுகிறார்கள். நண்பர்கள் ஒன்றாக சேர்ந்த குஷியில், காரை எடுத்துக்கொண்டு இரவு நேரத்தில் ஊர் சுற்றும் அவர்கள், எதிர்பாரத விதமாக விபத்து ஒன்றை ஏற்படுத்த, அதில் ஒருவர் சிக்கி உயிரிழக்க, இந்த சம்பவத்தால் பயந்து போகும் அந்த ஐந்து நண்பர்களும், அந்த சடலத்தை எடுத்து பழைய பேக்டரில் ஒன்றில் புதைத்து விடுகிறார்கள். பிறகு தங்களது பொருள் அங்கு தொலைந்துவிட அதை தேடி செல்லும் ஐந்து நண்பர்களும் ஒவ்வொருவராக கொலை செய்யப்பட, அவர்களை கொலை செய்வது யார்? எதற்காக கொலை செய்யப்படுகிறார்கள், என்பது தான் ‘மெர்க்குரி’ படத்தின் கதை.
திரில்லர் படம் என்றாலே, “ஆ....ஊ....” என்ற அலறல் சத்தம் நிறைந்ததாகத் தான் இருக்கும். ஆனால், இப்படம் சத்தம் இல்லாத ஒரு திகில் படம் என்பது தான் இதன் தனி சிறப்பு.
திகில் படம் என்பதால் ரசிகர்களை பயமுறுத்துவது மட்டுமே முக்கியம், என்று யோசிக்காமல் அதன் பின்னணியில் கார்ப்பரேட் நிறுவனங்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், சுருக்கமாக சொன்னாலும் மக்கள் மனதிற்கு நெருக்கமாக இருக்கும் விதத்தில் சொல்லியிருக்கிறார்.
காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களாக நடித்துள்ள அந்த ஐந்து நண்பர்களது நடிப்பும், பிரபு தேவாவின் நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. பிரபு தேவாவை இதுவரை பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் மட்டும் அல்லாது, அவரிடம் இதுவரை பார்த்திராத நடிப்பையும் ரசிகர்களுக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் காடியிருக்கிறார்.
சந்தோஷ் நாராயணின் இசை, திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவு, விவேக் ஹர்சனின் படத்தொகுப்பு என்று தொழில்நுட்பங்கள் அனைத்தும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
ஆங்கிலப் படங்களின் தாக்கத்தை வைத்து எழுதப்பட்ட திரைக்கதைக்கு, லாஜிம் மீறாலான காட்சிகளை வைத்து இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தாலும், இப்படத்தின் மூலம் அவர் மேற்கொண்டிருக்கும் வித்தியாசமான முயற்சியும், அதனை அவர் சொல்லியிருக்கும் விதமும் வரவேற்கும்படியாகவே இருக்கிறது.
ஜெ.சுகுமார்