’மேற்குத் தொடர்ச்சி மலை’ விமர்சனம்
Casting : Antony, Gayathri Krishna, Abu Valayangulam, Aarubala, Anthony Vaathiyaar, Sudalai
Directed By : Lenin Bharathi
Music By : Ilayaraja
Produced By : Vijay Sethupathi
பொழுதுபோக்கு திரைப்படங்களையும் தாண்டி, மனிதர்களின் வாழ்க்கை பதிவாக அவ்வபோது சில திரைப்படங்கள் வெளியாவதுண்டு. அந்த வரிசையில், தேனி மாவட்ட மக்கள் மற்றும் மூணாறு பகுதிகளில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் பணியாற்றிய தமிழக மக்களின் வாழ்க்கை பதிவாக வெளியாகியிருக்கிறது இந்த ‘மேற்குத் தொடர்ச்சி மலை’.
வாகன வசதிகள் இல்லாத நிலையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த மக்கள், மூணாறு மலைகளில் இருந்து ஏலக்காய் மூட்டைகளை காடு மேடு மற்றும் விலங்குகள் என்று பாராமல் சுமந்துக் கொண்டு தேனி மாவட்டத்திற்கு வருவதும், கீழே இருந்து பல பொருட்களை மூணாறுக்கு எடுத்துச் செல்வதும் என்று அவர்களின் சுமை தூக்கும் வாழ்க்கையை பேசுவதோடு, விவசாயம் மற்றும் கம்யூனிசத்தையும் பேசும் இப்படம் சாமாணிய மக்களின் வாழ்க்கை போராட்டத்தையும், சாதூர்யமாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தையும் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறது.
கதையின் நாயகனான ஆண்டனி, தேனி மாவட்ட கிராமம் ஒன்றில் இருந்து மூணாறுக்கு சில பொருட்களை வாங்கிச் செல்வது, பிறகு அங்கிருந்து ஏலக்காய் மூட்டைகளை கீழே எடுத்துச் செல்லும் பணியை செய்துக் கொண்டிருக்கிறார். கரணம் தப்பினால் மரணம், என்ற ரீதியில் உயிக்கு உத்தரவாதம் இல்லாத, இந்த வேலையை ஹீரோ மட்டும் அல்லாமல் அவரைப் போல பலபேர் செய்கிறார்கள். கீழே இருக்கும் முதலாளிகள் மலை மீது ஏலக்காய் தோட்டத்தை வைத்திருக்க, அவர்களின் லாபத்திற்காக போக்குவரத்து வசதியில்லாத அந்த இடத்திற்கு உயிரையும் துச்சமாக எண்ணி இவர்கள் செய்யும் பணி குறித்து நாம் கேள்வி பட்டிருந்தாலும், அவர்களது வாழ்க்கையை நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் லெனின் பாரதி.
இப்படி சுமை தூக்கிக் கொண்டு மலைகள் மீது பயணிக்கும் இவர்களது வாழ்க்கையை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டிருந்தாலும், திரைக்கதையில் கம்யூனிசம் பேசியிருக்கும் இயக்குநர் சாமாணிய மக்களின் வாழ்க்கை போராட்டம் மற்றும் அவர்களது அறியாமையை பயன்படுத்தி சில சாதூர்யமாணவர்கள் தங்களது வாழ்க்கையில் அடையும் ஏற்றம் பற்றியும் அழுத்தமாக பேசியிருப்பதோடு, விவசாயமும், விவசாயியும் எப்படி அழிக்கப்படுகிறார்கள் என்பது பற்றியும் பேசியிருக்கிறார்.
ரங்கசாமி என்ற வேடத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஆண்டனி, மூணாறு பகுதியில் கம்யூனிச தலைவராக நடித்திருக்கும் அபு வலையன்குலம், ஈஸ்வரி வேடத்தில் நடித்திருக்கும் காயத்ரி கிருஷ்ணா, கங்காணியாக நடித்திருக்கும் ஆண்டனி வாத்தியார் என்று படத்தில் நடித்திருக்கும் முக்கிய கதாபாத்திரங்களும், மலையில் சுமை தூக்கும் வேலையை தனது உயிர் இருக்கும் வரை செய்வேன், என்று வீண் சவடால் பேசி, மலையிலேயே உயிர் விடும் பெரியவர், மனநிலை பாதிக்கப்பட்டு மலையில் சுற்றி திரியும் பாட்டி என படத்தில் ஒரு காட்சியில் வரும் நடிகர்கள் கூட மனதில் அழுத்தமாக பதிகின்றார்கள்.
ஒன்று இரண்டு பேரை தவிர படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்கள் என்பதை விட, அந்த மண்ணில் வாழ்பவர்களையே நடிக்க வைத்திருக்கும் இயக்குநருக்கு ஆயிரம் அப்ளாஷ் கொடுக்கலாம். சிலர் சில இடங்களில் வசனம் பேசும் போது சற்று தடுமாறுவது போல இருந்தாலும், அவர்களது தோற்றம், வசன உச்சரிப்பு ஆகியவை நம்மையும் அந்த கிராமத்திற்குள் அழைத்துச் சென்றுவிடுகிறது.
படத்தில் ஒளிப்பதிவு ஹீரோ என்றால், இசை ஹீரோயின் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இரண்டும் படத்தை நம் மனதிற்கு நெருக்கமாக சேர்த்துவிடுகிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அழகுடனுன் சேர்த்து ஆபத்தையும் பார்க்க முடிகிறது. தற்போது சில போக்குவரத்து வசதிகள் அங்கு வந்திருந்தாலும், அதன் அடையாளம் தெரியாத அளவுக்கு படத்தை பல ஆண்டுகள் பின்னோக்கி காட்டிய விதத்திலும் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் அசத்தியிருக்கிறார்.
பாடல்களாகட்டும், பின்னணி இசையாகட்டும் இரண்டையுமே கதாபாத்திரமாக்கி திரைக்கதையோடு பயணிக்க வைத்திருக்கும் இளையராஜா, பல இடங்களில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் வீசும் காற்றையே இசையாக மாற்றி நம்மை ரசிக்க வைக்கிறார். ஒரு பக்கம் கேரளா, மறுபக்கம் தமிழகம் என்று நம்மை பிரமிக்க வைக்கும் அந்த ஏரியல் வியூ காட்சியின் போது, ராஜாவின் அந்த இனிமையான இசையும் கூட சேர்ந்து விடுவதால், நம் கண்கள் திரையை விட்டு அகலாமல் இருக்கிறது.
படத்தின் ஆரம்பம் முதல் முடியும் வரை, சீட் நுணியில் இயக்குநர் நம்மை உட்கார வைத்துவிடுகிறார். மேற்கு தொடர்ச்சி மலைகளின் பிரம்மாண்டம், அதில் பயணிக்கும் மக்களின் நிலை, அவர்களது எண்ணம் போன்றவற்றை நாம் உணரும்படி காட்சிகளை வடிவமைத்திருந்தாலும், கதையின் நாயகனான ஆண்டனியின் உணர்வை வெளிப்படுத்திவதில் சற்று தடுமாறியிருக்கிறார். நிலம் வாங்குவதற்கான முயற்சியில் இறங்கி, அதில் வெற்றி பெறும் போது ஏற்படும் சம்பவத்தால் நிலைகுலைந்து போகும் ஆண்டனியின், அந்த சோகம் சட்டென்று முடிந்துவிடுவது அந்த கதாபாத்திரத்தின் மீதான ஈர்ப்பை சற்று குறைத்து விடுகிறது. அதே சமயம் மூணாறில் கம்யூனிச தலைவராக வரும் சாக்கோ வேடத்தின் வீரியமும், அதில் நடித்த அபுவின் நடிப்பும் அந்த கதாபாத்திரத்தின் மீது ஈர்ப்பை அதிகரிக்க செய்துவிடுகிறது.
இப்படி படம் முழுவதும் ஒவ்வொரு பிரேமையும் இயக்குநர் லெனின் பாரதி நம்மை கவனிக்கும்படி செய்திருக்கிறார். புது புது பூச்சி மருந்துகளாலும், விதைகளாலும் விவசாயம் எப்படி அழிந்துபோகிறது என்பதை சில காட்சிகளிலேயே நமக்கு புரிய வைக்கும் இயக்குநர், தொழில்நுட்ப முன்னேற்றம் என்ற பெயரில் விவசாய நிலங்கள் எப்படி பறிபோகிறது. அப்படி தொடர்ந்து நடந்தால் விவசாயிகளின் நிலை என்ன, என்பதையும் நறுக்கென்று சொல்லியிருக்கிறார்.
ஏழைகளின் வாழ்க்கை, விவசாயிகளின் தோல்வி, போலிகளின் முன்னேற்றம் என்று கஷ்ட்டங்களையே திரைக்கதையாக்கினாலும், அதை சொல்லிய விதத்தில் திரைக்கதையோடு சேர்ந்து உண்மையான நகைச்சுவையும் ஆங்காங்கே இழைந்தோடும்படி செய்திருக்கும் இயக்குநர் லெனின் பாரதி, போலித்தனம் இல்லாத ஒரு திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்.
இப்படி ஒரு படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் லெனின் பாரதியை பாராட்டுவதை விட கொஞ்சம் அதிகமாகவே, இப்படி ஒரு படத்தை தயாரித்த நடிகர் விஜய் சேதுபதியை பாராட்டலாம்.
மொத்தத்தில், இந்த ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைப்படமாக அல்லாமல் மக்களின் வாழ்க்கையாக இருப்பதோடு, இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு வாழ்க்கையை, மிக எளிமையாக அதே சமயம் வலிமையாகவும் சொல்லியிருக்கிறது.
ரேட்டிங் 4.5/5