Jan 12, 2024 03:13 AM

’மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்பட விமர்சனம்

2d2b3df9d4c1942d3d3ebfa84fc636e0.jpg

Casting : Vijay Sethupathi, Katrina Kaif, Kavin Babu, Radhika Sarathkumar, Sanmugarajan, Radhika Apte, Rajesh, Pari Maheshwari Sharma, Ashwin Kalshekar

Directed By : Sriram Raghavan

Music By : Pritam and BGM - Daniel B.George

Produced By : Ramesh Taurani, Sanjay Rautray, Jaya Taurani, Kewal Gar

 

துபாயில் பணியாற்றும் விஜய் சேதுபதி, பல வருடங்களுக்குப் பிறகு மும்பையில் உள்ள தனது வீட்டுக்கு வருகிறார். விடிந்தால் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் ஊரே விளக்குகளின் வெளிச்சத்தில் ஜொலித்துக் கொண்டிருக்க, விஜய் சேதுபதி ஒரு ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு தனது மகளுடன் இருக்கும் கத்ரினா கைஃப்பை சந்திக்கும் விஜய் சேதுபதி, அவரை பார்த்ததும், அவர் போகும் இடங்களுக்கு பின் தொடர்ந்து செல்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்றாக பயணிக்கிறார்கள். அறிமுகம் இல்லாத இருவரும், தங்களது வாழ்க்கைப் பற்றி பேசும் போது, கத்ரினா கைஃப் தனது கணவருடன் கருத்து வேறுபாடோடு வாழ்வதை சொல்ல, விஜய் சேதுபதி தனது காதலியின் பிரிவை பற்றி சொல்கிறார். 

 

இதற்கிடையே, கத்ரினா கைஃப் தனது மகளை தூங்க வைத்துவிட்டு, விஜய் சேதுபதியுடன் மீண்டும் வெளியே சென்றுவிட்டு, திரும்ப வீட்டுக்கு வரும்போது அவரது கணவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்த நிலையில் இருக்க, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை யூகிக்க முடியாத திருப்பங்களுடன் சொல்வது தான் ‘மெரி கிறிஸ்துமஸ்’.

 

வழக்கமான பாணியிலான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இல்லாமல் கிளாசிக் பாணியில் கதையும், காட்சிகளும் நகர்கிறது. குறிப்பாக, சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்றாலே வேகமாக இருக்க வேண்டும் என்ற பாணியை தவிர்த்துவிட்டு, மிகவும் மெதுவாக பயணிக்கும் திரைக்கதையில், காட்சிகள் அதைவிட மெதுவாக பயணித்தாலும், ஒவ்வொரு இடங்களிலும் பல குறீயிடுகளை வைத்து இயக்குநர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்.

 

குறிப்பாக, கத்ரினா கைஃப் வீட்டில் ஏராளமான த்ரில்லர் நாவல்கள் இருப்பது, ஹிட்ச்காக்கின் ‘ரெபெக்கா’ திரைப்படம் பார்ப்பது போன்ற விசயங்கள், ஒரு பெரிய சஸ்பென்ஸ் சம்பவம் அரங்கேற போவதை சுட்டிக்காட்டி, அது என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தி கதையை நகர்த்தி செல்லும் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், இரண்டாம் பாதியில் இடம்பெறும் திருப்பங்களை கூட, வேகமாக நகர்த்தி சொல்லாமல், ஒவ்வொரு காட்சியிலும் ஏதோ ஒன்று புதிதாக இருக்கும்படியான ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்திருக்கிறார். 

 

ஆல்பர்ட் ஆரோக்கியசாமி என்ற வேடத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, வழக்கம் போல் தனது இயல்பான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார். எந்த இடத்திலும் அதிகப்படியான உணர்வுகளை வெளிக்காட்டாமல் மிக சாதாரணமாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, தனது கண்களின் மூலமாகவே பயம், பதற்றம், சோகம், காதல் என பல உணர்வுகளை வெளிக்காட்டி அசத்தியிருக்கிறார். அதிலும், இறுதிக்காட்சியில் சூழ்நிலையை புரிந்துக்கொண்டு அவர் எடுக்கும் முடிவும், அந்த காட்சியில் அவர் நடித்த விதமும் கைதட்டல் சத்தத்தால் திரையரங்கையே அதிர வைக்கிறது.

 

நாயகியாக நடித்திருக்கும் கத்ரினா கைஃப் துணிச்சல் மிக்க மற்றும் அனைத்து விசயங்களையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு பயணிக்கும் பெண் வேடத்திற்கு சரியான தேர்வாக இருப்பதோடு, அந்த வேடத்தை மிக சரியாகவும் கையாண்டிருக்கிறார். 

 

கவின் பாபு, ராதிகா சரத்குமார், சண்முகராஜா, ராதிகா ஆப்தே, ராஜேஷ், குழந்தை நட்சத்திரம் பரி மகேஷ்வரி ஷர்மா, அஷ்வினி கால்சேகர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களுக்கு வேலை குறைவு என்றாலும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

 

மது நீலகண்டனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் ஓவியம் போல் இருக்கிறது. கதை இரவு நேரத்தில் பயணிப்பதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதாலும், சிவப்பு வண்ணங்களாலும், விளக்கு ஒளியாலும் காட்சிகளை அலங்கரித்து அழகு சேர்த்திருக்கிறார்.

 

ப்ரீத்தம் இசையில், யுகபாரதியின் வரிகளில் பாடல்கள் மெலோடியாக இருந்தாலும் சுமார் ரகம் தான். டேனியல் பி.ஜார்ஜின் பின்னணி இசை படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது.

 

ஒருவருடைய மர்ம மரணம், அதை சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் காட்சிகள் என்றாலும், படத்தொகுப்பாளர் பூஜா லதா சுர்தி, ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை படம் ஒரே மாதிரியான வேகத்தில் பயணிக்கும்படி காட்சிகளை தொகுத்திருக்கிறார். 

 

பிரதீப் குமார்.எஸ், அப்துல் ஜப்பார், பிரசன்னா பாலா நடராஜன், லதா கார்த்திகேயன் ஆகியோரது எழுத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமான க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். அதேபோல், படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு பொருட்களையும் திரைக்கதை ஓட்டத்திற்கும், திருப்பங்களுக்கும் பயன்படுத்திய விதம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. 

 

படத்தின் முதல் பாதி ஜனரஞ்சக ரசிகர்களுக்கானது அல்ல என்றாலும், இரண்டாம் பாதியும், காவல் நிலையத்தில் நடைபெறும் கடைசி 20 நிமிட காட்சியும் ஒட்டு மொத்த ரசிகர்களையும் சீட் நுணியில் உட்கார வைக்கும் விதத்தில் இருக்கிறது. சீட் நுணியில் உட்கார வைத்தாலும் எந்த வித ஆரவாரமும், பரபரப்பும் இல்லாமல் காட்சிகள் மிக அமைதியான முறையில் நகர்வதோடு, அந்த காட்சியில் இடம்பெறும் நட்சத்திரங்கள் வசனம் ஏதும் பேசாமல், கண்கள் மூலமாகவே தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவது, இதுவரை நாம் பார்த்திராத ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது.

 

மொத்தத்தில், ‘மெறி கிறிஸ்துமஸ்’ வித்தியாசமான படத்தை விரும்புகிறவர்களுக்கு ஏற்ற படம்.

 

ரேட்டிங் 3/5