‘மேதகு 2’ விமர்சனம்
Casting : Gowri Shankar, Nazar
Directed By : Ra.Ko.Yogendrian
Music By : Praveen Kumar
Produced By : Methagu Thiraikkalam
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மேதகு’. தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான இப்படத்தின் இரண்டாம் பாகம் தான் ‘மேதகு 2’. விடுதலை புலிகள் இயக்கம் எப்படி உருவாகி வளர்ச்சி பெற்றது என்பதை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கிறது? என்று விமர்சனத்தை பார்ப்போம்.
சிங்கள ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தால் மட்டும் போதாது ஆயுதம் மூலம் பதிலடி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யும் பிரபாகரன், சில நண்பர்களுடன் சேர்ந்து ஆயுத போரட்டத்தில் ஈடுபடுகிறார். பிறகு படிபடியாக அவர்களது போராட்டமும், போராளிகளின் எண்ணிக்கையும் எப்படி வளர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற மாபெரும் இயக்கமாக உருவெடுக்கிறார்கள் என்பதையும், அவர்களது இயக்கத்தை அழிக்க சிங்கள அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும், அதற்கு விடுதலை புலிகள் இயக்கம் எப்படி பதிலடி கொடுக்கிறது, என்பதையும் விவரிப்பது தான் ‘மேதகு 2’.
கதையின் நாயகனாக பிரபாகரன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள கெளரிசங்கர், கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருப்பதோடு அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் நாசரின் மெளனம் பல கேள்விகளை நம் மனதில் எழுப்புவதோடு, விடுதலைப் புலிகள் அமைப்பின் அமைதிக்கு பின்னணியில் மிகப்பெரிய சூறாவளி இருப்பதையும் உணர்த்துகிறது.
ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன் இயல்பான ஒளிப்பதிவு கதையை தொந்தரவு செய்யாமல் பயணிக்கிறது. தமிழர்களின் போராட்டத்தின் வீரியத்தையும், தமிழர்களின் வலியையும் படம் பார்ப்பவர்கள் உணரும் வகையில் பிரவின் குமாரின் பின்னணி இசை பயணிக்கிறது.
ஆதித்யா முத்தமிழ் மாறனின் படத்தொகுப்பு, ஜாக்குவார் தங்கம் மற்றும் விஜய் ஜாக்குவார் தங்கம் ஆகியோரது சண்டைக்காட்சிகள் கதைக்கு ஏற்றபடி இருந்தாலும் மிக சாதாரணமாக இருப்பது சற்று ஏமாற்றம் அளிக்கிறது.
வரலாற்று உண்மைகளை ஆய்வு செய்து இப்படத்தின் கதையை மேதகு திரைக்கள குழுவினர் மற்றும் சுபன் எழுதியுள்ளனர். இரா.கோ யோகேந்திரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இலங்கை மண்ணில் தமிழர்களின் உரிமையை மீட்பதற்காக உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சி, கட்டமைப்பு, ஆயுத பலம், அவர்களின் தாக்குதல் மற்றும் உலக நாடுகளின் அரசியல் தந்திரங்களை முறியடித்தல் என பல வரலாற்று சம்பவங்களை காட்சிகள் மூலம் நம் கண் முன் நிறுத்திய இயக்குநரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அதே சமயம், சர்வதேச அளவில் புகழ் பெற்ற பிரபாகரன் மற்றும் அவர் தொடர்பான அரசியல் நிகழ்வுகளை சர்வதேச தரத்தில் இல்லாமல் மிக சாதாரணமான முறையில் படமாக்கியிருப்பது மிகப்பெரிய பலவீனமாக உள்ளது.
ஒவ்வொரு சம்பவங்களின் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் மறைந்திருப்பதை இயக்குநர் மற்றும் கதை எழுதிய குழுவினர் இன்னும் விரிவாகவும், வீரியமாகவும் காட்டியிருந்தால் ‘மேதகு 2’ பல உயரங்களை தொட்டிருக்கும்.
மொத்தத்தில் ‘மேதகு 2’ வலிமை இல்லாத எளிமையான படம்.
ரேட்டிங் 3/5
குறிப்பு : வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி இந்த படம் வெளிநாட்டு திரையரங்குகளில் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. தியேட்டர்களில் படம் வெளியான சில நாட்களிலேயே ’தமிழ்ஸ் ஓடிடி’ தளத்தில் (www.tamilsott.com) இந்த படம் வெளியாக இருப்பதால், படத்தை திரையிட முடியாத இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் அரபு நாடுகள் ஆகியவற்றில் உள்ள மக்களும் இந்தப்படத்தை பார்க்க முடியும்.