‘மேயாத மான்’ விமர்சனம்
Casting : Vaibav, Priya Bhavani Sankar, Induja, Vinoth
Directed By : Rathnakumaar
Music By : Pradeep and Santhosh Narayanan
Produced By : Kaarthekeyan Santhanam
ஒன்சைடு காதல் தோல்வி பீலிங்கை, கலகலப்பாக சொல்லியிருக்கும் ஒரு ரகளையான படம் தான் இந்த ‘மேயாத மான்’.
கல்லூரியில் படிக்கும் போது ஹீரோயின் பிரியா பவானி சங்கரை ஒன்சைடாக மூன்று ஆண்டுகள் காதலிக்கும் ஹீரோ வைபவ், அவரிடம் தனது காதலை சொல்லாமலேயே இருந்துவிட, பிரியா பவானிக்கு நிச்சயதார்த்தம் நடக்கும் சமயத்தில் தற்கொலை செய்துகொள்வேன் என்று தனது நண்பர்களிடம் கூறுகிறார். அவரை காப்பாற்றுவதற்காக பிரியாவிடம் உதவி கேட்கும் நண்பர்கள், தாங்கள் எழுதி கொடுத்ததை பிரியாவை பேச சொல்ல, அதில் இருந்து பிரியா ஒரு கெட்ட பொண்ணு, என்று நினைக்கும் வைபவ், தற்கொலை முயற்சியை கைவிட்டுட்டு பொழப்பை பார்த்தாலும், அவரது முதல் காதல் மட்டும் அவரை நெஞ்சை முள்ளாக கிழித்துக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, பிரியா பவானி சங்கரின் திருமணம் தள்ளிப் போக, இந்த கேப்பில் வைபவ், பிரியாவுடன் நட்பாக பழக, பிறகு ஒன்சைடு காதல் டூ சைடு காதலாக மாறிவிடுகிறது. ஏற்கனவே நிச்சயமான பிரியா, வைபவை காதலிக்க தொடங்க அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை காமெடியாகவும், சற்று கவர்ச்சியாகவும் சொல்லி சுபம் போடுவதுதான் ‘மேயாத மான்’ படத்தின் கதை.
கதைய யாரு கேட்டா, பிட்டு பிட்டான காட்சிகளாக இருந்தாலும், அவை ரசிகர்களை குஷிப்படுத்தும் விதத்தில் இருந்தால் போதும், என்ற சமீபத்திய படங்களின் வரிசையில் தான் இந்த மேயாத மானும் உள்ளது.
ஹிரோ வைபவ், ஹீரோயின் பிரியா பவானி சங்கர், வைபவின் தங்கையாக நடித்துள்ள இந்துஜா, வைபவின் நண்பராக நடித்துள்ள விவேக் ஆகிய இந்த நான்கு நடிகர்கள் தான் ஒட்டு மொத்த படத்தையும் தூக்கி சுமந்திருக்கிறார்கள். அதிலும் வைபவ், தனக்கு கொடுத்த வேலையை 100 சதவீதம் அல்ல 200 சதவீதம் சீறும் சிறப்புமாக செய்திருக்கிறார்.
வட சென்னை வாலிபர் கதாபாத்திரமா, வைபவை கூப்பிடுங்க, என்று சொல்லும் அளவுக்கு மனுஷன் நடிப்பிலும் சரி, வசன உச்சரிப்பிலும் சரி கலக்கியிருக்கிறார். ஹீரோயின் பிரியா பவானி சங்கர் பார்ப்பதற்கு அம்சமாக இருப்பதுடன், கண்களில் ஆயிரம் வாட்ஸ் கவர்ச்சி பல்பை வேறு வைத்திருக்கிறார்.
சிவாஜி கணேசனுக்கு தங்கையாக நடிக்க வேண்டிய இந்துஜா, வைபவுக்கு தங்கையாக நடித்திருக்கிறார். 50 ரூபாய்க்கு நடிக்க சொன்னா, பொண்ணு 100 ரூபாய்க்கு நடிக்குது. எதை எடுத்தாலும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே செய்யும் இவர், தங்கை வேடம் மட்டுமல்ல ஹீரோயின் ரோலுக்கும் பொருத்தமானவராக இருக்கிறார். இதுவரை சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த வினோத் இந்த படத்தில் தனக்குள்ளும் ஒரு குணச்சித்திர நடிகர் இருப்பதை நிரூபித்துவிட்டார்.
பிரதீப் குமார் மற்றும் சந்தோஷ் நாராயணின் இசை படத்திற்கு பெரிதும் பலம் சேர்த்திருக்கிறது. அதுவும் அவ்வபோது வரும் கானா பாடல்களும், சிறு சிறு மெலொடி மெட்டுக்களும் சாதாரண காட்சிகளை கூட ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்துவிடுகிறது. வட சென்னையையும், அங்குள்ள மூளை முடுக்கு ஏரியாக்களையும் அழகாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா.
கொஞ்சம் காமெடி, கொஞ்சம் காதல், கொஞ்சம் காதல் தோல்வி, கொஞ்சம் டபுள் மீனிங் என்று அனைத்தும் கொஞ்ச கொஞ்சமாக இருந்தாலும், முழு படமாக பார்க்கும் போது, இளசுகளின் நிறைவான படமாக இருக்கும் விதத்தில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார்.
ஜெ.சுகுமார்