Aug 08, 2024 08:04 AM

’மின்மினி’ திரைப்பட விமர்சனம்

72b6aec77b87e683409d61c3e5f789d7.jpg

Casting : Praveen Kishore, Gaurav Kaalai, Esther Anil

Directed By : Halitha Shameem

Music By : Khatija Rahman

Produced By : Manoj Paramahamsa ISC , R. Murali Krishnan

 

ஊட்டியில் உள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் கெளரவ் காளை, சிறந்த கால்பந்தாட்ட வீரராக திகழ்கிறார். அதே பள்ளியில் புதிதாக சேரும் மாணவர் பிரவீன் கிஷோரை அடிக்கடி சீண்டி செல்லமாக தொல்லை கொடுக்கும் கெளரவ் காளை அவருடன் நட்பு பாராட்டவும் விரும்புகிறார். ஆனால், இதை புரிந்துக்கொள்ளாத பிரவீன் கிஷோர் அவரிடம் இருந்து தள்ளியே இருக்கிறார்.  மாணவர்கள் பயணிக்கும் பள்ளி வாகனம் விபத்தில் சிக்கிக்கொள்ள அதில் இருந்து சக மாணவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் கெளரவ் காளை, பிரவீன் கிஷோரை காப்பாற்றும் முயற்சியில் பலத்த காயமடைந்து இறந்து விடுகிறார். அவரது இறப்புக்கு பிறகு அவர் தன்னுடன் நட்பு பாராட்ட விரும்பியதை அறிந்துக்கொள்ளும் பிரவீன் கிஷோர், குற்ற உணர்ச்சியில் மூழ்கி, கெளரவ் காளையின் வாழ்க்கையை வாழ தொடங்குகிறார்.

 

கெளரவ் காளையின் உடல் உறுப்பு தானத்தால் உயிர் பிழைத்து புதிய வாழ்க்கையை தொடங்கும் எஸ்தர் அனில், கெளரவ் காளைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவரது எதிர்கால ஆசைகளை அறிந்துக்கொண்டு அதை நிறைவேற்றும் எண்ணத்தில் அவர் படித்த ஊட்டி பள்ளியில் சேருகிறார். அங்கு குற்ற உணர்ச்சியால் தனக்கே தெரியாமல் கெளரவ் காளையின் வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கும் பிரவீன் கிஷோரின் நிலையை கண்டு அதிர்ச்சியடையும் எஸ்தர் அனில், அதில் இருந்து அவரை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதற்காக அவர் பள்ளி பருவத்தையும் தாண்டிய ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. அந்த பயணம் எஸ்தர் அனிலுக்கு வெற்றி பயணமாக அமைந்ததா? என்பதே ‘மின்மினி’.

 

நடிகர், நடிகைகளின் சிறு வயது பருவத்தை முதலில் படமாக்கிவிட்டு, பின் 8 ஆண்டுகள் காத்திருந்து இளம் வயது பருவத்தில் அவர்களை நடிக்க வைத்து படமாக்கியுள்ளார் இயக்குநர் ஹலிதா சமீம். இந்திய சினிமாவில் இதுவரை யாரும் செய்திராத  இப்படி ஒரு முயற்சியில் இயக்குநர் ஹலிதா சமீம் ஈடுபட்டு வெற்றி பெற்றிருப்பது பெருமைக்குரியது என்றாலும்,  இத்தகைய முயற்சி திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறதா? என்றால், நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 

பாரி மற்றும் சபரி இடையே நடக்கும் பள்ளி காலக்கட்ட சம்பவங்கள், வழக்கமானதாக இருந்தாலும், பாரியின் நடவடிக்கைகள் பார்வையாளர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அந்த எதிர்பார்ப்புகளுக்கு அவர்களது சிறுவயது காட்சிகள் கதை சொல்லும் என்று நினைத்தால், அதை ஒரு இடத்தில் மட்டும் காட்டிவிட்டு, கதையை வேறு பக்கம் திருப்பும் இயக்குநர் ஹலித சமீம், சபரி மற்றும் பிரவீனாவுடன் பார்வையாளர்களை பயணப்பட வைக்கிறார்.

 

வாழ்க்கை பயணத்தில் நாம் எதிர்கொள்ளும் கசப்பான அஞுபவங்களை கடந்து அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டுமே தவிர, இலக்கே இல்லாமல் பயணிப்பது போல், அதையே நினைத்துக் கொண்டு இருக்க கூடாது, என்ற மெசஜை அமைதியான மற்றும் அழகான பயணத்தின் மூலம் சொல்லியிருந்தாலும், அதை நீளமான பயணமாக சொல்லியிருப்பது ரசிகர்களை சற்று சோர்வடைய வைக்கிறது.

 

சபரி கார்த்திகேயன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரவீன் கிஷோர், பாரி முகிலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கெளரவ் காளை, பிரவீனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்தர் அனில் மூன்று பேரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். பள்ளி பருவத்திலும் சரி, இளம் வயது பருவத்திலும் சரி இவர்களுடைய அளவான நடிப்பு ரசிகர்களை கவர்கிறது. குறிப்பாக இளம் வயது பருவத்தில் இடம்பெறும் பிரவீன் கிஷோர் மற்றும் எஸ்தர் அனில் ஆகியோரது பயணத்தின் வேகம் குறைவாக இருந்தாலும், இருவருடைய தேடல் காட்சிகளை ரசிக்க வைக்கிறது.

 

கதை சொல்லும் முறை, தொழில்நுட்ப ரீதியாக படத்தை உருவாக்கிய விதம் ஆகியவற்றுக்காக இயக்குநர் ஹலிதா சமீம் மற்றும் அவரது குழுவினர் கடுமையாக உழைத்திருப்பது காட்சிகளில் தெரிகிறது. குறிப்பாக இமாலய பயணத்தை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா காட்சிப்படுத்திய விதம் வியக்க வைக்கிறது. அங்கிருக்கும் ஆச்சரியமான விசயங்கள் அனைத்தையும் ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு வந்து சேர்த்திருப்பதோடு, அது குறித்தும் விளக்கியிருப்பது பயண விரும்பிகளை நிச்சயம் கொண்டாட வைக்கும்.

 

இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப அளவாக பயணப்பட்டிருக்கிறது. படத்தொகுப்பாளர் ரேய்மெண்ட் டெரிக் கிரஸ்டா இயக்குநர் சொல்ல நினைத்த கதையை விட அவர் காட்சிப்படுத்த நினைத்த லொக்கேஷன்களை ரசிகர்களிடம் நேர்த்தியாக கொண்டு சேர்த்திருக்கிறார்.

 

இயக்குநர் ஹலிதா சமீமின் வித்தியாசமான முயற்சி மற்றும் இமாலய பயணம், அந்த பயணத்தில் அவர் பேசும் தத்துவங்கள் அனைத்தும் பாராட்டுக்குரியதாக இருந்தாலும், அவர் சொன்ன விசயங்களும், வடிவமைத்த காட்சிகளும் ஒரு திரைப்படமாக ஜனரஞ்சக ரசிகர்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 

 

ஹலிதா சமீம் படம் என்றால் இப்படி தான் இருக்கும், இப்படிப்பட்ட விசயங்களை அவர் இப்படி தான் சொல்வார், என்று அறிந்து அவரது படங்களையும், அவரது கதை சொல்லலையும் கொண்டாடும் ரசிகர்கள், அவரது இந்த நீண்ட பயணத்தை நிச்சயம் ரசிப்பார்கள். 

 

மொத்தத்தில், இந்த ‘மின்மினி’ திரைப்பட விரும்பிகளுக்காக அல்ல, பயண விரும்பிகளுக்காக...

 

ரேட்டிங் 2.7/5