Jan 12, 2024 07:45 PM

’மிஷன் - சாப்டர் 1’ திரைப்பட விமர்சனம்

db297f165b2a9e6c84c3965d9365f917.jpg

Casting : Arun Vijay, Amy Jackson, Nimisha Sajayan, Abi Hassan, Bharath Bopanna, Iyal, Viraj, Jason Shah

Directed By : Vijay

Music By : GV Prakash Kumar

Produced By : Subaskaran Allirajah, M. Rajashekar, S. Swathi, Surya Vamsi Prasad, Kotha, Jeevan Kotha

 

உயிருக்கு போராடும் தனது மகளின் அறுவை சிகிச்சைக்காக லண்டன் செல்லும் அருண் விஜய், எதிர்பாரத பிரச்சனையில் சிக்கி லண்டன் சிறையில் அடைக்கப்படுகிறார். சிறைச்சாலை அதிகாரியான எமி ஜாக்சனிடம் தனது நிலையை சொல்லி புரிய வைக்க முயற்சிக்கிறார். ஆனால், அது நடக்காமல் போகிறது. இதற்கிடையே, அந்த சிறைச்சாலையில் இருக்கும் மூன்று கைதிகளை தப்பிக்க வைப்பதற்காக பயங்கரவாத குழு மிகப்பெரிய சதிதிட்டம் தீட்டி அதை செயல்படுத்துகிறது. இதனால், சிறைச்சாலையில் இருக்கும் அனைத்து கைதிகளும் அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட, அனைவரையும் தடுத்து நிறுத்தும் அருண் விஜய், அந்த மூன்று கைதிகளையும் அங்கிருந்து தப்பிக்க விடாமல் செய்துவிடுகிறார். 

 

அருண் விஜயின் நடவடிக்கையால் கோபமடையும் பயங்கரவாதக் குழுவின் தலைவன், எப்படியாவது சிறைச்சாலையில் இருக்கும் மூன்று கைதிகளை தப்பிக்க வைக்க வேண்டும் என்று தொடர் முயற்சியில் இறங்க, தான் இருக்கும் வரை அது நடக்காது, என்று கூறி களத்தில் இறங்கும் அருண் விஜய் உண்மையில் யார்?, உயிருக்கு போராடும் அவரது மகள் என்ன ஆனார்? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

மகளின் உயிரை காப்பாற்ற போராடும் ஒரு எளிமையான தந்தையாக அறிமுகமாகி ரசிகர்களை ஈர்க்கும் அருண் விஜய், லண்டன் சிறைச்சாலையில் எடுக்கும் ஆக்‌ஷன் அவதாரம் பிரமிக்க வைகிறது. ஒவ்வொரு காட்சியிலும் மிக கடுமையான உழைப்பை கொடுத்திருப்பவர், பல ஆக்‌ஷன் காட்சிகளை ரியலாக செய்து அசத்தியிருக்கிறார்.

 

சிறைச்சாலை அதிகாரியாக நடித்திருக்கும் எமி ஜாக்சன், சில அதிரடி காட்சிகளில் அமர்க்களப்படுத்தினாலும், பெரும்பாலும் அருண் விஜய் செய்யும் சாகசங்களை வேடிக்கை பார்ப்பதையே வேலையாக செய்திருக்கிறார்.

 

செவிலியர் வேடத்தில் நடித்திருக்கும் நிமிஷா சஜயன் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். 

 

வில்லனாக நடித்திருக்கும் பரத் போபண்ணா, சர்தார் வேடத்தில் நடித்திருக்கும் அபி ஹாசன், விரஜ், ஜேசன் ஷா, சிறுமி இயல் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அளவான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

சந்தீப் கே.விஜயனின் ஒளிப்பதிவு இரவு நேர காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளையும் நேர்த்தியாக படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறது.

 

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் திரும்ப திரும்ப கேட்க வைக்கும் மெலோடியாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது.

 

சிறைச்சாலையை வடிவமைத்த கலை இயக்குநர் மற்றும் படத்தொகுப்பாளர் ஆண்டனி ஆகியோரது பணி படத்திற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது.

 

ஒரு சிறைச்சாலைக்குள் நடக்கும் ஆக்‌ஷன் சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு அதற்கு சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் விஜய். 

 

அருண் விஜயின் லண்டன் வருகை மற்றும் அவர் சிறைச்சாலையில் சிக்கிக்கொள்வது, மறுபக்கம் பயங்கரவாத குழுவின் சதிதிட்டம் ஆகியவை படத்தின் முதல் பாதியை எதிர்பார்ப்புடன் பயணிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் அருண் விஜய் யார்? என்பது தெரிந்தவுடன், நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் அதர பழசாக இருப்பதோடு, லாஜிக் மீறலாகவும் இருக்கிறது. இருந்தாலும், படத்தில் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகள் அனைத்து லாஜிக் ஓட்டைகளையும் அடைக்கும் அளவுக்கு மிக சிறப்பாக உள்ளது.

 

மொத்தத்தில், லாஜிக் பார்க்காமல் ஆக்‌ஷன் காட்சிகளை ரசிப்பவர்களுக்கு இந்த ‘மிஷன் - சாப்டர் 1’ படம் சரியான தேர்வு

 

ரேட்டிங் 2.8/5