‘மோசடி’ விமர்சனம்
Casting : Viju, Pallavi Dora
Directed By : K.Jegatheesan
Music By : Shajagam
Produced By : JCS Movies
பண மதிப்பிழக்கத்தின் போது நடந்த மோசடிகளை சொல்லும் இந்த ‘மோசடி’ எப்படி என்பதை பார்ப்போம்.
ஹீரோ விஜூ தனது நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு மோசடிகளை செய்து மக்களை ஏமாற்றுகிறார். பேராசை பிடித்த மனிதர்களின் முட்டாள்தனத்தை பயன்படுத்தி பல கோடிகளை ஏமாற்றும் விஜூ, ரூ.100 கோடியை சேர்க்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்ட, அவர் ரூ.100 கோடியை நெருங்கும் போது போலிசிடம் சிக்கிக்கொள்கிறார்.
போலீஸ் விசாரணையில் தனது பிளாஸ்பேக்கை சொல்லும் விஜூ, பண மதிப்பிழக்கத்தின் போது ஆளுங்கட்சி அமைச்சருக்காக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணியில் ஈடுபடுபவர், ரூ.100 கோடிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிவிடுகிறார். அப்போது அமைச்சர் அந்த பணம் விஜூவின் கையிலேயே இருக்கட்டும் என்று வீட்டுவிட, பணம் திடீரென்று காணாமல் போய்விடுகிறது. உடனே காணாமல் போன பணத்தை கேட்கும் அமைச்சர் 30 நாட்கள் விஜூவுக்கு கெடு கொடுக்கிறார்.
விஜூவின் இந்த கதையை கேட்கும் போலீஸ், அதன் பிறகு எடுத்த நடவடிக்கையும், விஜூவின் பணம் எப்படி காணாமல் போனது என்பதும் தான் படத்தின் மீதிக்கதை.
பண மதிப்பிழக்கம் அறிவித்தவுடன், அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் தங்களது பணத்தை எப்படி மாற்றினார்கள் என்பதை தைரியமாக சொல்லியிருந்தாலும் அதை அழுத்தமாக சொல்லாமல் விட்டிருக்கிறார்கள்.
ஹீரோ விஜூ புதுமுகம் என்றாலும் தன்னால் முடிந்தவரை நடித்திருக்கிறார். பலவிதமான கெட்டப்புகளில் பிறரை ஏமாற்றும் காட்சிகளில் கச்சிதமாக பொருந்துபவர், தமிழை சரியாக பேச முடியாமல் தவிக்கிறார். நாயகி பல்லவி டோரா விஜூவின் மனைவியாக ஒரு சில காட்சிகளில் வந்தாலும், தனது வேலையை சரியாக செய்திருக்கிறார். அமைச்சராக வரும் விஜயன் மற்றும் அவரது தம்பி கவனிக்க வைக்கிறார்கள்.
ஆர்.மணிகண்டனின் ஒளிப்பதிவும், ஷாஜகானின் இசையும் சுமார் ரகம் தான் என்றாலும், கதைக்கு ஏற்ப பயணிக்கிறது.
தான் சொல்ல வந்ததை நேர்த்தியாக சொல்லியிருக்கும் இயக்குநர் கே.ஜெகதீசன், பண மதிப்பிழக்கத்தின் போது பழைய ரூபாய் நோட்டுகள் எப்படி முறைகேடாக மாற்றப்பட்டது என்பதை காட்டியது சுவாரஸ்யமாகவும், விசித்திரமாகவும் இருக்கிறது. அதே சமயம், திரைக்கதையை எந்தவித விறுவிறுப்பும் இல்லாமல் நகர்த்தியிருப்பது சற்று சலிப்படைய செய்கிறது.
மொத்தத்தில், இந்த ‘மோசடி’ மோசம் என்று சொல்ல முடியாத அளவுக்கு சுமாரான படமாகவே உள்ளது.
ரேட்டிங் 2.5/5