‘மிஸ்டர் & மிஸஸ் மஹி’ (இந்தி) திரைப்பட விமர்சனம்
Casting : Rajkumar Rao, Janhvi Kapoor, Kumud Mishra, Sarina Wahab, Rajesh Sharma, Arjit Taneja, Purnendu Bhattacharya, Yamini Das
Directed By : Sharan Sharma
Music By : Aadesh Shrivastava, Vishal Mishra, Tanishk Bagchi, Jaani, Achint & Yuva, Hunny & Bunny, Dhrruv Dhalla
Produced By : karan Johar, Umesh KR Bansal, Hiroo Yash Johar, Apoorva Mehta,
தன்னால் எதுவும் முடியவில்லை, எதிலும் சாதிக்காமல் இருப்பதால் தன்னை யாரும் மதிப்பதில்லை, வெற்றி மட்டுமே மகிழ்ச்சியை கொடுக்கும், என்று எண்ணி தாழ்வு மனப்பான்மையுடன் வாழும் நாயகன் ராஜ்குமார் ராவுக்கும், மருத்துவரான நாயகி ஜான்வி கபூருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் கிரிக்கெட் விளையாட்டு மீது பேரார்வம் இருப்பது தெரிய வருவதோடு, அதன் மூலம் ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
எப்படியாவது, எதிலாவது சாதித்து வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட விட வேண்டும் என்று துடிக்கும் நாயகன் ராஜ்குமார் ராவ், தன்னால் கிரிக்கெட் விளையாட்டு வீரராக சாதிக்க முடியவில்லை என்றாலும், கிரிக்கெட்டில் ஆர்வமும், நன்றாக விளையாடவும் செய்யும் தனது மனைவிக்கு முறையான பயிற்சியளித்து அவரை சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக்கி, அதன் மூலம் சிறந்த பயிற்சியாளர் என்று தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார். அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பது தான் ‘மிஸ்டர் & மிஸஸ் மஹி’
மகேந்திர அகர்வால் என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் ராஜ்குமார் ராவ், உண்மையான மகிழ்ச்சி மற்றும் வெற்றி எதுவென்று தெரியாமல், தாழ்வு மனப்பான்மையுடன், விரக்தியாக வாழ்ந்து வரும் மனிதர்களை பிரதிபலிக்கும் வகையில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பவர் சோகம், மகிழ்ச்சி, ஏமாற்றம் என அனைத்து உணர்வுகளையும் அளவாக வெளிக்காட்டி அசத்தலாக நடித்திருக்கிறார்.
மஹிமா குப்தா என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஜான்வி கபூர், கவர்ச்சியான கதாபாத்திரங்கள் மட்டும் இன்றி, நடிக்க கூடிய கதாபாத்திரங்களையும் தன்னால் நேர்த்தியாக செய்ய முடியும் என்று நிரூபித்திருக்கிறார். நாயகனின் நேர்மைக்காக அவரை திருமணம் செய்துக்கொள்பவர், கணவர் செய்யும் அனைத்தும் தனக்காக அல்ல அவருக்காக என்று தெரிய வரும் போது, ரசிகர்களை கலங்கடிக்கும் வகையில் நடித்து கைதட்டல் பெறுகிறார்.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஷரினா வாஹப் குறைவான காட்சிகளில் வந்தாலும், உண்மையான மகிழ்ச்சி என்றால் என்ன? என்பதை நாயகனுக்கு விளக்கும் அந்த ஒரு காட்சியிலேயே ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து விடுகிறார்.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் குமுத் மிஷ்ரா, கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்திருக்கும் ராஜேஷ் சர்மா, நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் பூர்ணேந்து பட்டாச்சார்யா, அம்மாவாக நடித்திருக்கும் யாமினி தாஸ், நாயகனின் தம்பியாக நடித்திருக்கும் அர்ஜித் தனேஜா என அனைத்து நடிகர்களும் கதைக்களம் சொல்லும் கருத்துக்கு பலம் சேர்க்கும் கதாபாத்திரங்களில் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அனய் ஓ கோஸ்வாமியின் கேமரா கிரிக்கெட் விளையாட்டின் விறுவிறுப்பைக் காட்டிலும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், நாயகன், நாயகி இடையிலான காதல் மற்றும் மோதல் ஆகியவற்றின் உணர்வுகளை ரசிகர்களிடத்தில் கடத்திவதில் அதிகம் மெனக்கெட்டு, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது.
ஆதேஷ் ஸ்ரீவத்ஸவா, விஷால் மிஷ்ரா, தனிஷ்க் பக்ஜி, ஜானி, அஜிண்ட் & யுவா, ஹன்னி & ஃபண்ணி, துருவ் தல்லா, என ஆறு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளார்கள். யார் யார்க்கு என்ன பங்கு என்று தெரியவில்லை என்றாலும், படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் மென்மையாக பயணித்திருக்கிறது.
வேகமான திரைக்கதை, விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்த காட்சிகள் இல்லை என்றாலும், காட்சிக்கு காட்சி ரசிக்கும்படி படத்தொகுப்பு செய்திருக்கிறார் நிதின் பெய்ட்.
உண்மையான மகிழ்ச்சி என்றால் என்ன?, அது எதில் கிடைக்கும்? என்ற மிக எளிமையான ஒன்லைனை வைத்துக்கொண்டு, ஒரு அழகான கதையை எழுதியிருக்கிறார்கள் நிகில் மெஹ்ரோத்ரா மற்றும் சரண் சர்மா. எந்த துறையில் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றாலும், மேலும்...மேலும்...என்று தான் செல்வார்களே தவிர, அவர்கள் முழுமையான மகிழ்ச்சியுடன் வாழ்வதில்லை, என்பதோடு மகிழ்ச்சி என்பது வெற்றியில் இல்லை அது நம் மனதில் இருக்க கூடியது, என்பதை மிக எளிமையான வசனம் மற்றும் காட்சி மூலம் புரிய வைத்து படத்துடன் ரசிகர்களை ஒன்றிவிட செய்துவிடுகிறார்கள்.
சாதாரணமான கதை, வேகம் இல்லாத திரைக்கதை என்றாலும் இரண்டரை மணி நேரம் நம் கவனம் முழுவதும் திரையில் மட்டுமே இருக்கும்படி படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் சரண் சர்மா, மொழிகள் கடந்து ரசிக்க கூடிய படமாக கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘மிஸ்டர் & மிஸஸ் மஹி’ ரசிகர்களை மகிழ்விக்கும்.
ரேட்டிங் 4/5